என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் கடற்கரை பூங்காவில் இறந்த கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம்-3ம் சேத்தி கீழ்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). சலவைத் தொழிலாளி. 
    இவர் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு கீழவெளி பகுதியில் தனது மகள் வீட்டில் வந்து தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 16ம் தேதி கடைவீதிக்கு சென்றவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லையாம். 17ம் தேதி வயதானவர் கடற்கரை பூங்கா அருகே இறந்து கிடப்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

    சுப்பிரமணியன் மனைவி கனகவள்ளி (45) மருத்துவ மனைக்கு வந்து பார்த்து இறந்தவர் தனது கணவர்தான் என உறுதி அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    ஒரே குடும்பத்தில் மனைவி, 2 மகள்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 55). இவரது மனைவி புவனேஸ்வரி (45).

    இவர்களுக்கு தனலெட்சுமி (22), வினோதினி (19), அட்சயா (17) ஆகிய மூன்று மகள்கள். இதில் வினோதினி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அட்சயா பிளஸ்-2 படித்து வந்தார்.

    லெட்சுமணன் வீட்டின் வாசலிலேயே டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவரது மூத்த மகள் தனலெட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் லேப்பில் பணிபுரிந்து வந்தபோது மாற்று மதத்தை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் காதலாக மாறி உள்ளது.

    இதற்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் தனலெட்சுமி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பெரும் மன உளைச்சலில் லெட்சுமணன் இருந்து வந்துள்ளார். மூத்த மகளின் நடவடிக்கையால் மற்ற 2 மகள்களின் வாழ்க்கை பாழாகி விட்டதே, குடும்ப கவுரவம் போய்விட்டதே என்று அருகில் உள்ளவரிடம் புலம்பி வந்தாக கூறப்படுகிறது.

    லெட்சுமணன் தினமும் காலை 4 மணிக்கு டீக்கடையை திறந்து விடுவது வழக்கம். அப்போது மகள் அட்சயா வாசல் கூட்டி கோலம் போடுவாராம்.

    இந்நிலையில் இன்று காலை 7 மணி வரை டீக்கடை திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது புவனேஸ்வரி அவரது மகள்கள் வினோதினி, அட்சயா ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.

    அருகில் லெட்சுமணன் தூக்குப்போட்டு இறந்து கிடப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி உடனடியாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் போலீசார் புதுச்சேரி கிராமத்திற்கு உடனடியாக விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    அப்போது நடத்திய முதல்கட்ட விசாரணையில் லெட்சுமணன் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோரை தூங்கிக் கொண்டிருந்தபோது கிரைண்டர் குழவி கல்லால் தலையிலும், நெஞ்சிலும் தாக்கி கொலை செய்து விட்டு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    மேலும் நடத்திய விசாரணையில் மூத்த மகள் தனலெட்சுமி மாற்று மதத்தை சேர்ந்த வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடியதால் மனவேதனையுடன் இருந்து வந்த லெட்சுமணன் விரக்தியிலும், ஆத்திரத்திலும் தனது மற்ற 2 மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் கீழ்வேளூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தில் மனைவி, 2 மகள்களை அடித்து கொன்றுவிட்டு தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அப்பகுதியில் கிராம மக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


    திருக்குவளை அருகே காருகுடி மகா மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு யாகம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை&கொளப்பாடு பிரதான சாலையில் காருகுடி கிராமத்தில் மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு யாகம் நடைப்பெறுவது வழக்கம்.

    அதன்படி மாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆல், அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்கு உள்ளிட்ட மரப்பொருட்களும், 9 வகையான நவதானியங்கள், பழவர்க்கம் முதலியவற்றைக் கொண்டு யாகம் நடைபெற்றது. 

    தொடர்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    நாகையில் போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தில் பட்டா மாற்றம் செய்த வி.ஏ.ஓ. உள்ளிட்ட 3 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் நாகை புத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கைங்கர்ய சபாவின் தலைவராக உள்ளார். புத்தூர் பகுதி வி.ஏ.ஓ. செல்வம். 

    இவர் புத்தூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.46 லட்சம் மதிப்பிலான 214 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தை கடந்த 2020-ம் ஆண்டு போலியாக ஆவணங்கள் தயார் செய்து அவரது தாயார் மலர்க்கொடிக்கு பட்டா செய்து கொடுத்தார்.

    பின்னர் அந்த இடத்தை தனது சகோதரர் தினகரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானம் செய்து கொடுத்து பட்டா மாற்றம் செய்தார். 
    இதை அறிந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் கைங்கர்ய சபா தலைவர் சண்முகம், கோயில் இடத்தை மீட்டுத்தரக்கோரி நாகை மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசாரிடம் கடந்த 13-ம் தேதி புகார் செய்தார்.

    இதன் பேரில் போலீசார் போலியாக ஆவணம் தயார் செய்து பட்டா மாற்றம் செய்த வி.ஏ.ஓ. செல்வம், அவரது தாய் மலர்க்கொடி, சகோதரர் தினகரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
    வேளாங்கண்ணி அருகே பரவை காய்கறி சந்தையை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பரவை காய்கறி சந்தை அமைந்துள்ளது. 

    பழமை வாய்ந்த இக்காய்கறி சந்தையில் உள்ளூரை சேர்ந்த காய்கறி வியாபாரிகள் என, அதிக விவசாயிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். 

    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பரவை காய்கறி சந்தை அருகாமையில் உள்ள தனியார் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தனியார் இடத்தில் காய்கறி சந்தை இயங்கி வருவதால் ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் கோயிலுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.15 லட்சம் வருவாயும், அதன் மூலமாக ஊராட்சி மன்றத்திற்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வருவாயும் கிடைக்காமல் இருப்பதாக கூறி, மீண்டும் பரவை காய்கறி சந்தையை அதே இடத்தில் கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    நாகை அருகே பண்ணையில் வளர்க்கப்படும் நாய்கள் ஆடுகளை கொன்று வருவதாக இறந்த ஆடுகளுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூரில் ஒருவர் நாய் பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் சுமார் 250 நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் அந்த இடத்திலிருந்து நாய்கள் பாதுகாப்பு இல்லாமல் பண்ணையை சுற்றி உள்ள வீடுகளில் வளர்க்கக்கூடிய ஆடுகளை கொன்று விடுவதாகவும், பொதுமக்களையும் கடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இது சம்பந்தமாக அந்த நாய் பண்ணையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அந்த பகுதி பொதுமக்கள் பிரதாபராமபுரத்தில் வேளாங்கண்ணி - திருத்துறைப்பூண்டி செல்லும் கடற்கரைச் சாலையில் நாய் கடித்து இறந்த ஆட்டுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த நாகை வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஒருவாரத்தில் நாய் பண்ணையை அப்புறப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. 
    இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்
    நாகப்பட்டினம்:

    வருகிற 19ந்தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்உத்தரவின்பேரில் நாகை உட்கோட்டம் திட்டச்சேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மக்கள் நெருக்கடி மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிலிப்கென்னடி தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், கீதா (பயிற்சி), இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தாலுகா போலீஸ் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மற்றும் ஊர்க்காவல் படை என 200 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை அருகே மழைவிட்டும் வயலில் நீர் வடியாததால் நெல்மணிகள் முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி கழுவன்குளம், ஏரிக்கரை சந்திரநதி, கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான கோ46 வகை சம்பா நெல் பயிர் அறுவடைக்குத் தயாராகி வந்தது.

    இன்னும் 10 நாட்களில் எந்திரம் மூலமாக அறுவடை செய்யப்பட உள்ள நிலையில் தற்போது பருவம் தவறி பெய்த மழையால், வயலில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

    மேலும் தொடர் மழையால் நெல்லின் பாரம் தாங்காமல் வயலில் சாய்ந்து தற்பொழுது நீரில் மூழ்கியுள்ளது. மழை தணிந்து இரண்டு நாட்களான நிலையிலும் வயல்களில் இருந்து மழை நீர் வடியாததால் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கி இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
    மாசிமகப்பெரு விழாவையொட்டி திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 
    5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதேபோல் இந்த கோவிலில் மாசி மகப்பெருவிழா கடந்த 8&ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த விழா வருகின்ற 21ம் தேதிவரை நடக்கிறது.


    முக்கிய விழாக்களில் ஒன்றான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் தேருக்கு எழுந்தருளினர்.இதனை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இரா.இராதாகிருட்டிணன், தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் ராஜா, கோவில் தலைமை எழுத்தர் உமா, கோவில் ஊழியர்கள், திருக்கண்ணபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


    விழா நாட்களில் தங்க கருட சேவை, தங்க பல்லாக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.நாளை காலை சவுரிராஜப்பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    21 -ம் தேதி இரவு 10 மணிக்கு சௌரிராஜப்பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் நூதன பங்களாதெப்பம் என்ற தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர், கிராம மக்களும் செய்து வருகின்றனர்.
    திருக்குவளை அருகே மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:


    நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் அன்றாடம் கூலி வேலை செய்யக் கூடிய ஏராளமான விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 

    இந்நிலையில் கற்பகம் விருச்சம் அறக்கட்டளை சார்பில் திருக்குவளை அருகே உள்ள உத்திரங்குடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட 165 விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களாக பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. 

    அருள் நத்தவன அறக்கட்டளை நிறுவனர் எம்.ஆர்.பி.வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் ஜே.அரிசந்திரன், தன்னார்வலர்கள் எஸ்.நரேஷ், எஸ்.அஜய் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். நிவாரண உதவிகளை செய்த கற்பகம் விருச்சம் அறக்கட்டளை நிறுவனர் சத்தியநாராயணனுக்கு பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
    வேதாரண்யம் அருகே சித்தியின் வீட்டை இடித்த மகன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தென்னடார் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி 
    பஞ்சகல்யாணி. 2வது மனைவி பவானி. வடிவேலும், பஞ்ச கல்யாணியும் இறந்து விட்டார்கள். 

    தற்போது தென்னடாரில் உள்ள வீட்டில் 2வது மனைவி பவானி தனியாக வசித்து வருகிறார். முதல் மனைவியின் மகன் எழிலழரசன் சென்னையில் வசித்து வருகிறார்.

    இவர் தென்னடாரில் உள்ள தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டுவதற்காக வீட்டை இடிக்க வேண்டும் என்று தனது சித்தி பாவனியிடம் கூறியுள்ளார்.
     
    இதற்கு பவானி எனது கணவர் வீட்டில் நான் இறக்கும் வரை வாழ்வேன் எனக் கூறி காலி செய்ய மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த எழிலரசன் பலமுறை பவானிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
    இதனால் பவானி பூச்சி மருந்தை குடித்ததால் திருவாரூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் மருத்துவ மனையில் பவானி இருக்கும் பொழுது எழிலரசன் எந்திரம் வைத்து பாவனியின் ஓட்டுவீட்டை இடித்து விட்டார். தகவலறிந்து தென்னடார் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசெந்தில் அங்கு வந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

    தகவலறிந்த வாய்மேடு இன்ஸ்பெக்டர் பொறுப்பு நாகலெட்சுமி விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கி கொண்டார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசன், அவரது மனைவி கவிதா மற்றும் தென்னடாரை சேர்ந்த கருணாநிதி, நடராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு உடையது. 

    வேதங்கள் பூஜைசெய்து மூடி கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரம் பாடி திறந்ததாக வரலாற்று சிறப்புமிக்க கோவில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    இந்த ஆண்டு மாசி மக பெருவிழா கடந்த மாதம் 29&ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக உற்சவத்தையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது. 

    இதில் யாழ்ப்பாணம் பரணி ஆதீனம் சிவந்திநாத பண்டாரசன்னிதி, ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்தினம் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    ×