என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    பிரதாபராமபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளை கொள்முதல் செய்ய பட்டியல் எழுத்தர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் விவசாயிகளிடம் மூட்டைக்கு லஞ்ச பணம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
     
    இந்நிலையில் தெற்கு பொய்கை நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி இளங்கோ நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு அந்த கொள்முதல் நிலையம் சென்றார். அவரிடம் இருந்த 48 மூட்டைகளை கொள்முதல் செய்த பட்டியல் எழுத்தர் பாஸ்கர் உள்ளிட்ட ஊழியர்கள் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 என நிர்ணயம் செய்து மொத்தம் ரூ.1940 லஞ்சமாக  கேட்டுள்ளனர்.
     
    மேலும் ஊழியர்களுக்கு டீ வாங்க தனியாக ரூ.100 கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி இளங்கோ இந்த தகவல் மற்றவர்களுக்கும் சென்று சேர முடிவு செய்தார். அதன்படி தனது செல்போனை மறைத்து வீடியோ எடுத்தப்படி பாஸ்கரிடம் அவர் கேட்ட பணம் கொடுத்தார்.
     
    இதையடுத்து வெளியே வந்த இளங்கோ அந்த வீடியோ காட்சிகளை வாட்ஸ்&அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
     
    உடனடியாக லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் பாஸ்கர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முக்குலத்து புலிகள் கட்சி வலியுறுத்தல்
    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் கட்சி நிறுவனத்தலைவர் ஆறு சரவண தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு கிராமத்தில் போலீசார் மிரட்டியதால் 19 வயது கல்லூரி மாணவர் அக்னீஸ்வரன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

    கச்சநத்தம் என்னும் ஊரில் நடந்த கொலை சம்பவத்தில் இவரது தந்தை, சகோதரர் மற்றும் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில் ஜாமீனில் வந்து இருந்த அக்னீஸ்வரனை தொடர்ச்சியாக போலீசார் தொந்தரவு செய்து வந்ததால் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

    தமிழக அரசு இது குறித்து நீதி விசாரணை நடத்தி தற்கொலைக்கு தூண்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டம், கீழ்வேளூர் பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தி.மு.க சார்பில் சந்திரசேகரன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

    அதேபோல் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு ம.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற காந்திமதி ஸ்ரீதரனும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற மறைமுக வாக்குப்பதிவில் மொத்தம் 15 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் தி.மு.க உறுப்பினர் சந்திசேகரனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

    இதனையடுத்து சந்திரசேகரன் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன சுந்தரம் அறிவித்தார். கூட்டணி கட்சியினர் போட்டி வேட்பாளர் நிறுத்தியதால் பேரூராட்சி அலுவலகத்திற்கு வெளியே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகை மாவட்டத்தில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு மாணவ-மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன், தாசில்தார் ரவிச்சந்திரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பிரகாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

    பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு பின்னர் உயர்கல்வி மற்றும் போட்டித்தேர்வு வாய்ப்புகள், கல்லூரிகளைத் தேர்வு செய்தல், சுயதொழில் வாய்ப்புகள் வேலைவாய்ப்பு பெறத்தக்க படிப்புகள் போன்றவை குறித்து ஒலி&ஒளி கருவிகளுடன் தலைமை ஆசிரியர் துரைக்கண்ணன், முதுகலை ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர். 

    முடிவில் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
    திருமருகல் அருகே அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். 

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 

    இந்த போட்டி 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும் நடைபெற்றது. இதில் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

    பரிசு பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சி போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிமுன் அன்சாரி, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
    நாகையில் பா.ஜ.க. பிரமுகரின் மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை கொட்டுப் பாளைய தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 40). இவர் நாகை நகர பா.ஜ.க. துணை தலைவராக உள்ளார்.

    இந்நிலையில் இவர் வீட்டு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இது தவிர அந்த காலனியில் உள்ள மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

    வீட்டுக்குள் உதயகுமார் தூங்கி கொண்டிருந்தார். இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்த உதயகுமார் 3 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்து சேதமானதையும், வீட்டின் முன்பகுதி எரிந்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து  தப்பி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், இன்ஸ்பெக்ர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசியல் முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப் பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    திட்டச்சேரி அரசு பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் பங்கேற்றார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, ஓவியப் பயிற்சி, பட்டறை நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி வரவேற்றார்.
     
    இதில் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவற்றை கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து ஓவிய பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மஞ்சப்பை, மரக்கன்றுகளை வழங்கி அத்துடன் மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமை ஆகாமல் படித்து முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ரபீக், பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா, பள்ளி வளர்ச்சி குழு தலைவர் முகம்மது சுல்தான், ஓ.என்.ஜி.சி பொது மேலாளர்கள் மாறன், வி.என்.ராவ், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், பட்டதாரி ஆசிரியர் நசீரா மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனை வருக்கும் திட்டச்சேரி சித்தமருத்துவர் அஜ்மல்கான் கபசுர குடிநீர் வழங்கினார்.  முடிவில் உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
    நாகையில் நடைபெற்ற சோதனையில் தகுதி சான்றில்லாத 15 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் மற்றும், தஞ்சாவூர் துணைப் போக்குவரத்து ஆணையர்  உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
     
    நாகை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு தினங்கள் நடைபெற்ற வாகன சோதனையில், அனுமதி சீட்டு இல்லாமல் ஓட்டிவந்த வாகனங்கள், தகுதி சான்று, காப்பு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் 
    இல்லாமல் இயக்கி வந்த வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    புதுச்சேரி மாநில சொகுசு ஆம்னி பஸ்கள்-2, மேக்சிகேப் வாகனங்கள்-3, சரக்கு வாகனங்கள்-2 மற்றும் இலகுரக சரக்கு வாகங்கள்-8 என 15 வாகனங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாகன வரியாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம், அபராத தொகையாக ரூ.2 லட்சத்து 10-ம் அபராதம் விதித்தனர். 

    போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் என வாகன ஓட்டிகளுக்கு நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    திருமருகல் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான படிவம் வழங்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான படிவத்தை விவசாயிகளிடம் திருமருகல் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும், அட்மா திட்ட வட்டார தலைவருமான செல்வ செங்குட்டுவன் வழங்கினார்.

    அதே போல் புத்தகரம் மற்றும் ஆதினக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் விவசாயிகள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    இந்நிகழ்வில் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வடிவேல், மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் விஜியகணபதி, ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி செயலாளர் குமார், கிளை செயலாளர் வெங்கடேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் லதாஅன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பவுஜியாபேகம் அபுசாலி, முகம்மது சாதிக், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    நாகை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளைய த்தில் உள்ள திருவொற்றீஸ்வரர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

     தலைமையாசிரியர் கீதாராணி வழிகாட்டுதலின் பேரில் மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாதிரி தொழிற்சாலை, உலக வெப்பமயமாதல் தடுத்தல், மழைநீர் சேகரிப்பு, 

    சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி, குதுப்பினார், லைட் ஹவுஸ், காய்கறிகளால் ஆன பொம்மை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    பள்ளி செயலர் ராமச்சந்திரன் முன்னிலையிலும் நகர மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையிலும் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தமிழக மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கவுதமன் தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். 

    இக்கண்காட்சியில் பள்ளி ஆசிரியர்கள், நகர மன்ற துணை தலைவர் செந்தில்குமார், நகர மன்ற உறுப்பினர் சுந்தரேஸ்வரி கணேசன், பெற்றோர்கள் பங்கேற்றனர். 

    5 முதல் 12 வயது வரை உள்ள மாணவர்கள் காட்சிப் படுத்திய படைப்புகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    நாகை அருகே அபூர்வ வகை ஆந்தை வலையில் சிக்கியது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் தாண்டவ மூர்த்திகாடு பகுதியில் உள்ள அலை அருண் என்பவரது வயலில் கட்டப்பட்டிருந்த மீன் வலையில் இதய வடிவிலான முகம் கொண்ட அபூர்வவகை ஆந்தை சிக்கியது. 

    இதனை பார்த்த அலைஅருண் நாகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

    உடனடியாக வந்த வனத்துறையினர் ஆந்தையை கைப்பற்றி வனப்பகுதியில் கொண்டு சென்று பறக்கவிட்டனர்.
    வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிப்பது வேதாரண்யம். இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு வெளி மாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. 

    இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி தொடங்கபட்ட நிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பருவம் தப்பிய இரு முறை பெய்த மழையால் உப்பு உற்பத்தி தடைபட்டது.

    தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் 9000 ஏக்கரில் முழுவீச்சில் உற்பத்தி துவங்கி உள்ளனர். 

    தற்போது இரவு, பகலாக உப்பு உற்பத்தியில் ஆண் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆண்களுக்கு நிகராக பெண்களும் மிகக் கடுமையாகவும் உப்பள பகுதிகளில் அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். ஆண்டு  தோறும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறும். 

    இந்த ஆண்டு உப்பு உற்பத்தி துவக்கத்தில்பருவம் தப்பிய மழையால் இரண்டு மாதம் பாதித்த நிலையில் ஆண்டு இலக்கை எட்ட உப்பள பகுதிகளில் தொழிலாளர்கள் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

    ×