என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீனவ பிரதிநிதி மனோகர் பேட்டி அளித்தார்.
இந்தியா-இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாட்டு பிரதிநிதிகள் குழு அமைக்க வேண்டும்
இந்தியா-இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணஇரு நாட்டு பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்களின் சிறப்பு பிரதிநிதி மனோகர் வலியுறுத்தி உள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் சிறப்பு பிரதிநிதி மனோகர் நிருபர்களிடம் பேசிய போது கூறியதாவது:
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகின்றன. இதனிடையே இந்த விவகாரம் இந்திய&இலங்கை இருநாட்டு மீனவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் ஆகிய 4 மாவட்ட மீனவர்களின் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழகத்தில் உள்ள 4 மாவட்ட மீனவர்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவாதித்தனர்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் ஆகியவற்றை விடுதலை செய்யும் நேரத்தில் இந்தியா அரசால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை நாட்டு மீனவர்கள், படகுகள் ஆகியவற்றை விடுதலை செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இரு நாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இந்தியா&இலங்கை இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் கொண்ட குழு திமுக ஆட்சி காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது.
சென்னையில் காணொலி வாயிலாக நடந்து முடிந்தது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
Next Story






