என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை-செல்லூர் இடையே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி குழுத்தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜு முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

    சுரேஷ்(தி.மு.க.):-புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோன்.கொரோனா காலத்திலும் மக்கள் நலன் கருதி ஓயாது உழைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் நாம் அனைவரும் நடக்க வேண்டும்.

    சரபோஜி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி):- நாகை-செல்லூர் இடையே சேதமடைந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை தினந்தோறும் ஏராளமானவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும். நிர்வாக வசதிக்காக நாகை மாவட்டத்தை பிரித்தது போல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டும்.

    குமாரசாமி(தி.மு.க.):- மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி கிளையை திறக்க வேண்டும்.

    சுப்பையன்(அ.தி.மு.க.):- வேதாரண்யம் பகுதியில் உழவர் சந்தை திறக்கப்படவுள்ளது. நகர பகுதியில் உழவர் சந்தை திறப்பதை விட கிராம பகுதிகளில் திறந்தால் அனைவருக்கும் பயன்நிறைந்ததாக இருக்கும்.

    உமாமகேஸ்வரி( ஊராட்சிக்குழு தலைவர்) :- கொரோனா வைரஸ் தொற்று 3-வது அலை பரவுவதற்குள் அனைத்து உறுப்பினர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். நம்மை சுற்றியுள்ளவர்களையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுரை வழங்க வேண்டும்.

    ஊராட்சி செயலாளர் (கோவிந்தராஜூ):-உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறைக்கு அனுப்பப்படும் கோரிக்கை மனுவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
    நாகை மாவட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    வாய்மேடு:

    வாய்மேடு மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் வேதரத்தினம் முன்னிலை வகித்தார். இதில் 355 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர் வெங்கடேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல தகட்டூர் கோவிந்தன் காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர் செல்லமுத்து எழிலரசன் முன்னிலை வகித்தார்.முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வினோத், ஊராட்சி செயலாளர் கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    தலைஞாயிறை அடுத்த வாட்டாகுடி ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஜீவிதா, சுகாதார ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துணைத்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முகாமை தொடங்கி வைத்தார். இதில் கொத்தமங்கலம், அனந்தநல்லூர் பகுதிகளை சேர்ந்த 246 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவர்கள் மணிவேல், இளங்கோவன், ஊராட்சி செயலாளர் பிரேம், சுகாதார ஆய்வாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கீழ்வேளூரில் சாராயம் கடத்திய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கீழ்வேளூர் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கீழ்வேளுர் அருகே பட்டமங்கலம் சொட்டால் வண்ணம் பகுதியை சேர்ந்த ராமு மகன்கள் சபரிநாதன் (வயது 25), ஸ்டாலின் (24) என்பதும், இவர்கள் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் வர்த்தக சங்கம், கங்களாஞ்சேரி ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் வர்த்தக சங்கம், கங்களாஞ்சேரி ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.டி.எஸ்.சரவணன் முகாமை தொடங்கி வைத்தார்.இந்த முகாமை மாவட்ட கவுன்சிலர் சரபோஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் 293 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருத்துவர்கள் பாஸ்கரன், விஜய், கவுசல்யா முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் கவிதாராஜன், ஊராட்சி செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் இளஞ்செழியன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் 262 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில், ஊராட்சி மன்ற துணை தலைவர் பூமிநாதன், ஊராட்சி செயலாளர் அனிதாராணி, சுகாதார ஆய்வாளர் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார் .இதில் 349 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் மருத்துவர்கள் கவுசல்யா, விஜய், ஊராட்சி மன்ற துணை தலைவர் சுந்தர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் ஜெயசங்கர், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கீழ்வேளூரில் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் திருவாரூரில் தையல் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மகன் யுவன்சங்கர் (வயது21). நேற்று காலை வேலைக்காக தியாகராஜன் மற்றும் அவரது மகன் யுவன் சங்கருடன் திருவாரூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை தியாகராஜன் ஓட்டி சென்றார். நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் பிள்ளை தெருவாசல் பகுதியில் சென்ற போது அந்த வழியாக நாகையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தியாகராஜன், யுவன்சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், யுவன் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.தியாகராஜனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கரூர் பகுதியை சேர்ந்த கதிர்வேல் மகன் லோகநாதன் (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர் அருகே சாராயம் கடத்திய சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு நாகூர்-திட்டச்சேரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி சாராயம் இருந்தது.

    மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் குடவாசல் மெயின் ரோடு தெற்குதெருவை சேர்ந்த ராமு மகன் ராஜா (வயது 27), அதே பகுதியை சேர்ந்த மகேஷ் மகன் மணிகண்டன் (24) என்பதும், இவர்கள் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    அதைதொடர்ந்து மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்தி வந்த நாகை கோட்ட வாசல்படி நடராஜன் பிள்ளை தெருவை சேர்ந்த தமிழரசன் மகன் சபினேஷ் (20) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 மதுபானம் பாட்டில்கள் மற்றும் 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செம்பனார்கோவிலில் கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி சாலையில் இழுத்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொறையாறு:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செம்பனார்கோவிலில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்லும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை தேர்தல் பணி குழு தலைவர் ஆக்கூர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில், தினமும் உயரும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்திட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமான வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்கிட வேண்டும்.

    நபர் ஒன்றுக்கு 10 கிலோ உணவு தானியங்களை மத்திய தொகுப்பில் இருந்து இலவசமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோவிற்கு மாலை அணிவித்து கயிறு கட்டி செம்பனார்கோவில் கடை வீதி வழியாக சாலையில் இழுத்து சென்று தபால் நிலையதை அடைந்தனர். அங்கு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
    வாய்மேடு அருகே ‘போக்சோ’ வழக்கை திரும்பப்பெறக்கோரி சிறுமியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள அண்ணாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது24). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி ‘போச்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், சம்பவத்தன்று அந்த சிறுமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் மீதான போக்சோ வழக்கை திரும்பப்பெறக்கோரி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிறுமி வாய்மேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனர்.
    வேளாங்கண்ணி அருகே படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்றவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடைய மகன்கள் கிருபா, மதி, மதன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோபு, இபிதன், சுவாமிநாதன், சுபாஷ், கண்ணன் மகன் தினேஷ்(வயது 23) ஆகியோர் மீன்பிடிப்பதற்காக நேற்று அதிகாலை கடலுக்கு சென்றனர்.

    மீன்பிடித்துவிட்டு நேற்று மதியம் 12 மணி அளவில் வேளாங்கண்ணி கடற்கரை ஓரம் படகை நிறுத்துவதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் படகு கவிழ்ந்தது. இதில் மதன், தினேஷ் ஆகிய 2 பேரும் படகுக்கு அடியில் சிக்கினர்.

    இதையடுத்து அருகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் ஸ்டீபன் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரும் காயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்த சக மீனவர்கள் மதன், ஸ்டீபன், தினேஷ் ஆகிய 3 பேரையும் மீட்டு நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது தினேஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஸ்டீபன், மதன் ஆகிய இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேளாங்கண்ணி கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகூரில் கார் மீது லாரி மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    காரைக்கால் மூன்றாவது தெரு எம்.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 45).இவர் கார் டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை காரைக்காலில் இருந்து தலைஞாயிறுக்கு நாகூர் கிழக்கு கடற்கரை சாலைவழியாக காரில் சுகுமாறன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே புதுக்கோட்டையில் இருந்து காரைக்காலுக்கு இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த டிரைவர் சுகுமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுகுமாறனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வடமலைப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கனகராஜ் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 3 டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டிரைவரை கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா பஞ்சநதிக்குளம் கிழக்கில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றிச் சென்று விற்பனை செய்வதாக கனிம வளத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஞ்சநதிக்குளம் கிழக்கு சாலையில் 3 டிராக்டரில் மணல் ஏற்றிச் செல்வது தெரியவந்தது.

    டிராக்டரை மறித்து சோதனை செய்ததில் மணல் ஏற்றிச் செல்லுவதற்கான எவ்வித ஆவணமும் இன்றி மணல் கடத்தியது தெரியவந்தது. இதையொட்டி 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து வாய்மேடு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். டிராக்டர் டிரைவர் செல்லதுரையை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 டிராக்டர் டிரைவைர தேடி வருகின்றனர்.

    நாகை மாவட்டம். கீழ்வேளூர் ஒன்றியம் செருநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    சிக்கல்:

    நாகை மாவட்டம். கீழ்வேளூர் ஒன்றியம் செருநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி தலைவர் ரெஜினா இளையராஜா தொடங்கி வைத்தார். முகாமில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரோகினி மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 218 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி, ஊராட்சி எழுத்தர் ராமகிருஷ்ணன், ஊராட்சி உறுப்பினர்கள் கொண்டனர்.

    இதேபோல கீழ்வேளூர் ஒன்றியம் கோவில் கண்ணாப்பூரில் ஊராட்சி மன்ற சேவை மையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி தலைவர் பாரதி கேசவன் தொடங்கி வைத்தார். முகாமில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரமவுலி மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 223 பேருக்கு தடுப்பூசி போட்டனர். இதில். ஊராட்சி துணை தலைவர் மதிவாணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோமதி, ஊராட்சி செயலர் சத்தியநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கீழ்வேளூர் ஒன்றியம் வடகாலத்தூர் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி தலைவர் கார்த்திகேசன் தொடங்கி வைத்தார். தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் பிரியங்கா மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 146 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.

    திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் 434 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் மருத்துவர்கள் மணிவேல், சந்தியா, வட்டார மருத்துவ சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டர்.

    திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஏனங்குடி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 204 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.இதில் மருத்துவர்கள் இளங்கோவன், ஹரிதா, ஊராட்சி செயலாளர் முருகானந்தம், சுகாதார மேற்பார்வையாளர் (பொ) மனோகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் வீரபாண்டியன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    ×