என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே பட்டமங்கலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் 47 நெல் மூட்டைகள் திருடப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்துள்ள பட்டமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 8000 நெல் மூட்டைகள் வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், 580 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டன.

    நேற்றிரவு வழக்கம்போல் கொள்முதல் பணியை முடித்துவிட்டு, பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை கொள்முதல் நிலையத்திற்கு வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிலையத்தில் முகப்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பட்டியல் எழுத்தர் சக்திவேல் உள்ளே சென்று பார்த்த பொழுது கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சில திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த 580 மூட்டைகளில் 47 நெல் மூட்டைகள் திருடு போயிருப்பதாக உறுதியானது.

    அதனைத் தொடர்ந்து ரூ 38,728 மொத்த மதிப்புடைய 40 கிலோ எடை கொண்ட 47 நெல் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடியதாக பட்டியல் எழுத்தர் சக்திவேல் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் நேற்றைய தினம் நிலைய வாட்ச் மேன் விடுமுறை காரணமாக பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகப்பட்டினத்தில் இருந்து கைவிலங்குடன் தப்பி வந்த கொள்ளையனை போலீசார் சென்னையில் உள்ள கேளம்பாக்கத்தில் கைது செய்தனர்.
    சென்னை:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வடகுடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 29). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது.

    இந்த நிலையில் கோபி செட்டிபாளையம் பகுதியில் திருட்டு வழக்கு ஒன்றில் தனசேகரன் கைது செய்யப்பட்டு அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நாகை காவல் நிலையத்தில் தனசேகரன் மீது வழக்கும் உள்ளது. இது தொடர்பான வழக்கு நாகை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தனசேகரனை நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்த கடந்த 17-ந்தேதி கோபி செட்டிபாளையத்தில் இருந்து வேளாங்கண்ணி போலீசார் காவல் வாகனத்தில் அழைத்துச் வந்தனர்.

    தஞ்சை மாவட்டம் வளம்பகுடியில் அருகே காவலர்கள் இயற்கை உபாதை கழிக்க வாகனத்தை நிறுத்திவிட்டு 2 காவலர்கள் சென்றபோது, காவல் வாகனத்தில் இருந்த 2 காவலர்கள் தூங்கியபோது கைதி தனசேகரன் கை விலங்குடன் தப்பி ஓட்டம் பிடித்தார்.

    சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்த வேளாங்கண்ணி காவல் நிலைய எஸ்.ஐ. கலியமூர்த்தி, காவலர்கள் மணிகண்டன், ஜெகதல பிரதாபன், விஜயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதன் பின்னர் கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது.

    நாகை டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை கேளம்பாக்கத்தில் பதுங்கி இருந்த கைதி தனசேகரனை இன்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    கோடியக்காட்டில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா நடந்தது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அவுலியாக்கன்னி ஒலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. 

    முன்னதாக கோடியக்கரை முகைதீன்பள்ளி வாசலிலிருந்து மின்விளக் குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சந்தனம் அவுலியாக்களின் ஒலியுல்லா தர்காவிற்கு முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோமீட்டர் தூரம் எடுத்து வரப்பட்டது. 

    வழிநெடுகிலும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் சந்தனக்கூடு ஊர்வலத்தில் கலந்து கொண்டு சந்தனக்கூட்டிற்கு முந்திரி, திராட்சை, ஊதுபத்தியை காணிக்கையாக வழங்கினர். 

    சந்தனக்கூடு ஊர்வலம் கோடியக்காடு அவுலியாகன்னி ஒலியுல்லா தர்காவிற்கு வந்து சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் மணி, விழா குழு தலைவர் ஜின்னா மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் அஜ்மீர்கான், அலிமெக்தர், சாபீக் ,கல்பான், இம்ராஜ் மற்றும் ஜாமத் மன்றத்தினர் கலந்துகொண்டானர்.
    தோப்புத்துறையில் நடந்த மேலாண்மை குழு கூட்டத்தில் அரசு பள்ளி கடவுள் கொடுத்த வரம் என கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியுள்ளார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமுர்த்தி வரவேற்றார். 

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் குறித்தும் இலவச கட்டாய கல்வி மற்றும் பள்ளிக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குதல் ஆகிய தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளி என்பது கடவுள் கொடுத்த வரம். 

    பள்ளிக்குச் செல்லும் தங்களது குழந்தைகளை கண்காணிப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பள்ளியில் சிறப்பாக கற்பித்த ஆசிரியை னிதாவிற்கு புத்தகத்தை பரிசு வழங்கி பாராட்டினார்.இதில் நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், விமலா, தாசில்தார் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
    ஆயக்காரன்புலத்தில் இயற்கை விவசாயிகளுக்கு வேளாண்மை செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு
    10,000 உதவித் தொகை வழங்க முன்வந்ததுபோல் நாடு முழுவதும் திட்டம் கொண்டுவரவேண்டும் எனஅகில இந்திய விவசாய சங்க தலைவர் ராகேஷ்திகாயத் பேசினார்.

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் 200 விவசாயிகளுக்கு வேளாண்மைச் செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ்தியாகத், திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சன், நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத் பேசும்போது, தெலுங்கானாவில் அம்மாநில அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்க முன்வந்துள்ளது.

    இதுபோன்ற திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும். விளை பொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றார்.
    வேளாங்கண்ணி அருகே 100 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி தூர்வாரும் பணி தொடங்கியது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் ஊராட்சியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமலிருந்த பெரிய ஏரி தூர்வாரும் பணிகள் பூமிபூஜை செய்து தொடங்கப்பட்டது. இந்த ஏரி மூலமாக பிரதாபராமபுரம், காமேஸ்வரம், பூவைத்தேடி, செருதூர், திருப்பூண்டி, விழுந்தமாவடி, தலையாமழை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுமார் 1000 ஏக்கர் விவசாயம் பயன்பெறுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில், கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் காவிரி மருத்துவமனை மற்றும் மில்கி மிஸ்ட் நிறுவனம் நிதியுதவியுடன் இணைந்து பெரிய ஏரியை ராட்சத ஜேசிபி மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு, ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம், சமூக ஆர்வலர் நிமல்ராகவன், மற்றும் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    நாகையில் ஆக்கி போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆக்கி சங்க முன்னாள் தலைவர் அலெக்சிஸ் புஷ்பராஜ் நினைவாக விளையாட்டு கழகம் தொடக்க விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட ஆக்கி சங்க தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கான சீருடை, காலணிகள் ,
    ஆக்கி மட்டை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    திருமருகல் அருகே பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகலை அடுத்த பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 16-ம் தேதி காப்பு கட்டியதுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பத்ரகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை எடுத்து சென்று சாமிக்கு அபிஷேகம் நடந்தது.

    இதை தொடர்ந்து அபிஷேக ஆராதனையும், சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
    திருமருகல் அருகே குடிசை மீது உரசி செல்லும் மின்கம்பிகளை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி கிடாமங்கலம் கிராமம் உள்ளது.இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கிடாமங்கலம் பகுதியில் இருந்து மின்கம்பங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் கிடாமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் இருந்து செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக குடிசை வீடுகளை உரசி செல்கிறது.

    இதனால் வேகமாக காற்று வீசும் நேரங்களில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகள் பறந்து குடிசை வீடுகளில் விழுகிறது. இதனால் அடிக்கடி குடிசைகள் தீப்பற்றி எரிகிறது. எந்த நேரத்திலும் பெரும் அளவில் தீப்பற்றி விபத்துக்கள் ஏற்படும் என்ற அச்சத்துடனே அப்பகுதி பொதுமக்கள் உள்ளதாக கூறுகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மக்கள் நலன் கருதி உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான மின்கம்பத்தை மாற்றியமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகை அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையை அடுத்த வலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சூரமங்கலம் பெரியத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் தமிழ்செல்வம் (25) மனநலம் பாதிக்கப்பட்டவர்.

    கடந்த 15&ந் தேதி அதே பகுதியை சேர்ந்த வீரையன் மகன் சதீஷ்குமார் (25) என்பவர் தமிழ்செல்வத்தை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    மேலும் இதுதொடர்பாக செந்தில்குமார் வலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
    இலங்கையில் இருந்து, யாரும் தங்கக்கட்டி, கஞ்சா போன்ற பொருட்களை கடத்தி வரும்போது படகை விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே இலங்கை நாட்டைச் சேர்ந்த பைபர் படகு இன்று தனியாக கரை ஒதுங்கி நின்றது.

    தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படகை மீட்டு சோதனை நடத்தினர். ஆனால் அதில் மீன் பிடிக்க தேவைப்படும் வலைகள், மீன் பிடி சாதனங்கள் ஏதும் இல்லை.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இலங்கையில் இருந்து யாராவது அத்துமீறி நுழைந்து படகை விட்டு சென்றார்களா? அல்லது இலங்கையில் இருந்து, யாரும் தங்கக்கட்டி, கஞ்சா போன்ற பொருட்களை கடத்தி வரும்போது படகை விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகையில் தகுதிச்சான்று புதுப்பிக்காத 14 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை எல்லைக்கு உட்பட்ட ஆட்டோ, சரக்கு வாகனங்கள், மேக்சிகேப் வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி ஆகியோர் அடங்கிய குழு திடீர் சோதனைகள் மற்றும் தணிக்கை செய்தனர்.

    அப்போது அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் தகுதிச் சான்று, காப்பு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி இயக்கப்படும்.

    வாகனங்கள் அனுமதிக்க புறம்பாக அதிக நபர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ என மொத்தம் 14 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. 14 வாகனங்களுக்கும் அபராதத் தொகை ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் விதிக்கப்பட்டு உள்ளது.
    ×