search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒற்றை யானை தாக்கி பலியான பஜப்பா.
    X
    ஒற்றை யானை தாக்கி பலியான பஜப்பா.

    ராயக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி முதியவர் பலி

    ஒற்றை யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் ராயக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தேவநத்தம் ஊராட்சி நார்ப்பனட்டி கிராமத்தை சேர்ந்தவர் பஜப்பா (வயது 70). விவசாயி, இவருக்கு 2 மனைவிகளும், 6 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் பஜப்பா, ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். இதனால் நேற்று மதியம் தனது மாடுகளை ராயக்கோட்டை வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

    பின்னர் அவர் மாடுகளை ஓட்டி வர வனப்பகுதிக்கு சென்றார். அதன்பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் , இரவு முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் பஜப்பா, உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஒற்றை யானை தாக்கி பஜப்பா பலியானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் ராயக்கோட்டை வனச்சரகர் நாகராஜன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

    பின்னர் ஒற்றை யானை தாக்கி பலியான பஜப்பா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து வனப்பகுதியில் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஒற்றை யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் ராயக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×