என் மலர்
மயிலாடுதுறை
சீர்காழி அடுத்த குன்னம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பணிக்கு வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த குன்னம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு வரை 24 மணி நேரமும் மகப்பேறு உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகளுடன் இயங்கி வந்தது.
இப்பகுதியை சுற்றி உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவசர காலங்களில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நம்பியிருந்த நிலையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் கடந்த 7 மாதங்களாக காலை நேரத்தில் மட்டுமே இயங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மருத்துவர் பணிக்கு வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தியும், இருபத்தி நான்கு மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்க கோரியும் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே 100 க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிராமமக்கள் போராட்டத்தால் அப்பகுதி யில் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீ சார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தினர்.
அப்போது நாளை முதல் மருத்துவர் வழக்கம் போல் பணியில் இருப்பார்கள் என்றும் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கபடும் எனவும் சுகாதாரதுறை அதிகாரிகள் உறுதியளித்ததாக தெரிவி த்தனர்.அதனை ஏற்று கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மயிலாடுதுறையில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக பதிவு செய்த ஒப்பந்ததாரர்களுடன் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர்லலிதா தலைமையில் நடைபெற்றது.
அப்போது கலெக்டர் லலிதா பேசியதாவது:-
முதலமைச்சர் ஆணைப்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரார்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பணிகளும் தரமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் குறிப்பாக தமிழ்நாடு கிராமபுற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்க்குள் செய்து முடிக்க வேண்டும். சாலை பணிகள் நடைபெற்று வரும் பொழுது நான் நேரில் வந்து சாலைப் பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்க்கொள்வேன். எக்காரணம் கொண்டும் பணிகள் காலதாமதம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணைஇயக்குநர்மு ருகண்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி பொறியாளர் சாமிநாதன் மற்றும் ஊராட்சித்துறையில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் நடந்த தமிழ் சங்க விழாவில் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியை தெளிவாக கற்றுகொடுக்க வேண்டும் என பாடலாசிரியர் அறிவுமதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் சிங்கத் தமிழர் புகழ்பாடும் சங்கத் தமிழ் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிறுவனத் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். பெரியசாமி பாவலர் சிவ.கோ.ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறையூர் கருணாகரன் வரவேற்றார். விமலா நாகேஷ், சிவசுப்பிரமணியன், அபர்ணா, ஆகியோர் மதிப்புரை வழங்கினர். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் பேரவை தலைவர் முனைவர் சிவசங்கரன், தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை தலைவர் முனைவர் துரை குணசேகரன் தமிழ்ச் செம்மல் விருதுகளை பெற்றனர். மயிலாடுதுறை தமிழ்ச் சங்க சிறப்பு தலைவர் சிவலிங்கம், அறம் செய் அறக்கட்டளை சிவக்குமார், குறும்பட இயக்குனர் அய்யாசாமி ஆகியோர் மண்வள காப்பிலும், மனிதநேய வளர்ப்பிலும் பற்றிய சிறப்புரை வழங்கினார்.
தஞ்சை தனியெழிலன் எழுதிய உரைக்கட்டும் தமிழருக்கு என்னும் கவிதை நூலை திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் ராமச்சந்திரன், ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் தமிழருக்கா என்ற தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி பேசும்போது:-
தமிழ் மொழி வரும் காலங்களில் சிறுமை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காரணம் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் தமிழ் கற்றுக் கொடுப்பதில்லை. தமிழ் கலாச்சாரத்தை திராவிட மாடல் என்று அழைப்பது தமிழை அழிப்பதற்கான வழி என்றே கூறலாம். இதே நிலை நீடித்து வந்தால் உலகின் முதல் மொழி தமிழ் மொழியை சிதலம் அடைய செய்து அழித்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் காப்பா ற்றப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு வீட்டிலும் படித்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் மொழியும் தெளிவாக தவறு இல்லாமல் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில்தமிழ் வளர்ச்சி உதவி இயக்கு னர் அன்பரசி, நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் ராசகுமார், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என ஏராளமா னவர்கள் கலந்து கொண்ட னர். முடிவில் தமிழ் சங்க செயலாளர் மதுராந்தகன் நன்றி கூறினார்.
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உள்ள சின்னந்தியம்மன் கோவிலில் பாலஸ்தாபன விழா நடைபெற்றது.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட இருந்தது. கோவிலை இடிக்கக்கூடாது என கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டதோடு சாலை மறியல் போராட்டமும் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் புதிதாக கோவில் கட்ட டெண்டர் விடப்பட்டு பூமிபூஜை செய்த பிறகே கோயிலை அப்புறப்படுத்த வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்துசமய அறநிலையத்துறையால் டெண்டர் வெளியிட–ப்பட்டுள்ளது. இதனையடுத்து ஞாயிற்று–க்கிழமை காலை புதிய கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, பாலஸ்தாபன விழா நடைபெற்றது.காத்திருப்பு கே.ஆர் சந்திரசேகர சிவம் பூஜைகளை செய்வித்தார்.
பாலஸ்தாபன விழாவில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கோயில், திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் மா.அழகிரிசாமி, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில சிவானந்தம், கோயில் முன்னாள் அறங்காவலர் ராஜாங்கம், சொர்ணபுரீஸ்வரர் கோயில் அறங்காவலர் சோ.ராஜராஜன் மற்றும் குல தெய்வ வழிபாட்டுக்காரர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி சீர்காழி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
சீர்காழி:
தமிழக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவைக் கொண்டாடும் வகையில் சீர்காழி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சீர்காழியை அடுத்த எடமணல் நகராட்சி உரக் கிடங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பராயன், ஆணையர் (பொறுப்பு) ராஜகோபாலன், மேலாளர் காதர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தொடர்ந்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பலன்தரும் மற்றும் பழவகை மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ரமாமணி, கஸ்தூரிபாய், ராமு, பாலமுருகன், முபாரக்நித்யா தேவி பாலமுருகன், ஜெயந்தி பாபு, ரஹமத் நிஷா மற்றும் பணி தள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ராஜகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் குறுவை விதை நெல் சீர்காழி வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்தார்.
சீர்காழி:
சீர்காழி வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைநெல் ரகங்கள் மானிய விலையில் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என வேளாண் உதவி இயக்குனர் க.ராஜராஜன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சீர்காழி வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கு உகந்த ரகங்களான ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடுதுறை 53, கோ 51, அம்பை 16 ஆகிய குறுகிய கால நெல் ரகங்கள் நன்கு முளைப்புத்திறனுடன், கலவன்கள் இல்லாத, அரசு சான்று பெற்ற விதைகள் சீர்காழி, வைதீஸ்வரன் கோயில், காரைமேடு மற்றும் திருவெண்காடு வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் குறுவை நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய நடைமுறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார்.
மயிலாடுதுறை:
தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தடையை நீக்கும்படி அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பட்டினப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்ட மத குருமார்களும், பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமுகமான முடிவு எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அதன்பின்னர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து, தி.மு.க. ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார். பாரம்பரிய நடைமுறைக்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார், விருப்பப்பட்டுதான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்கின்றனர் என்றும் ஆதீனம் குறிப்பிட்டார்.
தமிழ் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என மயிலாடுதுறை கலெக்டரிடம் சிவாச்சாரியார் சங்கம் மனு அளித்தனர்.
தரங்கம்பாடி:
தமிழ் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் போக்கு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஆன்மீக மரபை அவமதித்தல், தமிழ் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியாரகள் சேவா சங்க மாவட்ட தலைவர் கணேச சிவாச்சாரியார், மாவட்ட செயலாளர் மகேஷ் குருக்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அளித்த மனுவில் கூறியதாவது. ஆன்மீகம் என்பது தமிழகத்தின் பெருமை. பல காலங்களாக இந்து மதத்தையும், அதன் அங்கமாக இருக்கக்கூடிய அனைத்து சமயங்களையும், எங்களது தெய்வங்களையும், தமிழ் தேசத்தின் இறை நம்பிக்கையையும் நாத்திக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
தருமபுரம் ஆதீனத்தின் ஆன்மீக விழாவிற்கு வந்த தமிழக ஆளுநரின் உயிருக்கே பங்கம் விளைவிக்கும் வகையில் கொடி கம்பம் எடுத்து கான்வாய் வழியில் வீசப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கடைப்பிடித்து வரும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி குருவுக்கும், சிஷ்யர்களுக்கும் இருக்கும் உன்னதான விஷயம். இதனைத் தடுக்கும் விதமாக செயல்படுவதோடு, ஆதீனகர்த்தரின் ஏதோ கெட்ட செயலுக்கு விளைவிக்கும் விதமாகவும் மறுபடியும் கோஷம் போடும் வேலையில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து புலன் விசாரணை செய்து இந்து மத மரபை அவமதித்து, தமிழ் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். சைவ குருமார்களின் நன் மதிப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளனர்.
தாண்டவன்குளம்அ ரசு பள்ளியில் தேசிய ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றியம் தாண்டவன் குளம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய ஆசிரியர் கூட்டணி சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் போகர் தமிழ்குமரன் தலைமை தாங்கினார்.ஆசிரியர் கவிதா வரவேற்றார்.நிர்வாகிகள் ராஜேந்திரன் லதா, சுஜாதா, மதிவாணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.கடந்த ஆறுமாத காலமாக தாண்டவன் குளம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் 6 ஆசிரியர்களுக்கும் மாத சம்பளம் வழங்கவில்லை.
2017-ம் ஆண்டுமுதல் தேர்வு நிலை ஊதியம், ஊக்க ஊதியம், சிறப்பு நிலை ஊதியம், ஊதிய உயர்வு வழங்கவில்லை.எனவே அனைத்து வகை ஊதியம் உள்ளிட்ட ஆறு மாத சம்பளத்தை உடனடியாக வழங்க 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காணாமல் போன ஆசிரிய ர்களின் பணிப்பதி வேடுகளை ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மா னங்கள் நிறைவே ற்றப்ப ட்டன. இதில் ஆசிரியர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு வழங்கினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பட்டா வழங்கிடக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ், சிங்காரவேலன், ரவிச்சந்திரன், மாரியப்பன், வெண்ணிலா, விஜயகாந்த் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
பின்னர் மனுக்களுடன் கலெக்டர் அலுவகத்திற்குள் நுழைந்தனர்.
கோயில், மடம், அறக்கட்டளை, வக்போர்டு, தேவாலயங்கள் மற்றும் நீர்நிலை புறம்போக்கில் நீண்டகாலமாக குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்கிடக்கோரி நடத்திய மனுகொடுக்கும் போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் சப் கலெக்டர் ராமச்சத்திரனிடம் மனுக்களை அளித்தனர்.
குத்தாலம் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 29 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இரா.லலிதா ஆய்வு மேற்க்கொண்டார்.
குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூவலூர், தேரிழுந்தூர், பழைய கூடலூர், கருப்பூர் காஞ்சுவை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பழைய கூடலூர் கிராம ஊராட்சியில் வெள்ள நிவாரண தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 22.65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற கட்டிட பணியினையும், ரூ.11 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியையும், ரூ.8.18 மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், ரூ.4.60 லட்சம் செலவில் தடுப்பணை கட்டும் பணியினையும், கருப்பூர் கிராம ஊராட்சியில் ரூ.2.76 லட்சம் மதிப்பில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணியையும்.ரூ18 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியையும், கஞ்சுவை கிராம ஊராட்சியில் 17.47 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையும் போன்ற பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது குத்தாலம் ஒன்றியக்குழுத்தலைவர் மகேந்திரன், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கஜேந்திரன், சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியை தடை செய்ய வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளை தடைசெய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட கலெக்டரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேலன், ரவிச்சந்தி ரன், வெண்ணிலா, விஜயகாந்த், இயற்கை விவசாயி மாப்படுகை அ.ராமலிங்கம், சீர்காழி ஒன்றிய செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகர செயலாளர், செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.தமிழகத்தின் ஏராளமான மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள கொள்ளிடம் ஆற்றில் (மாதிரவேளூர், வடரங்கம்) சட்டவிரோதமாக அமைக்க ப்பட்டுள்ள மணல்குவாரிகள் அதிக ஆழத்திற்கும் மேல் மணல் வளத்தை இரவு, பகலாக கொள்ளையடித்து வருகின்றன. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதையறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் சட்டவிரோத குவாரிகளின் விதிமீறல்களை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
நடவடிக்கை இல்லாத நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கும் போதே குவாரியின் ஏஜெண்டாக உள்ள பாமக பிரமுகர் லண்டன் அன்பழகன் என்பவர் சிலருடன் வந்து பொதுமக்களின் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கொள்ளிடம் மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தை நடத்திய பிறகும், மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும் இதுவரையிலும் சட்டவிரோதமாக செயல்படும் மணல்குவா ரிகளை மூட நடவடிக்கை எடுக்காத நிலையில் முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுப்பட்டனர்.விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் பாதுகாத்திட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய், கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணிகளை துரிதப்படுத்து, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் மாவட்ட மக்களுக்கு குடிநீரை உத்திரவாதப்படுத்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மணல் குவாரிகள் அமைத்து மணல் திருட்டு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இல்லை எனில் ஆற்றில் மணல் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்தி ஆற்றில் இறங்கி போராட்டத்தை நடத்துவோம் என மத்தியக் குழுவினர் அறிவித்தனர்.






