search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெலமங்கலம் அருகே தனியார் நிறுவன காவலாளி கொலையில், கைதான 5 பேரையும் படத்தில் காணலாம்.
    X
    கெலமங்கலம் அருகே தனியார் நிறுவன காவலாளி கொலையில், கைதான 5 பேரையும் படத்தில் காணலாம்.

    தனியார் நிறுவன காவலாளி அடித்துக்கொலை - மனைவியின் உறவினர்கள் 5 பேர் கைது

    தனியார் நிறுவன காவலாளியை அடித்துக்கொலை செய்த வழக்கில் அவரது மனைவியின் உறவினர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராயக்கோட்டை:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மங்கம்மாபாளையத்தை சேர்ந்தவர் முகமது இம்ரான் (வயது 32). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூரை சேர்ந்த கன்னுபீ என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். கன்னுபீ கெலமங்கலத்தில் வசித்து வந்தார். இவரை சந்தித்து சமாதானம் செய்து குடும்பம் நடத்த முகமது இம்ரான் அடிக்கடி தொட்டபேளூர் கிராமத்திற்கு வந்தார். அவரை உறவினர்கள் சிலர் சந்திக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு முகமது இம்ரான் தொட்டபேளூருக்கு வந்தார். இதை அறிந்த கன்னுபீயின் உறவினர்களான கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்த அப்துல் சித்திக் (26), முகமது மாலிக் (30), கானு சாகிப் (20), அப்துல் ரகுமான் (23) மற்றும் தொட்ட பேளூர் ஜமீர் (32) ஆகிய 5 பேரும் சேர்ந்து சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகில் முகமது இம்ரானை வழிமறித்தனர்.

    அவர்கள் முகமது இம்ரானை கட்டையால் தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முகமது இம்ரான் நேற்று முன்தினம் இறந்தார்.

    இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் முதலில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அப்துல் சித்திக். முகமது மாலிக், கானு சாகிப், அப்துல் ரகுமான், ஜமீர் ஆகிய 5 பேரையும் கெலமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×