என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 759 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 72 பேர் குணமாகினர். இதுவரை 39 ஆயிரத்து 754 பேர் குணமாகி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 693 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 312 பேர் பலியாகி உள்ளனர்.
    ராயக்கோட்டையில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு வேனில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதியில், ரேஷன் பொருட்களை வாங்கி கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி வருவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சக்கரை மற்றும் போலீசார் அனுசோனை பஸ் நிறுத்தம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கெலமங்கலம் நோக்கி சென்ற சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 2½ டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கே.செட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 27) என்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் ராயக்கோட்டை, நெல்லூர் பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து டிரைவர் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வேன் மற்றும் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ரேஷன் அரிசியை கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசாமி, தென்னரசு ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த ரேஷன் அரிசி கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    அஞ்செட்டி போலீசார் பாண்டுரங்கன்தொட்டி பக்கமாக ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே ஊரை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 33), பெரியசாமி (44), சக்திவேல் (24), பேட்டரஅள்ளி பச்சியப்பன் (41) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ரூ.21 லட்சம் பணம் மற்றும் 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவரது சொந்த ஊர் பாவக்கல் ஆகும். 

    இவர் பெங்களுருவில் கட்டிட ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவக்குமாரின் மாமனார் இறந்தார். அதற்காக சிவக்குமார் குடும்பத்துடன் கோவைக்கு சென்றார். இந்த சிவக்குமாரின் வீடு அருகில் வசந்தகுமார் (37) என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். 

    இந்த நிலையில் சிவக்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகியோரின் வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் நேற்று இருந்தது.

    இதை சிவக்குமாரின் தம்பி செந்தில்குமார் பார்த்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். 

    அதில் சிவக்குமாரின் வீட்டில் ரூ.21  லட்சம் ரொக்கமும், 18  பவுன் தங்க நகைகளும், வசந்தகுமார் வீட்டில் ரூ.30 ஆயிரம் பணமும்,  இரண்டு ஜோடி வெள்ளி கொலுசுகள்  திருட்டு  திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. 

    சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாவக்கல் கிராமத்தில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை விற்று அதில் வந்த பணம் ரூ.21 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார். அந்த பணமும், நகைகளும் திருட்டு போய் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த திருட்டு குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதேபோல கைரேகை நிபுணர்களும் திருட்டு நடந்த வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஊத்தங்கரையில் ஒரே பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் ரூ.21 லட்சம் ரொக்கம், 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

    இதற்கிடையே இந்த துணிகர கொள்ளை குறித்து விசாரிக்க சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 

    இதில் சிவகுமாரின் அக்காள் மகன், மற்றும் வீட்டு வேலைக்காரப் பெண் ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்துள்ளனர். 

    எனவே கடைசியாக வீட்டுக்குள் இருந்த அவர்கள் இருவரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர். 
    செல்போன் சிக்னல் கிடைக்காததால் குடிநீர் தொட்டி மீது அமர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காளிங்காவரம் ஊராட்சியில், மட்டம்பள்ளி, அக்ரஹாரம், காளிங்காவரம், கொடிதிம்மனப்பள்ளி ஜவுக்குபள்ளம், தின்னூர், குருமூர்த்தி கொட்டாய் என 7 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகளின்றி, மாணவர்கள் வீடுகளிலேயே இருப்பதால் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். காளிங்காவரம் ஊராட்சியில் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட எந்த தொலை தொடர்பு நிறுவனங்களின் கோபுரங்களும் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர்.

    இதனால் அவர்கள் கைகளில் செல்போன், புத்தகங்களுடன் உயர்ந்த மலைப்பகுதிக்கும், அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் மீதும் ஏறி அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். மாணவிகள் அந்த பகுதிகளில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

    இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-

    இந்த கிராமத்தில் சரியான முறையில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. மேலும் ஆன்லைன் தேர்வுகளில் அவர்களால் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறைந்துவிட்டது.

    இந்த பகுதியில், செல்போன் கோபுரம் அமைக்க நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கர்ப்பிணிகள், விபத்தில் சிக்கியவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்களை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. அவசர தேவைக்காக செல்போன் சிக்னல் கிடைக்கும் பகுதியை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

    மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
    ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் அருகே ஜூஜூ வாடி செந்தில் நகரை சேர்ந்தவர் சென்னப்பா (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர், தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர் அருகே ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் அன்னை நகர் பக்கமுள்ள ரெயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் நேற்று பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் அஞ்செட்டி அருகே மிட்டதார்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    மத்தூர் அருகே முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள களர்பதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 38). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அதேபகுதியை சேர்ந்த வேடியப்பன் (32), விஸ்வநாதன் (25) உள்ளிட்டோர் மலையாண்டஅள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த பசுபதி தரப்பினர் உதயகுமார், வேடியப்பன், விஸ்வநாதன் உள்ளிட்டோரை முன்விரோதம் காரணமாக தாக்கினார்கள். இதுகுறித்து உதயகுமார் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவான பரத் (21) என்பவரை தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே சரக்கு வேன் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்தி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 62). இவர் அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை பொருட்களை வாங்கி வருவதற்கு, சொந்தமாக சரக்கு வேன் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் மளிகை கடை முன்பு சரக்கு வேனை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை பார்த்த போது சரக்கு வேன் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து முனிரத்தினம் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    அஞ்செட்டி போலீசார் தொட்டள்ளா ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கொடிபாளையம் மாதேஷ் என்கிற தென்றல் மாதேஷ் (வயது 40), தேவன் தொட்டி ருத்ர மாதைய்யா (31), ஸ்ரீ கந்தப்பா (42), மாதேவன் (41), கிருஷ்ணன் (35) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஓசூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 41). இவர் கெலமங்கலத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாக அதிகாரியாக உள்ளார். மத்திகிரி பகுதியில் உள்ள தனது நிலத்தை விற்ற ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துடன் காரில் பள்ளிக்கு வந்தார். காரில் பணத்தை வைத்து விட்டு, பள்ளி வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் காரில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    கிருஷ்ணகிரி அருகே மொபட் கவிழ்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாது (வயது 45). இவர், கணவர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பழைய பேயனப்பள்ளி அருகே சென்ற போது திடீரென நிலைதடுமாறி மொபட் கவிழ்ந்தது. இதில் மாது பலத்த காயம் அடைந்தார். கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாது சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    ×