என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் வசந்தகிருஷ்ணன் (வயது 26). சம்பவத்தன்று இவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வசந்த கிருஷ்ணன் இறந்து விட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பணம் வைத்து சூதாடிய 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடியதாக வெப்பாலம்பட்டி மகேந்திரன் (வயது 43), மோகன் (24), ரங்கநாதன் (30), வெற்றிவேல் (37), சேவகானப்பள்ளி முனிராஜ் (25), முத்துராயன்தொட்டி பாலாஜி (23), மாதப்பன் (25), சீனிவாஸ் (35), சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கதிரிப்பட்டி வீரமுத்து (30), பெரிய பேட்டிகானப்பள்ளி முருகன் (42), பேட்டிகானப்பள்ளி சிவா (23), சோனரஹள்ளி சரவணன் (31), பெரியசாமி (42), பூங்காவனம் (53), சக்தி (45) ஆகிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1,600 பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 24 பேர் பாதிக்கப்பட்டனர். 57 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர், 45 வயது பெண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி, சேலம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 24 பேர் பாதிக்கப்பட்டனர். 57 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 40 ஆயிரத்து 137 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 523 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது.
புகையிலை பொருட்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அந்த வகையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற பர்கூர் யாரப் பாஷா (வயது 49), குந்துமாரனப்பள்ளி சிவக்குமார் (25), பச்சப்பனட்டி வெங்கடராஜ் (30), கவுதாளம் மஞ்சு (27), தேன்கனிக்கோட்டை முஜிசிம் (26), நடராஜ் (31) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் 60 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாரூர் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
பாரூர் அருகே உள்ள வெற்றிலைக்காரனூரை சேர்ந்தவர் சேட்டு (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சேட்டு விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சேட்டு இறந்து விட்டார். இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் கொள்ளையர்களிடம் இருந்து ரூ.1¾ கோடி மதிப்பிலான நகைகள், பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
தமிழக எல்லையான ஓசூர் அருகே உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூரு ரூரல் மாவட்டத்திற்குட்பட்டது ஆனேக்கல் தாலுகா. இந்த தாலுகாவில், சர்ஜாபுரா, சூர்யா நகர், அத்திப்பள்ளி, பன்னேர்கட்டா உள்ளிட்ட பகுதிகளில் 7 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
இந்த போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி என 37 வழக்குகள் பதிவாகின. அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 56 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 இரு சக்கர வாகனங்கள், தங்க நகைகள், பணம், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 75 லட்சம் ஆகும்.
குற்றவாளிகளை கைது செய்து, நகைகள், பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசாரை கர்நாடக மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் சுமார் 4 கிலோமீட்டருக்கு அணிவகுத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு வாகனங்களில் வரும் உள்ளூரை சேர்ந்த பிரமுகர்கள் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. சுங்கச்சாவடி ஊழியர்கள், அவர்களிடம் கட்டணம் கேட்டாலும் செலுத்த மறுக்கின்றனர். இது சம்பந்தமாக இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது உண்டு.
அதேபோல் நேற்றும் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி வழியாக சென்ற உள்ளூர் வாகனங்களை கட்டணம் செலுத்துமாறு ஊழியர்கள் அறிவுறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றி நீண்டுகொண்டே சென்றதால், அத்திப்பள்ளி பகுதியில் இருந்து மூக்கண்டப்பள்ளி வரை சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.
இதன் காரணமாக ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அத்திப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மேலும் போக்குவரத்தை சீரமைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் நிறுவன காவலாளியை அடித்துக்கொலை செய்த வழக்கில் அவரது மனைவியின் உறவினர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை:
கர்நாடக மாநிலம் பெங்களூரு மங்கம்மாபாளையத்தை சேர்ந்தவர் முகமது இம்ரான் (வயது 32). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூரை சேர்ந்த கன்னுபீ என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். கன்னுபீ கெலமங்கலத்தில் வசித்து வந்தார். இவரை சந்தித்து சமாதானம் செய்து குடும்பம் நடத்த முகமது இம்ரான் அடிக்கடி தொட்டபேளூர் கிராமத்திற்கு வந்தார். அவரை உறவினர்கள் சிலர் சந்திக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை இருந்தது.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு முகமது இம்ரான் தொட்டபேளூருக்கு வந்தார். இதை அறிந்த கன்னுபீயின் உறவினர்களான கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்த அப்துல் சித்திக் (26), முகமது மாலிக் (30), கானு சாகிப் (20), அப்துல் ரகுமான் (23) மற்றும் தொட்ட பேளூர் ஜமீர் (32) ஆகிய 5 பேரும் சேர்ந்து சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகில் முகமது இம்ரானை வழிமறித்தனர்.
அவர்கள் முகமது இம்ரானை கட்டையால் தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முகமது இம்ரான் நேற்று முன்தினம் இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் முதலில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அப்துல் சித்திக். முகமது மாலிக், கானு சாகிப், அப்துல் ரகுமான், ஜமீர் ஆகிய 5 பேரையும் கெலமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாரின் ரோந்து பணியை ஓசூரில் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தங்கள் பகுதிகளில் இரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி அறிவுறுத்தினார். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி, முதற்கட்டமாக ஓசூர் டவுன், அட்கோ, சிப்காட், மத்திகிரி, பேரிகை, பாகலூர் ஆகிய 6 போலீஸ் நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஓசூரில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கலந்து கொண்டு, ஒரு போலீஸ் நிலையத்திற்கு 3 போலீசார் வீதம் 18 பேருக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கினார். பின்னர் போலீசாரின் ரோந்து பணியை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கக்கோரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
தமிழகத்திற்கு 14 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை 4 ரோட்டில் உள்ள அண்ணாசிலை அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் கெம்பன் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் தொட்ட திம்மனஅள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சென்றாயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்டார தலைவர் தொட்டன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
ஊத்தங்கரை அருகே உள்ள அனுமந்தீர்த்தத்தில் இளைஞர் பெருமன்றம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணை தலைவர் கலைக்கோவன் தலைமை தாங்கினார். வட்ட துணை செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சேகர் பேசினார். இதில் கொரோனா தடுப்பூசி வழங்குவதில் தமிழக அரசுக்கு பாகுபாடு காட்டக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கபிலன், மகளிர் ஒன்றிய பொறுப்பாளர் ரஜியாபேகம் மற்றும் முத்து, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் முகுந்தன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் சாகுல் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் சம்பேக்லாலு நாகராஜ், சென்னீரப்பா உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
தேனி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 650 ஆக அதிகரித்தது. இதுவரை இந்த வைரஸ் 506 பேர் உயிரை பறித்துள்ளது. நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் நேற்று குணமாகினர். தற்போது இந்த வைரஸ் பாதிப்புடன் 331 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே வாகனம் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
தேன்கனிக்கோட்டையை அடுத்த ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 52). சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று மாலை அவர் தனது மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மிட்டப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்த தமிழ்ச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






