என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 2 பேர் பலியான நிலையில் நேற்று ஒரே நாளில் 503 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது வாலிபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 26-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த 1-ந் தேதி இறந்து விட்டார். கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் 66 வயது முதியவர். இவர் மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு உடல் பிரச்சினைகளுக்காக கடந்த 21-ந் தேதி சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் 30-ந் தேதி இறந்து விட்டார்.

    இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 503 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 440 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 ஆயிரத்து 106 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    3 ஆயிரத்து 211 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    போச்சம்பள்ளி தாலுகா கோட்டனூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 46). விவசாயி. இவர், தனது தங்கை தமிழ்செல்வி (43) மற்றும் பூங்கொடி (38) ஆகிய 2 பேருடன் மோட்டார்சைக்கிளில் போத்தனூர்-ராமாபுரம் சாலையில் பள்ளத்துகொட்டாய் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். பெரியசாமி, பூங்கொடி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் நேதாஜி நகர் பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காந்திநகர் சுப்பிரமணி (வயது 53), சந்திரன் (38), சுல்தான்பேட்டை ஷான்பாஷா (30) ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    ஊத்தங்கரை அருகே நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லாவி:

    ஊத்தங்கரை அருகே உள்ள வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் சுவேதா (வயது 21). இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கல்லை போட்டு கணவன் கொன்ற சம்பவம், வேப்பனப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேப்பனப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பாகலூர் பிராமின் தெரு, சந்தை வீதி பகுதியை சேர்ந்தவர் சென்னபசப்பா (வயது 44). விவசாயி. இவரது மனைவி கவுரம்மா (40). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கவுரம் மாவுக்கும், பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சென்ன பசப்பாவுக்கு தெரியாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். இதற்கிடையே மனைவி கவுரம்மாளும், பக்கத்து வீட்டுக்காரரும், வீட்டில் உல்லாசமாக இருந்ததை சென்னபசப்பா பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கவுரம்மாவை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஆரம்பித்து தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் சென்ன பசப்பாவுக்கும், கவுரம்மாளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் தகராறு முற்றி கடுமையான சண்டை போட்டனர். இதன்பிறகு சென்ன பசப்பா, இனிமேல் மனைவியிடம் பேசி பயன் இல்லை. கொலை செய்து விட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி நள்ளிரவில் மனைவி கவுரம்மாவிடம் நைசாக பேசி கொடுத்து கோவிலுக்கு செல்லலாம், வா என்று அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிளில் கவுரம்மாவை அழைத்துகொண்டு கே.என். போடூர் பஸ்வேஸ்வரப்பா கோவிலுக்கு கூட்டி சென்றார். அப்போது கோவிலின் பிண்புறம் சென்ற இருவரும் சிறிதுநேரம பேசிக்கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் கவுரம்மா மீது ஆத்திரத்தில் இருந்த சென்னபசப்பா, திடீரென அருகே கிடந்த கல்லை எடுத்து கவுரம்மா தலையில் போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த சென்னபசப்பா, அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து சென்ன பசப்பா, இன்று காலை ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி கவுரம்மாவை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று பஸ்வேஸ்வரப்பா கோவில் பின்புறம் கொலையுண்ட கிடந்த கவுரம்மா உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சென்ன பசப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    தோட்டங்களில் அறுவடை செய்த பூக்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வந்தாலும் அவற்றை விற்பனை செய்ய முடிவதில்லை என்று விவசாயிகள் கூறினர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெரிய அளவிலான பூ மார்க்கெட்டுகள் உள்ளன. ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமங்களிலிருந்து ரோஜா, சாமந்தி,மல்லி செண்டுமல்லி உள்ளிட்ட கொய்மலர்கள் நாள்தோறும் விற்பனைக்காக இந்த மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து தினமும் சுமார் 300 டன் அளவின பூக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்தநிலையில், அண்டை மாநிலங்களான கரநாடகம், ஆந்திரா கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு ஆகியவை நடைமுறையில் உள்ளதால் திருமண விழாக்கள், கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் சுபகாரியங்கள் மிகவும் குறைந்து விட்டது. மேலும் உள்ளூர் மற்றும் வெளிமாநில பூ வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டுகளுக்கு தற்போது வருவதில்லை. இதனால் தோட்டங்களில் அறுவடை செய்த பூக்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வந்தாலும் அவற்றை விற்பனை செய்ய முடிவதில்லை. இதனால் வேறுவழியின்றி பூக்களை சாலைகளில் கொட்டிச்செல்லும் அவல நிலை தொடர்கிறது என மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.


    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


    தளி

    இந்திய கம்யூனிஸ்ட்

    ஓசூர்

    அதிமுக

    வேப்பனஹள்ளி

    கடும் போட்டி

    கிருஷ்ணகிரி

    திமுக

    பர்கூர்

    திமுக

    ஊத்தங்கரை

    காங்கிரஸ்

    தளி வனப்பகுதியில் நீண்ட நேரம் யானைகள் கூட்டம் குட்டிகளுடன் ஏரியில் உள்ள தண்ணீரை குடித்து மகிழ்ச்சியாக இருந்தது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் வாழும் காட்டு யானைகள், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் கோடையை சமாளிக்க நீர் நிரம்பியுள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து வருகின்றன.

    வனத்துறையினரும் வனப்பகுதியின் பல இடங்களில் குட்டைகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி விலங்குகளின் குடிநீர் தாகத்தை தீர்த்து வருகின்றனர். இந்தநிலையில் தளி வனப்பகுதியில் சென்னமாலம் என்ற கிராமத்தின் அருகே சின்னையன் ஏரியில் மழை பெய்து அதிக அளவில் தண்ணீர் உள்ளது.

    இந்த ஏரிக்கு அடிக்கடி வரும் காட்டு யானைகள் கூட்டம் தண்ணீர் குடித்து தாகத்தை போக்கி செல்கின்றன. அதேபோல நேற்று குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட யானைகள் கோடை வெயிலை சமாளிக்க ஏரிக்குள் இறங்கி தண்ணீர் குடித்து தாகத்தை தணித்தன. நீண்ட நேரம் யானைகள் கூட்டம் குட்டிகளுடன் ஏரியில் உள்ள தண்ணீரை குடித்து மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் அந்த யானைகள் அனைத்தும் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 300 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி சென்றார்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாநில எல்லைகளில் வாகனங்களை ஆய்வுக்கு பிறகு அனுமதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 300 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி சென்றார்.

    அங்கு கொரோனா பாதித்து அனுமதிக்கப்பட்டுள்ள 125 நோயாளிகளை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, உணவு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்கள் அனைவரும் உரிய மருந்தை எடுத்துக் கொண்டு, பூரண குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அப்போது மாவட்ட தொற்றா நோய் திட்ட அலுவலர் திருலோகன், மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார், பஞ்சேஸ்வரம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஒன்னுப்பள்ளி வெங்கடசாமி (வயது 39), பஞ்சேஸ்வரம் சிவானந்தா (37), கொரட்டகிரி சந்திரப்பா (50) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.150-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஊத்தங்கரை போலீசார், பாம்பாறு அணை அருகே ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த மாரம்பட்டி பிரசாந்த் (27), கணேசன் (27) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல், கந்திகுப்பம் போலீசார் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த சண்முகம் (48), முருகன் (47), ராமசாமி (60) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.3,400-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.3,850 பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 483 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதத்தில் நாள்தோறும் 10 முதல் 20 பேர் வரையில் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மாதத்தில் தொடக்கம் முதலே நாள்தோறும் 100 பேரை தாண்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 483 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 327 பேர் சிகிச்சையில் குணமடைந்து நேற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 12 ஆயிரத்து 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 ஆயிரத்து 46 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 574 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    காவேரிப்பட்டணம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    காவேரிப்பட்டணம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு வரதபால்யா பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 44). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. 

    சம்பவத்தன்று பெரியசாமி காவேரிப்பட்டணம் அருகே பந்தேரியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பெரியசாமி பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×