என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை நகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கிய 2 தபால்காரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5&ம் வகுப்பு வரை குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள் ஆவார்கள். இக்குழந்தைகள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    இதனை கருத்தில் கொண்டும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருதியும் நாகை பகுதியை சேர்ந்த தபால் காரர்கள் ராஜேந்திரன், சந்தோஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து, தனது சொந்த செலவிலேயே பள்ளியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத்திட்டத்தில் முதல் தவணை தொகை ரூ.250 செலுத்தி, இத்திட்டத்தில் இணைத்துள்ளனர். அதற்கான அட்டையையும் பெண் குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கி உள்ளனர்.

    இது குறித்து ராஜேந்திரன், சந்தோஷ் ஆகியோர் கூறுகையில், சமூக நல்லெண்ணத்துடன் இதை செய்துள்ளோம். இத்திட்டத்தில் பணம் கட்டி சேர முடியாமல் பலர் உள்ளனர். முதல் தவணையை தொடர்ந்து, ஆண்டிற்கு ரூ.1000 ஆயிரம் கட்டி வந்தாலே போதும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தில் ஒரு முழுமையாக தொகை கிடைக்கும். எங்களால் முடிந்த இந்த சிறு உதவியை செய்துள்ளோம். இதைத்தொடர்ந்து சிரமம் பார்க்காமல் பெற்றோர்கள் ஆண்டு தோறும் இத்திட்டத்தில் பணம் கட்டி வந்தால் போதும்.

    மேலும் இத்திட்டத்தை அனைவரும் தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    தபால்காரர்களின் இந்த செயலுக்கு தலைமை ஆசிரியை சாந்தி, இடைநிலை ஆசிரியர்கள் விமலா, சவுந்திரவள்ளி மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    மேலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன், தலைமை அஞ்சல் அதிகாரி திலகவதி, கோட்ட பி.ஆர்.ஐ.பி விஜயராகவன் ஆகியோருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தலைமை அஞ்சல் அதிகாரி திலகவதியும் நாகை வட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் பணம் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி தாய்-பாட்டியிடம் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 80) விவசாயி. இவரது மனைவி திலகவதி (58). இவர்களது மகள் மதுபாலா (28). இவருக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்தது. தற்போது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு பன்னீர்செல்வம் வீட்டிற்குள் முகமூடி அணிந்த மர்மநபர்கள் சிலர் அத்துமீறி புகுந்தனர். அதிர்ச்சியடைந்த அவர் நீங்கள் யார்? உடனே வெளியே செல்லுங்கள் என கூறினார். அப்போது முகமூடி நபர்கள் கத்தியை காட்டி உங்களிடம் உள்ள நகை, பணத்தை கொடுங்கள். இல்லையென்றால் உங்களையும், பச்சிளங் குழந்தையையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் குழந்தையை ஒன்றும் செய்து விடாதீர்கள் என கெஞ்சினர்.

    அதனை கண்டுகொள்ளாத மர்ம நபர்கள் 3 பேரையும் கத்தி முனையில் மிரட்டி திலகவதி, மதுபாலா ஆகியோரின் கழுத்தில் கிடந்த நகைகளை பறித்தனர். பின்னர் வீட்டு பீரோவில் இருந்த நகைகள் என 50 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். தொடர்ந்து பீரோவை உடைத்து ரூ.3½ லட்சம் ரொக்கத்தை தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    உடனே பன்னீர்செல்வம் திருடன்.. திருடன்.. என கத்திக்கொண்டு கூச்சலிட்டவாறே விரட்டி சென்றார். சத்தம் கேட்டு பொதுமக்களும் விரட்டி சென்றனர். ஆனால் முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து கரியாபட்டிணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம் அருகே முதியவர் உள்பட 2 பேரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரணியம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன் (வயது 35). இவர் ஆறுகாட்டுத்துறை டாஸ்மார்க் கடை அருகே மது போதையில் படுத்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திருமாவளவன் தன்னிடம் வைத்திருந்த பொருளை காணவில்லை. இதை பனையங்காடு பகுதியை சேர்ந்த பாண்டியன் எடுத்ததாக கருதி பாண்டியனிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார்.

    அப்போது அந்த பகுதிக்கு வந்த ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்த அஞ்சப்பன் (85) என்பவர் தடுத்துள்ளார். இதனால் அஞ்சப்பனை திருமாவளவன் கீழே தள்ளிவிட்டுள்ளார். மேலும் கட்டையால் பாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் நாகை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயமடைந்த அஞ்சப்பன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    புகாரின்பேரில் வேதாரண்யம் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல், சப்&இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமாவளவனை கைது செய்தனர்.
    நாகையில் தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தா நகர் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி, சித்ரா தம்பதியினரின் 3வது மகள் சுபாஷினி.

    இவர் நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வருகிறார். இந்நிலையில் முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மீதமுள்ள 55 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணத்தை கட்ட வேண்டுமென வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், பணம் கட்டாத மாணவிகளை கட்டாய விடுப்பு அளித்ததுடன் மாணவிகளை வகுப்பறையின் வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு மாணவி சுபாஷினி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பாசோதனைக்காக மாணவியின் உடலை அனுப்பி வைத்தனர்.

    மாணவி தற்கொலையால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் நாகூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கல்வி கட்டணத்தை கட்ட சொல்லி தொல்லை கொடுத்து, மாணவி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கல்லூரி கட்டணம் கட்டக்கூறி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளின் தற்கொலை சம்பவம் தொடர் கதையாகி வருவது வேதனையளிக்கிறது என்று உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வேதனையுடன் கூறினர்.

    இந்நிலையில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி வாசலில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காலை முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர்.

    இந்நிலையில் நாகூர் போலீஸ் நிலையத்தில் மாணவி சுபாஷினி பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கல்லூரி தாளாளரும் , நாகை ஊர்காவல் படை மண்டல தளபதியுமான ஆனந்த், கல்லூரி முதல்வர் லட்சுமி காந்தன், பிசியோதெரபி வகுப்பாசிரியர் ஜென்சி ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து போலீசார் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதால் போராட்டத்தை கைவிடுமாறு கூறினர்.

    நாகை அருகே மீன் பிடித்தபோது தாக்கி வலைகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் மீது மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சதிஷ், ஆறுமுகம், தமிழ்செல்வன். மீனவர்கள். இவர்கள் நேற்று காலை மீன் பிடிப்பதற்காக கோடியக்கரைக்கு தென்கிழக்கே லெனின் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள் பறித்து கடலில் கொட்டியதோடு 50 ஆயிரம் மதிப்புள்ள வலைகளையும் சேதபடுத்தினர். பின்னர் 3 மீனவர்களிடம் இருந்த செல்போன்களை எடுத்து சென்று விட்டனராம்.இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் இன்று மதியம் 12.30 மணியளவில் கரை திரும்பினர். இதையடுத்து 3 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.

    பின்னர் 3 பேரும் இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சக மீனவர்கள் மற்றும் உறவினர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
    நாகையில் அரசு அதிகாரிகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை சட்டயப்பர் மேல வீதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு குடும்ப அட்டை வாங்கி தருவது, சான்றிதழ்கள் வாங்கி தருவது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நாகை வட்ட வழங்கல் அலுவலர் மாதவனை தொடர்புகொண்டு தான் கொடுக்கும் புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களை விசாரிக்காமல் குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் வட்ட வழங்கல் அலுவலர் மாதவன் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீசார் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் உமாவை தொடர்புகொண்டு, தனியார் டிரஸ்ட் இடத்தை தனி நபருக்கு சட்டத்திற்கு புறம்பாக பட்டா மாறுதல் செய்து கேட்டு, மிரட்டி உள்ளார்.

    அதனை தொடர்ந்து நாகை தாசில்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகூர் போலீசார் பாஸ்கர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நாகை அருகே தொழிலாளி இடத்தை ஆக்கிரமித்த அ.தி.மு.க. நிர்வாகியிடம் கொட்டகையை பிரிக்ககோரி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்துள்ள பொரவச்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சுப்ரமணியன் & அதிர்ஷ்ட வாணி தம்பதியினர். இவர்கள் அதே தெருவில் உள்ள ஒரு இடத்தை வீடு கட்டுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினர்.

    இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வீடு கட்டாமல் இடத்தை போட்டு வைத்திருப்பதை பார்த்து வந்த அந்த பகுதியின் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோமதி மற்றும் அவருடைய தந்தை தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆக்கிரமிக்க திட்டம் போட்டுள்ளனர். அதனை தொடர்ந்து சுப்ரமணியன் தினக்கூலி வேலைக்கு சென்றதை பார்த்த அவர்கள், சரசரவென கீற்று கொட்டகை ஒன்றை அவ்விடத்தில் கட்டி இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

    பின்னர் கொட்டகை அமைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இடத்தின் உரிமையாளர் சுப்ரமணியன் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்திர சேகரின் சொத்து பட்டா மற்றும் ஆவணங்களை சரிபார்த்து இடத்தை மீட்டுகொடுக்க நடவடிக்கை எடுத்தனர். அதனை தொடர்ந்து கொட்டகையின் உள்ளே இருந்த பொருட்களை அப்புறப்படுத்திய போலீசார், கொட்டகையை பிரிக்க நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம் அருகே ஔவையார் கோவிலில் நடந்த ஆண்டு விழாவில் மும்மதத்தினர் பங்கேற்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா துளசியபட்டினம் கிராமத்தில் விஸ்வநாதர் ஔவையார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஔவைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த ஔவையார் கோவிலின் 48-வது ஆண்டு திருவிழா தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக நடைபெற்றது.

    விழாவிற்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்து பேசியதாவது:-

    அரசு சார்பில் நடத்தப் படும் இந்த விழாவை வருங்காலத்தில் மிகச் சிறப்பாக நடத்தவும், விஸ்வநாதர் ஔவை கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தவும் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் ஒத்துழைப்போடு வருங்காலத்தில் அவ்வாறு விழா சிறப்பாக நடத்தப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பின்பு ஔவையார் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு ஔவையார் வேடமிட்டு ஔவையார் பாடல் பாடப்பட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.

    விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கியது

    விழாவில் நாகை மாலி எம்.எல்.ஏ, அறநிலையத்துறை உதவி ஆணையர் இணை ஆணையர் தென்னரசு, செயல் அலுவலர் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் முருகையன், வழக்கறிஞர்கள் சீனிவாசன், அன்பரசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வைத்தியநாதன் கோமதி தனபாலன், ஊராட்சிமன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    நாகை அருகே மீன் பிடித்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
    நாகப்பட்டினம்:

    நாகூர் பட்டிணச்சேரியை சேர்ந்த மவின்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகூர் பட்டிணச்சேரியை சேர்ந்த ரகு உள்பட 12 மீனவர்கள் கடந்த 20-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தொடர்ந்து  தங்கி மீன் பிடித்தனர். 26-ந் தேதி நாகைக்கு வடகிழக்கே 118 கிலோமீட்டர் தொலைவிலும் கடலூருக்கு கிழக்கே 58 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது மீனவர் ரகு எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் சிலர் உடனே கடலில் குதித்து ரகுவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.  இதையடுத்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் இது குறித்து இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கடலோர போலீசார் கடலில் ரகுவை தேடி வருகின்றனர். 2 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை ரகுவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்ன ஆனார்? என்ற விவரம் தெரியாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழந்துள்ளனர்.

    இது குறித்து கரை திரும்பிய சக மீனவர்கள் கூறும்போது:

    கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் காரணமாக ரகு படகிலிருந்து தவறி விழுந்தார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கோஸ்ட்காட் மூலமாகவும் தேடும் பணி தொடர்கிறது என்றனர். மாயமான மீனவர் ரகுவிற்கு மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
    நாகை அருகே நண்பரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி ஆலங்குடிச்சேரி பகுதியை சேர்ந்த சௌரிராஜன் மகன் சரவணன் (வயது 48). கொத்தனார். இவரும் திட்டச்சேரி ப.கொந்தகை டி.ஆர்.பட்டினம் ரோட்டை சேர்ந்த காசிநாதன் மகன் ராஜா (வயது 49). கொத்தனார்.இருவரும் நண்பர்கள்.

    இந்த நிலையில் சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சிக்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து நேற்று முதல் நாள் சொந்த ஊரான ஆலங்குடிச்சேரிக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில் தனது நண்பர் ராஜாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு சரவணன் சென்றுள்ளார். அங்கு ராஜாவின் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வெளியூர் சென்றிருந்தனர்.

    சரவணன், ராஜா இருவரும் வீட்டில் மது அருந்தி உள்ளனர்.அப்போது ராஜா, சரவணனிடம் நாம் இருவரும் வேலைக்கு எங்கு சென்றாலும் ஒன்றாக தானே செல்வோம். பின்னர் எதற்காக என்னை விட்டுவிட்டு திருச்சி வேலைக்கு தனியாக சென்றாய் என கேட்டுள்ளார்.

    இதனால் மதுபோதையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராஜா அரிவாளை எடுத்து சரவணனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
     
    இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
    நாகை அருகே 39 பவுன் நகைகள், ரூ.15 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்த முருகன் (எ) வேல்ராஜ் என்பவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய வீட்டில் கடந்த 18-ந்தேதி நகை, பணம் உள்ளிட்டவைகள் திருட்டு போனது.

    முருகனின் மனைவி நாகலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம கும்பல் 39 பவுன் நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, 3 லட்சம் பணம் மற்றும் 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி மற்றும் டி.வி. உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    அதனை தொடர்ந்து கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது நாகையில் உள்ள பிரபல வெளிநாட்டு கரன்சி மாற்றுபவரிடம் நாகை கீரைக்கொல்லை தெரு பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவன், திருடப்பட்ட வெளிநாட்டு கரன்சியை இந்திய பணமாக மாற்றுவது குறித்து விவரம் கேட்டு சென்றுள்ளான்.

    இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் கீழ்வேளூர் போலீசார் ஊட்டியில் இருந்த கார்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நாகை செக்கடி தெரு கொறசேகர், சிவன் தெற்கு வீதி தளபதி காளிதாஸ், வடக்கு நல்லியான் தோட்டம் ஓச்சு பிரகாஷ் உள்ளிட்டோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து போலீசாருக்கு பயந்து திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் சரணடைந்த கொறசேகர், தளபதி காளிதாஸ், ஒச்சு பிரகாஷ் உள்ளிட்ட திருட்டு கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து கொள்ளையடித்த பொருட்களை மீட்டனர்.

    தொடர்ந்து மீட்கப்பட்ட பொருட்களை நாகை எஸ்.பி. ஜவஹர் உரிமையாளரிடம் ஒப்படைத்ததுடன், குற்றவாளிகளை விரைந்து பிடித்த இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசாரை பாராட்டினார்.
    அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வேதாரண்யம் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் தலைவரும், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவருமான தென்னரசு தலைமையில் நடந்தது. செயலாளர் சுபஹானி வரவேற்றார். பொருளாளர் சீனிவாசன் அறிக்கை வாசித்தார்.

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் வேதநாயகம், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், சுப்பிரமணியன், சாமிசெட்டி, உதயகுமார், கனகசுந்தரம், விஜயதிவாகர், சிவஞானம், ரஹ்மத்துல்லா, புயல்குமார், குமரசாமி, காதா¢முகைதீன், சுப்பராமன், நவாஸ்தீன், வசந்தி செல்வகுமார், மங்களதாஸ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

    2022-24 ஆகிய 3 ஆண்டுகளுக்குரிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபட்டனர். புதிய தலைவராக தென்னரசு, செயலாளராக சுபாஹானி, பொருளாளராக சீனிவாசன், துணைத் தலைவர்களாக சுப்பிரமணியன், ஆறுமுகம், துணைச் செயலாளர்களாக தங்கத்துரை, தமிழழகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை உறுப்பினர்கள் பாராட்டினர்.

    கூட்டத்தில் அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரெயில் பாதை பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக் கொள்வது.

    திருத்துறைப்பூண்டி சாலை வெட்டு குளம் காரியாபட்டினம் சாலை அரியாண்டிகுளம் ஆகியவற்றை தூர்வாரி சுத்தம் செய்து குளக்கரை சுவர், விளக்குகள் அமைக்க வேண்டும். நகருக்குள் வரும் லாரிகள் பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையூறாக முக்கிய வீதிகளில் நிறுத்தி வைக்காமல் நகருக்கு வெளியே லாரிகள் நிறுத்தும் இடம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    ×