என் மலர்
நாகப்பட்டினம்
நாகை அருகே மழைவிட்டும் வயலில் நீர் வடியாததால் நெல்மணிகள் முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி கழுவன்குளம், ஏரிக்கரை சந்திரநதி, கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான கோ46 வகை சம்பா நெல் பயிர் அறுவடைக்குத் தயாராகி வந்தது.
இன்னும் 10 நாட்களில் எந்திரம் மூலமாக அறுவடை செய்யப்பட உள்ள நிலையில் தற்போது பருவம் தவறி பெய்த மழையால், வயலில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும் தொடர் மழையால் நெல்லின் பாரம் தாங்காமல் வயலில் சாய்ந்து தற்பொழுது நீரில் மூழ்கியுள்ளது. மழை தணிந்து இரண்டு நாட்களான நிலையிலும் வயல்களில் இருந்து மழை நீர் வடியாததால் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கி இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மாசிமகப்பெரு விழாவையொட்டி திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இதேபோல் இந்த கோவிலில் மாசி மகப்பெருவிழா கடந்த 8&ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழா வருகின்ற 21ம் தேதிவரை நடக்கிறது.
முக்கிய விழாக்களில் ஒன்றான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் தேருக்கு எழுந்தருளினர்.இதனை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இரா.இராதாகிருட்டிணன், தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் ராஜா, கோவில் தலைமை எழுத்தர் உமா, கோவில் ஊழியர்கள், திருக்கண்ணபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழா நாட்களில் தங்க கருட சேவை, தங்க பல்லாக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.நாளை காலை சவுரிராஜப்பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.
21 -ம் தேதி இரவு 10 மணிக்கு சௌரிராஜப்பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் நூதன பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர், கிராம மக்களும் செய்து வருகின்றனர்.
திருக்குவளை அருகே மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் அன்றாடம் கூலி வேலை செய்யக் கூடிய ஏராளமான விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கற்பகம் விருச்சம் அறக்கட்டளை சார்பில் திருக்குவளை அருகே உள்ள உத்திரங்குடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட 165 விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களாக பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
அருள் நத்தவன அறக்கட்டளை நிறுவனர் எம்.ஆர்.பி.வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் ஜே.அரிசந்திரன், தன்னார்வலர்கள் எஸ்.நரேஷ், எஸ்.அஜய் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். நிவாரண உதவிகளை செய்த கற்பகம் விருச்சம் அறக்கட்டளை நிறுவனர் சத்தியநாராயணனுக்கு பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
வேதாரண்யம் அருகே சித்தியின் வீட்டை இடித்த மகன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தென்னடார் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி
பஞ்சகல்யாணி. 2வது மனைவி பவானி. வடிவேலும், பஞ்ச கல்யாணியும் இறந்து விட்டார்கள்.
தற்போது தென்னடாரில் உள்ள வீட்டில் 2வது மனைவி பவானி தனியாக வசித்து வருகிறார். முதல் மனைவியின் மகன் எழிலழரசன் சென்னையில் வசித்து வருகிறார்.
இவர் தென்னடாரில் உள்ள தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டுவதற்காக வீட்டை இடிக்க வேண்டும் என்று தனது சித்தி பாவனியிடம் கூறியுள்ளார்.
இதற்கு பவானி எனது கணவர் வீட்டில் நான் இறக்கும் வரை வாழ்வேன் எனக் கூறி காலி செய்ய மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த எழிலரசன் பலமுறை பவானிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் பவானி பூச்சி மருந்தை குடித்ததால் திருவாரூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவ மனையில் பவானி இருக்கும் பொழுது எழிலரசன் எந்திரம் வைத்து பாவனியின் ஓட்டுவீட்டை இடித்து விட்டார். தகவலறிந்து தென்னடார் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசெந்தில் அங்கு வந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த வாய்மேடு இன்ஸ்பெக்டர் பொறுப்பு நாகலெட்சுமி விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கி கொண்டார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசன், அவரது மனைவி கவிதா மற்றும் தென்னடாரை சேர்ந்த கருணாநிதி, நடராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு உடையது.
வேதங்கள் பூஜைசெய்து மூடி கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரம் பாடி திறந்ததாக வரலாற்று சிறப்புமிக்க கோவில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
இந்த ஆண்டு மாசி மக பெருவிழா கடந்த மாதம் 29&ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக உற்சவத்தையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது.
இதில் யாழ்ப்பாணம் பரணி ஆதீனம் சிவந்திநாத பண்டாரசன்னிதி, ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்தினம் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நாகை மாவட்டத்தில் பயிறு, உளுந்து பாதிப்புக்கு பயிர் காப்பீடு செய்ய 15-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்பு ராஜ் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாகை மாவட்டத்தில் பயிறு, உளுந்து கனமழையால் பாதிக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் வருகிற 15-ந்தேதி
பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்.
கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் வாங்கிக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பொது நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளில்
15-ந்தேதி வரை பாரத பிரதமர் காப்பீடுத்திட்டம் செய்ய கடைசி நாள்.
எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு
தெரிவித்துள்ளார்.
தை கடைசி வெள்ளியையோட்டி சிக்கல் பார்வதீஸ்வரர்கோவிலில் நெய்க்குள தரிசன வழிபாடு நடந்தது.
நாகப்பட்டினம்:
தை கடைசி வெள்ளியையொட்டி நாகை மாவட்டம், சிக்கல் பர்வதவர்த்தனி உடனுறை பார்வதீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு அன்னப்பாவாடை என்னும் நெய்க் குளத் தரிசனம், மஹா தீபாராதனை நடைபெற்றது.
15 கிலோ சர்க்கரை பொங்கலில் 25 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு பிரசாதத்தில் நெய் குளம் போல் காட்சி அளிக்கும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் அக்குளத்தில் தெரிந்த அம்பாளின் திருவுருவத்தை கண்டு பக்திப் பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கேக்கிற்கு பணம் கேட்டதால் சுவீட் கடையை 4 போதை ஆசாமிகள் அடித்து நொறுக்கினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி கடை தெருவில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருபவர் முகமது அலி. வழக்கம் போல முகமது அலி வியாபாரம் செய்த போது, போதையில் கடைக்கு ஆட்டோ ஒன்றில் வந்த 4 பேர் அரை கிலோ கேக் கேட்டுள்ளனர்.
கேக்கை கொடுத்த கடை உரிமையாளர், பணம் கேட்டுள்ளார். அதற்கு போதை ஆசாமிகள் ஆத்திரமடைந்து கடையில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியதோடு முகமதுஅலியையும் தாக்கியுள்ளனர். மேலும், ஆட்டோவில் இருந்த அரிவாளை எடுத்து தாக்க முயற்சி செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கடைக்காரரின் கூச்சலை கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் அங்கு கூடியதால் 3 பேர் ஆட்டோவை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.
ஒருவரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் கீழையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் காரை நகர் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து தப்பி சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
ஓசியில் கேக் கேட்டு தராத ஸ்வீட் கடையில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போதை கும்பல் அடித்து நொறுக்கிய சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 10,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு நாளை 12-ந்தேதி 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு முழுவதும் கோவிட்-19 கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட முதல்வர் ஆணையின்படி
மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு
பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் நாளை காலை 9 மணி முதல்
மாலை 50 மணிவரை அனைத்து அரசு மருத்துவமனை,
ஆரம்ப சுகாதார நிலையங்கள்.துணை சுகாதார நிலையம்
மற்றும் 350 சிறப்பு முகாம்களில் 10,000 பேருக்கு தடுப்பூசி
செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா
தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
எனவே மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும்
நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி
போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விடுபட்டு போன முன்களப்பணியாளர்கள், முதல் தவணை
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து
தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் 13.5.21-க்கு முன் 2-வது தடுப்பூசி செலுத்திக் கொண்ட
60 வயதிற்கு மேற்பட்டு இணை நோய் உள்ளவர்கள், சுகாதார
பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர்
அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு
அவர் கூறியுள்ளார்.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக விழா நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம்
ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம். இந்த திருக்கோயில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு 29.1.22 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி
நடந்து வருகிறது. 8-ந்தேதி இரவு பஞ்சமூர்த்தி சகிதம்
சந்திரசேகர சுவாமி இந்திர விமானத்தில் எழுந்தருளி
வீதியுலா காட்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
வழிபாடு செய்தனர். மேலும் வரும் 13-ந்தேதி ஞாயிற்று கிழமை
தேர் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கு தேர் அலங்கரிக்கும்
பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரார்கள், காவல்துறையினர், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
நாகை அருகே தோப்பில் காயத்துடன் கிடந்த மயிலை மீட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவர் தோப்பில் 50க்கும் மேற்பட்ட மாமரங்களை வைத்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில், வழக்கம்போல மரங்களை பராமரிப்பதற்காக தனது மாந்தோப்புக்கு வந்துள்ளார்.
அப்போது மரத்தின் கீழே கால் முறிந்த நிலையில் மயில் ஒன்று பறக்க முடியாமல் நின்று கொண்டிருந்ததை பார்த்தார். அதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு மஸ்தான் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனஉயிரின காப்பாளர் யோகேஷ்குமார்மீனா, வனசரக அலுவலர் ஜோசப் டேனியல், வனவர் ஆனந்தீஸ்வரன், வன காப்பாளர் பாக்யராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மயிலை மீட்டு நாகை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சை முடிந்த பிறகு மயிலை வனப்பகுதிக்குள் கொண்டுவிட இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரி விக்னபுரம் கிராமத்தில் கிராமப்புற குழந்தைகளுக்கான நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நல்ல மனிதர்களை உருவாக்கும் திறமை சிறந்த புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு அறிந்த மத்திய மண்டல ஐ.ஜி நாகை மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் முக்கிய இடங்களில் நூலகத்தினை தொடங்க உத்தரவிட்டதின் அடிப்படையில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி வழிகாட்டுதலின் படி
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுச்சேரி விக்னபுரம் கிராமத்தில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின்படி, உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நூலகத்தினை திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தில் மாணவர் களின் எதிர்காலத்திற்கும், இளைஞர்களின் வாழ்க்கையினை நெறிமுறைபடுத்தும் வகையிலும், இல்லத் தரசிகளின் பொழுதினை இனிமையாக்கும் வகையிலும், சிறுவர்களின் கற்பனை திறனை மேம்படுத்தும் வகையிலும்,
முதியவர்களின் பொழுதினை பயனுள்ளதாக மாற்றும் வகையில் புராண கதைகளும், போட்டித் தேர்விற்கு தயராகும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு தலைவர் களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் வாழ்க்கை முறை கோட்பாடுகள் மற்றும் பொது அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய நூல்களும் உள்ளன. இதனை பொது மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.






