என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் பகுதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதி பள்ளிகளில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கலர் பென்சில், பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட எழுதுப்பொருட்களை மும்பையைச் சேர்ந்த சுந்தர் என்பவர் வழங்கினார். 

    வேதாரண்யம் வடமழை ரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களுக்கு மேற்படி பொருட்களை பள்ளி தலைமையாசிரியா¢ ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீனிவாசன் ஆகியோரும், செம்போடை அரசு உதவி ஆரம்ப பள்ளியில் 75 மாணவர்களுக்கு பள்ளி தாளாளா¢ பக்தவச்சலம் மற்றும் ஆசிரியா¢கள் வழங்கினர்.
    வேதாரண்யத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
    வேதாரண்யம்:


    வேதாரண்யம் நகராட்சி 21 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். 

    இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேதாரண்யம் நகரின் முக்கிய வீதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். 

    இந்த கொடி அணிவகுப்பில் வேதாரண்யம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, நாகலெட்சுமி, செந்தில்குமார், கன்னிகா, அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மலர்கொடி மற்றும் வேதாரண்யம் சரக போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர் காவல் படையினர் கலந்து கொண்டு கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    வேதாரண்யம் அருகே மலேசியாவுக்கு அனுப்புவதாக கூறி ரூ.6.40 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி கிராமம் சின்னகுட்டி தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 60). விவசாயி. 

    தமிழ்ச்செல்வன் சென்னை ராமாபுரம் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்த ராமலிங்கம் (40) என்பவரிடம் நாலுவேதபதி பகுதியில் உள்ள ஒரு சில நபர்களை மலேசியாவுக்கு விசாவில் அனுப்பி வைப்பதாக கூறி ரூ.10 லட்சம் வசூல் செய்து கொடுத்துள்ளார்.

    பணம் கொடுத்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கு மட்டுமே விசா எடுத்து கொடுத்துள்ளார். 2 நபர்கள் மலேசியா சென்ற நிலையில் மீதி உள்ளவர்களுக்கு 6 லட்சத்து 40 ஆயிரம் தொகை வழங்கப்படாமல் இருந்தது. பலமுறை கேட்டும் ராமலிங்கம் கொடுக்காமல் காலதாமதம் செய்ததால் தமிழ்ச்செல்வன், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் குற்ற புலனாய்வு துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் நாகை குற்றப்புலனாய்வுத் துறை டி.எஸ்.பி பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்து, ராமலிங்கத்தின் மனைவி சித்ரா மற்றும் டிராவல்ஸ் பணியாளர் வெங்கடேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
    நாகை - திருச்சி பயணிகள் ரெயில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 687 நாட்களுக்கு பிறகு இன்று முதல் விரைவு ரெயிலாக இயக்கப்படுகிறது.
    நாகப்பட்டினம்:

    கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாகப்பட்டினம்&திருச்சி வரை செல்லும் பயணிகள் ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் 687 நாட்களுக்குப் பிறகு நாகப்பட்டினம்&திருச்சிராப்பள்ளி இடையேயான ரெயில் சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கப்பட்டு சிறப்பு விரைவு ரெயிலாக இயக்கப்படுகிறது. இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பாக ரெயில் எஞ்சினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு நாகப்பட்டினம் ரெயில் நிலையம் மேலாளர், லோகோ பைலட், அசிஸ்டென்ட் லோகோ பைலட், காவலர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

    பின்னர் ரெயிலில் பயணம் செய்த அனைத்து பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் 
    ரெயில்வே ஊழியர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை கடைபிடிக்கும் படி பயணிகளை அறிவுறுத்தி வருகின்றனர். முதல் நாளான இன்று ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் உள்ள சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வருகிற 21ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று முதல் நாள் இரவு அங்குரார்ப்பணம் தொடர்ந்து கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் ராஜா, சமூக ஆர்வலர் சிங்கபாஸ்கரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 14ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம், 16ம் தேதி திருமலைராஜன் பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, 21ம் தேதி இரவு 10 மணிக்கு திருக்கண்ணபுரம் நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    திருக்குவளை அருகே ராஜகோபுர பணி நிறைவேற வேண்டி சக்தி மகா காளியம்மன் கோவிலில் அஸ்திர யாகம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    திருக்குவளை அருகே வலிவலம் தோப்படி சக்தி மகா காளியம்மன் கோவிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் வருடாந்திர திருவிழா மற்றும் முக்கிய விஷேச நாட்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகங்கள் நடைபெற்று வந்தது.

    கடந்த 12 ஆண்டுகளாக கட்டப்படாமல் இருந்த கோவில் முன்புற ராஜகோபுரம் கட்டும் பணி, 2019ம் ஆண்டு தொடங்கியது. மூன்று நிலை கோபுரத்துடன் 32 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான பணியானது நிதிப் பற்றாக்குறையால் தொய்வு ஏற்பட்டு நிறைவு பெறாமல் உள்ளது.

    இந்த நிலையில் பணியை விரைந்து முடித்திடும் வகையில் கோவில் வளாகத்தில் அஸ்திர யாகம் நடைபெற்றது. யாகத்திற்கு உகந்த திரவியங்கள், பழங்கள், 108 மூலிகைகள் கொண்டு யாகம் நடைபெற்றது. 

    அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருப்பூண்டியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கண்டக்டர் பலியானார்.
    நாகப்பட்டினம்:

    திருப்பூண்டி காரை நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று பணியை முடித்து வீட்டிற்கு செல்வதற்காக காரைநகர் ஈ.சி.ஆர் சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்தார்.

    இதுகுறித்து செந்தில்குமார் மனைவி கபிலா அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மகிழி தெற்குத் தெருவை சேர்ந்த மதியழகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை நகராட்சியில் முதல் முறையாக நம்பியார் நகர் சுயேட்சை வேட்பாளரான மீனவர் சுரேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகப்பட்டினம் நகராட்சியில் 36 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் 16வது வார்டு நம்பியார்நகர் பகுதியில் மீனவர் சுரேஷ் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

    அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சுரேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சுரேசுக்கு நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்ரீதேவி வழங்கினார்.

     இதனையடுத்து நம்பியார்நகர் கிராம மக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகை நகராட்சியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    நாகையில் நடைபெற்ற இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவன தலைவர் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி நிறுவனத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜோதிமணி அம்மாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    முதலில் கல்லூரி வளாகத்தில் உள்ள தாளாளர் மறைந்த செவலியர் டாக்டர் ஜி.எஸ் பிள்ளை சிலைக்கு மலர்தூவி மாலை அணிவிக்கப்பட்டது. 

    தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். 
    மேலும் வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். அனைவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கோவில்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.

    விழாவில் கல்லூரி செயலர் டாக்டர் செவலியர் எஸ்.பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாஷம், கோவிந்தசாமி, சங்கர் கணேஷ், கல்லூரி இயக்குநர் சுமதி பரமேஸ்வரன், கமலா ஸ்ரீ கோவிந்தசாமி, ராஜீபிரதீப் (எ) வினோத், சுப்ரமணியன் விஜய் மணிகண்டன், நிலா, செல்வி.சுப்ரஜா மற்றும் முதன்மை செயல் அலுவலர் முனைவர் சந்திரசேகர், இயக்குநர் விஜயசுந்தரம், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னத்துரை, 

    முனைவர் செல்வசந்திரா கல்லூரி முதல்வர் முனைவர் ராமபாலன் மற்றும் துணை முதல்வர் முனைவர் மோகன் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும்

     பணியாளர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பரத், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    நாகை அருகே மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாப ராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்தார்.
     
    காலையில் பார்த்தபோது அதனை காணவில்லையாம். 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது அருகில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது.
     
    இதுபற்றி அவர் கீழையூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதேபோல இன்று அதிகாலை 3 மணி அளவில் பரவை காய்கறி சந்தைக்கு சென்ற தெற்கு பொய்கை நல்லூர் ஷரிப்முகமது என்பவரை கத்தி முனையில் 3 இளைஞர்கள் மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர்.
     
    நாகை வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று இருசக்கர வாகனம், ஆடுகள் மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
    9 மாத குழந்தையாக இருந்த போது சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு நடந்த திருமணத்தில் பங்கேற்று அவரை தத்தெடுத்து வளர்த்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தினார்.
    நாகப்பட்டினம்:

    கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகை, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஏராளமானோர் உயிரிழந்தனர்.

    இவர்களில் நாகையை சேர்ந்த 9 மாத குழந்தையான சவுமியா, 3 மாத குழந்தையான மீனா ஆகியோர் தங்களது பெற்றோர்களை இழந்தனர். அவர்களை தேடிப்பார்த்த போதிலும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் அப்போது நாகை மாவட்ட கலெக்டராக இருந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார். பின்னர் அங்கிருந்து அவர் சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும் அடிக்கடி நாகைக்கு வந்து சவுமியா, மீனாவுடன் நேரம் செலவிட்டு வந்தார். இதனால் குழந்தைகள் 2 பேரும் ராதாகிருஷ்ணனை அப்பா என்றே அழைத்து வந்தனர்.

    சவுமியா மற்றும் மீனா ஆகியோருக்கு 18 வயதான பிறகு அவர்களை நாகை புதிய கடற்கரை சாலையை சேர்ந்த மணிவண்ணன், மலர்விழி தம்பதி தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் சவுமியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன்படி மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்கப்பட்டது. இவரது திருமணம் நாகையில் நேற்று நடந்தது. இந்த திருமண விழாவில் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், ‘சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளை நான் மட்டும் தத்தெடுத்து வளர்க்கவில்லை. இந்த நாகை மாவட்ட மக்களே வளர்த்துள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து சவுமியாவுக்கு நடத்தி வைத்த திருமணம் இது’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்ததோடு நிறுத்தி விடாமல் வாழ்வின் அடுத்த நிலையான திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும், மலர்விழி, மணிவண்ணனையும் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினர்.


    வேதாரண்யத்தில் அரசு விதை பண்ணை வயலில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் சிவரஞ்சனி பொறியியல் பட்டதாரி. இவரது கணவர் சரவணகுமார். சித்த மருத்துவர். கணவர் துணையோடு பிரியதர்ஷினி இந்தியாவில் உள்ள 1250 வகையான பாரம்பரியமிக்க நெல் விதைகளை சேகரித்து வருகிறார்.

    இந்த ஆண்டு தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளார். சிவரஞ்சனி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். 

    சிவரஞ்சனி சேகரித்து வைத்துள்ள 1250 நெல் ரகங்களை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நெல்லின் தன்மை அதன் ரகம் சேமித்த விதம் கேட்டறிந்து நெல் வயலை பார்வையிட்டார். பெண் பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனியோடு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் 2 மணி நேரம் பார்வையிட்டு அவர் குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

    இந்திய அரசின் உதவிகளை செய்வதாக சிவரஞ்சனிக்கு கலெக்டர் கூறியதோடு பாரம்பரிய நெல்லை மீட்டெடுத்ததை பாராட்டினார். நாகை வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ், துணை இயக்குனர் வெங்கடேசன், வேதாரண்யம் வேளாண்மை அலுவலர் நவீன்குமார், வேளாண்மை அலுவலர்கள் ஜெயபிரகாஷ், ஆறுமுகம், சிவானந்தம், மோகன் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    ×