என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மாடு மேய்த்த பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த சாமந்த மலையை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பத்து (வயது 45).

    இந்த நிலையில் நேற்று பத்து, தனது மாடுகளை மேய்ச்சலுக்காக வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்து இருந்த 2 நபர்கள் திடீரென பத்து மீது மிளகாய் பொடியை தூவி தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

    பின்னர் அவர் காதில் அணிந்திருந்த தங்கத்தோடு மற்றும் காலில் அணிந்திருந்த கொலுசுகள் மர்ம கும்பல் எடுத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும்.

    இந்த சம்பவம் பற்றி குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது உறவினர்கள் மணி, பெருமாள் ஆகியோர் முன்விரோதம் காரணமாக நகை பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கிருஷ்ணகிரி அருகே உள்ள உப்புக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 36). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 27-ந் தேதி இரவு கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாலகுறி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வேன் மோதி தூக்கி வீசப்பட்ட பவுன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பவுன்ராஜின் மனைவி குப்பம்மாள் (32) அளித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒற்றை யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் ராயக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தேவநத்தம் ஊராட்சி நார்ப்பனட்டி கிராமத்தை சேர்ந்தவர் பஜப்பா (வயது 70). விவசாயி, இவருக்கு 2 மனைவிகளும், 6 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் பஜப்பா, ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். இதனால் நேற்று மதியம் தனது மாடுகளை ராயக்கோட்டை வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

    பின்னர் அவர் மாடுகளை ஓட்டி வர வனப்பகுதிக்கு சென்றார். அதன்பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் , இரவு முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் பஜப்பா, உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஒற்றை யானை தாக்கி பஜப்பா பலியானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் ராயக்கோட்டை வனச்சரகர் நாகராஜன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

    பின்னர் ஒற்றை யானை தாக்கி பலியான பஜப்பா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து வனப்பகுதியில் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஒற்றை யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் ராயக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மத்தூர் அருகே வி‌ஷ பாம்பு கடித்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெரமகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கார வேலன். விவசாயி. இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு நீத்திஷ் (வயது 5) என்ற மகனும், தன்சிகா (3) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சிறுமி தன்சிகா நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மல்லிகை பூந்தோட்டத்தின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை தன்சிகாவை வி‌ஷ பாம்பு கடித்துள்ளது.

    இதனையடுத்து குழந்தை அழுகை சத்ததால் புனிதா விரைந்து வந்து பார்த்தார். அப்போது குழந்தைக்கு பாம்பு கடித்தது தெரிய வந்தது.

    இதையடுத்து உடனடியாக மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தன்சிகாவை சேர்த்தனர். அங்கு டாக்டர்கள், குழந்தை தன்சிகாவை பரிசோதித்து பார்த்து ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    வி‌ஷ பாம்பு கடித்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    அடர்ந்த வனப்பகுதி வழியாக 15 கி.மீ. தூரம் நடந்து சென்று மலைக்கிராம மக்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறைகளை கேட்டார். அப்போது அவர்களுக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் என்று கூறினார்.
    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு சுகாதார பணிகள், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த அவர் இரவு கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்தில் தங்கினார்.

    தொடர்ந்து நேற்று கொடகரை, காமகிரி, மூக்கன்கரை மலைக்கிராமங்களில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மூக்கன்கரை மலைக்கிராமத்தில் வீடு, வீடாக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்டம் மூக்கன்கரை மலைக்கிராமத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி பகுதிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயணமாக சென்றார். அப்போது வழியில் உள்ள மலைக்கிராம மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், இங்குள்ள மலைக்கிராம மக்கள் சுகாதார நிலையம், 108 அவசர ஆம்புலன்ஸ் வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை என பல கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

    தற்போது கொடகரை, காமகிரி கிராமங்களுக்கு அவசர சிகிச்சைக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அரசு துணை சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள மலைக்கிராமத்தில் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்டது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரி அருகே மொபட் மீது கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, வீரப்பன் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 69). இவர் அதே பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து கடை வைத்திருந்தார். சம்பவத்தன்று அவர்மொபட்டில் தண்டேகுப்பம் கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முதியவர் இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போலீசாரால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி சிலர் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே பையூர் பக்கமுள்ள ஆத்தோரன் கொட்டாய் வழியாக நேற்று முன்தினம் இரவு கல்பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை ரோந்து பணியில் இருந்த போலீசார் நிறுத்தினார்கள். அப்போது பின்னால் வந்த டாரஸ் லாரி முன்னால் நின்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. போலீசாரால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி சிலர் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ்காரர் சரவணனை சிலர் தாக்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர். இதுதொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தோரன்கொட்டாய் குட்டி என்கிற சுப்பிரமணி (40), சிபி சக்கரவர்த்தி (28), சக்திவேல் (30), செல்வம் (30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலம் சிலரை தேடி வருகிறார்கள். இந்த சாலை மறியலால் கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 47 பேரை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்று போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். கடந்த 22-ந் தேதி மாவட்டம் முழுவதும் நடந்த அதிரடி சோதனையில் பான்மசாலா, பான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்ற 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் குடோன்களில் இந்த சோதனை நடந்தது.

    மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, மகாராஜகடை, வேப்பனப்பள்ளி, ஓசூர், சூளகிரி, மத்திகிரி, பாகலூர், பர்கூர், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம், தளி, அஞ்செட்டி, ஊத்தங்கரை, கல்லாவி, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனை நடந்தது.

    இதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்றதாக காரிமங்கலம் பிரபு (வயது 37), குருபரப்பள்ளி பிரபாகரன் (29), பெலவர்த்தி ராஜேந்திரன் (43), தீர்த்தம் சங்கர் (48) உள்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் லிங்கனம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரிந்தது. இதனால் கடையின் உரிமையாளரான சின்னமுனியப்பன் (47), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    மத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாதேஷ் என்பவரது கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாதேசை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், மற்றும் போலீசார் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர்கள் ராஜேஷ் (வயது31), ஜபருல்லா (35), சபரிசன் (35), வெங்கடேஷ்பாபு (39) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது கடைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சத்து 8 ஆயிரத்து 555 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    தேன்கனிக்கோட்டைஅருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சித்தப்பாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே பேடரஅள்ளி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி.

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அதேபகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது21).

    இந்த நிலையில் கேசவன் உறவினர் என்பதால் அடிக்கடி அந்த சிறுமி வீட்டிற்கு சென்று வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சிறுமியும், கேசவனும் நெருங்கி பழகினர்.

    கேசவன் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட அந்தசிறுமி அவருடன் பல இடங்களில் ஊர் சுற்றியுள்ளார். அப்போது கேசவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து கடந்த மே மாதம் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் சிறுமியை பெற்றோரை தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் விசாரித்து கேசவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

    கேசவன் அந்த சிறுமிக்கு சித்தப்பா உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய கேசவனின் உறவினர்கள் சூர்யா என்கிற அழகேசன், பச்சமுத்து (25), ஆனந்தன் (28), பச்சியப்பன் (32), கிருஷ்ணன் (30) ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதான 6 பேரையும் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தில் கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    தேன்கனிக்கோட்டை துணைக்கோட்ட பகுதிகளில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ராயக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை போலீஸ் துணை கோட்ட பகுதிகளில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை துணை போலீ்ஸ் சூப்பிரண்டு கிருத்திகா, இன்ஸ்பெக்டர்கள் ராயக்கோட்டை சுப்பிரமணி, தேன்கனிக்கோட்டை சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், சிவராஜ், சரவணன், நாகமணி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் தேன்கனிக்கோட்டை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த தனிப்படையினர், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த 20 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதையடுத்து கெலமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீஸ் அதிகாரிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    தேன்கனிக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தளி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 நாட்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

    இந்த சோதனையில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்போர் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். இந்த வேண்டுகோளை மீறும்பட்சத்தில், நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை போலீசார் கண்டுபிடித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு போலீஸ்சூப்பிரண்டு கூறினார்

    கெலமங்கலம் அருகே நாட்டுத் துப்பாக்கிளை பதுக்கி வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் கள்ளத்துப்பாக்கிகள் பயன்பாடு கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நேற்று தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. கிருத்திகா, கெலமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் குழு அமைத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரப்படுத்தினர்.

    கெலமங்கலம் வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தேடுதல் வேட்டையை முடக்கி விட்டனர். அப்போது லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது 47), பேவநத்தம கிராமம் திம்மராயன் (42), காடு லக்க சந்திரம் கிராமம் மாரப்பா (45), இருள பட்டி கிராமம் நாகராஜ் (37), உப்பு பள்ளம் முரளி (25) ,திம்மராயப்பா (50), சங்கரப்பா (60) ஆகியோர் வனவிலங்குகளை வேட்டைக்காக உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அவரை களை கைது செய்த போலீசார் மறைத்து வைத்திருந்த 7 துப்பாக்கிகளை கைப்பற்றினர். விசாரணையில் கெலமங்கலத்தில் பூஜை பொருட்கள் விற்பனை கடை நடத்தி வரும் சீனிவாசன் (45) என்பவர் 7 பேருக்கும் வெடிமருந்து பொருட்கள் மற்றும் கரி மருந்து, பால்ரஸ் குண்டு ரவைகளை சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சீனிவாசனை போலீசார் கைது செய்தனர் .

    இந்த பகுதியில் 7 கள்ளத் துப்பாக்கிகள் போலீசார் கைப்பற்றி உள்ள சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    ×