என் மலர்
நாகப்பட்டினம்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைக்கு லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமாபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வைரல் ஆகியது.
இதனையடுத்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டதில் தெற்கு பொய்கைநல்லலூர் பகுதியை சேர்ந்த இளங்கோவிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய பட்டியல் எழுத்தர் பாஸ்கர் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வீதம் ரூ.1940 லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து பட்டியல் எழுத்தர் பாஸ்கரை தற்காலிக பணி நீக்கம் செய்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது இந்த சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குரங்கு, நரி, குதிரை, முயல் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த பசுமை மாறா காட்டில் நாட்டுப் பறவைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இந்த கோடியக்கரை சரணாலயத்தில் எதிர்புறம் உள்ள பறவைகள் சரணாலயத்தில் உலகெங்கிலுமிருந்து 247 வகையான பறவைகள் வந்து செல்லும்.இதன் கணக்கெடுப்பு பணி ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதேபோல் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள வனவிலங்கு கணக்கெடுப்பு பிப்ரவரி மாதம் முடிவுற்றது.
மூன்றாவது கட்டமாக வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் நாட்டு பறவைகளான மைனா, செண்பகம், கௌதாரி, பச்சைக்கிளி, காட்டில் வாழும் காகம், மரங்கொத்தி, சிட்டுக்குருவி, குயில், மயில் போன்ற பல பறவை இனங்கள் இந்த சரணாலயத்தில் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது மேலும் வாய்மேடு பெரியகுத்தகை ஆகிய பகுதிகளில் உள்ள காப்பு காட்டிலும் கோடியக்கரையில் உள்ள 5 அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இந்த கணக்கெடுக்கும் பணியில் நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான், ஈரநில நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டு நாட்கள் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இரண்டு நாள் கணக்கெடுப்பு முடிந்தபிறகு பறவையின் எண்ணிக்கை குறித்து விவரம் வெளியிடப்படும் என்று வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் சிவபாலன், மயில்வாகனன். இருவரும் தங்களுக்கு சொந்தமான பைபர் படகுகளில் மேலும் 10 மீனவர்களுடன் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கோடியக்கரை தென் கிழக்கே வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை பகுதியை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் ஒரு விசைப்படகில் வந்து ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்தனர்.
பின்னர் 2 படகுகளிலும் இருந்த மீனவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி படகுகளில் இருந்த 2 ஜிபிஎஸ் கருவிகள், செல்போன்கள், டார்ச்லைட் ஆகியவற்றை பறித்து சென்றனர். செல்போன்களையும் பறித்து சென்றதால் இதுபற்றி அதிகாரிகளுக்கோ, மற்ற மீனவர்களுக்கோ தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் மீனவர்கள் 12 பேரும் 2 படகுகளுடன் இன்று காலை நாகை கடற்கரைக்கு திரும்பினர். பின்னர் கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பொருட்களை பறித்து சென்றது குறித்து கடலோர காவல்குழுமம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், விலை உயர்ந்த பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து செல்வதால் மிகவும் பாதிக்கப்படுவதாக நாகை மாவட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரங்களில் சட்டவிரோதமாக வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக தொடர்ந்து வந்த ரகசிய புகார்கள் வந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் தலைமையில் திருப்பூண்டி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களின்றி நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து 200 நெல் மூட்டைகள் மற்றும் அதனை ஏற்றி வந்த வேன் கீழையூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் தொடர்புடைய காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல பொது மேலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஏடிஎல் ஆய்வகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி ஏடிஎம் ஆய்வகத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியர் கலாராணி வரவேற்றார். இதில் ஏடிஎல் ஆய்வகத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரோபோ மிராக்கல் நிறுவனத்தின் நிர்வாகிகள் ருத்ரேஷ், சூரஜ், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், ஓவிய ஆசிரியர் குமரன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவ&மாணவிகள், ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
75-வது சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நாகை புதிய கடற்கரையில் அமுத பெருவிழா நிகழ்ச்சி கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்திய திருநாட்டின் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை மக்கள் அறிந்திடும் வகையில் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ&மாணவிகள் பரதநாட்டியம், தென்னக கலை பண்பாட்டுத்துறை சார்பில் தப்பாட்டம், கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தெம்மாங்கு பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
இந்நிகழ்வில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.






