என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா நடந்தது.
    • தற்போது, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, மீண்டும் மஞ்சபை விழிப்புணர்வு, அறிவு திறனை வளர்த்துக்கொள்ளும் விதமாக புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா நடந்தது.

    இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, எம்.பி செல்லகுமார், எம்.எல்.ஏ-க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், 360 பயனாளிகளுக்கு ரூ.1.53 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தொடர்ந்து, கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ மாணவியர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகளை அமைச்சர் தொடங்கி வைத்து பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஒற்றுமையும் பேணி பாதுகாக்கும் வகையில் தற்போது பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம், அரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, மீண்டும் மஞ்சபை விழிப்புணர்வு, அறிவு திறனை வளர்த்துக்கொள்ளும் விதமாக புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    இக்கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் பார்வையிட்டு பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாட, அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். தொடர்ந்து, கலை திருவிழாவில் மாநில அளவில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்கு குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், பிஆர்ஓ., மோகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், நகராட்சி தலைவர் பரிதாநவாப், முன்னாள் எம்பி சுகவனம், வெற்றிச்செல்வன் உள்ளட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • ரோட்டை கடந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

    மத்தூர்,

    பெங்களூரில் இருந்து 50 பேர் அரசு பேருந்து ஒன்றில் ஓம்சக்தி கோவிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டி ருந்தனர். அப்போது சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டப்பள்ளி என்ற இடத்தில் இயற்ைக உபாதைகள் கழிப்பதற்காக ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி உள்ளார். அப்போது பெங்களூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த காயத்ரி (55) என்பவர் ரோட்டை கடந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்தவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காசநோயால் பாதிக்கப்பட்ட 10 நபர்களுக்கு ஊட்டசத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பட்டிணம் வட்டார மருத்துவர் தாமரைசெல்வி தலைமை வகித்தார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள காசநோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் பிஎம்ஐ அளவு மிகவும் குறைவாகவும் மற்றும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள காசநோயால் பாதிக்கப்பட்ட 10 நபர்களுக்கு ஊட்டசத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பட்டிணம் வட்டார மருத்துவர் தாமரைசெல்வி தலைமை வகித்தார். பாரூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரவிகுமார், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாரூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி ஊட்டசத்து பொருட்கள் வழங்கினார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பிரபு, டிபி.சாம்பியன் சிவரஞ்சனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • தொண்டர்கள், கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.அசோக்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    எனவே கட்சியின் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள், கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூத்தரசன் தலைமை தாங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளியில் சங்கமம் 2023 பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளியின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

    பள்ளி முதலவர் அசோக் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஓசூர் வேளாங்கண்ணி பள்ளி முதல்வர் ராஜேந்திரன், அறிஞர் அண்ணா கலை கல்லூரியின் முதல்வர் தனபால், பொறியாளர் சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தொழில் முறை நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை கொண்டு தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம், தவில், நாதஸ்வரம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    பெற்றோர்களுக்கு தனியாக கயிறு இழுத்தல், உரி அடித்தல், கோலப்போட்டி, சாக்குப்பை ஓட்டம், நடனம் ஆகிய போடடிகள் நடத்தப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் விழாவில் பங்கேற்ற பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • கல்லூரியின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள் குத்து விளக்கேற்றினார். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தாளாளர் பெருமாள் பேசும் போது அனைவரும் பழந்தமிழர்களின் வாழ்வியல் முறைகளை பின்பற்றி, இயற்கையை பாதுகாத்து இனிய வாழ்க்கை வாழ வேண்டும். நிலம், நீர், காற்று மாசுபடுவதை தவிர்த்து நமது முன்னோர்களின் தொன்மைகளை இளைஞர்கள் மீட்டெடுக்க வேண்டும் என வாழ்த்தினார்.

    விழாவையொட்டி மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டான கபடி, சிலம்பம் ஆகியவை நடத்தப்பட்டது. மேலும் மாணவர்கள், பேராசிரியர்களின் தனி திறன்களை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

    • கணவன் மனைவி இடையே குடும்ப தகறாரு ஏற்பட்டுள்ளது.
    • தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி பிரியதர்சினி (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது.

    குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகறாரு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லட்சுமணன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

    அவர் திரும்பி வந்து பார்த்தபோது பிரியதர்சினி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதைகண்டு அதிர்ச்சியடைந்த லட்சுமணன் தானும் தூக்கில் தொங்கினார். அக்கம்பக்கத்தினர் இதை பார்த்துவிட்டு லட்சுமன்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல சூளகிரி பகுதியை சேர்ந்த முரளி என்பவரது மனைவி சங்கீதா (25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

    ஐவரும் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார்.
    • ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆலூரைச் சேர்ந்தவர் சக்தி (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கட்டிட பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். இவரது மனைவி நந்தினி (25).

    இவர்களுக்கு பிரவீன் (6), ஜெகநாதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் பிரவீனை ஓசூர் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நந்தினி சேர்த்து விட்டு குழந்தை ஜெகநாதனுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார். ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தனது பேரன் சாவில் சந்தேகம் உள்ளதாக நந்தினியின் தாயார் வள்ளி அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நந்தினியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலன் தனது மகனை கொன்றதை நந்தினி ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து நந்தினியின் கள்ளக்காதலனான ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கணவர் இறந்த பிறகு நந்தினி 2 குழந்தைகளுடன் ஓசூர் தேர்பேட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவளுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி நந்தினியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். கடந்த மாதம் 6-ந் தேதி நந்தினி வீட்டிற்கு சென்று அவளுடன் உல்லாசமாக இருந்தேன்.

    குழந்தை எங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்தது. அதனால் ஆத்திரத்தில் நான் பீர்பாட்டிலால் குழந்தையின் தலையில் தாக்கினேன். இதில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஒரு நாள் கழித்து குழந்தையை ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நந்தினி சேர்த்தாள். அங்கு குழந்தை படியில் இருந்து விழுந்ததில் காயம் அடைந்ததாக கூறி நாடகமாடினார். பின்னர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 22-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆனது. அங்கிருந்து வீட்டிற்கு வந்த குழந்தை கடந்த 25-ந் தேதி காலை திடீரென இறந்து விட்டது. பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் நாங்கள் 2 பேரும் புதைத்து விட்டோம். நந்தினியின் தாய் கொடுத்த புகாரால் நான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    • 2 ஆயிரத்து 800 ஏக்கர் நிலப்பரப்பில் 3-வது சிப்காட் அமைக்கப்பட உள்ளது.
    • தாலுகா அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்து 800 ஏக்கர் நிலப்பரப்பில் 3-வது சிப்காட் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பணிக்காக ஏறக்குறைய 80 சதவீத விளைநிலங்கள் கையகப்ப டுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் மீண்டும் சிப்காட் பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன் தலைமையில் சூளகிரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையி ட்டனர். அவர்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது சிப்காட் அமைப்பு எதிர்ப்பு விவசாயிகள் கூறுகையில், 3-வது சிப்காட் அமைக்க 90 சதவீதத்தினர் விருப்ப த்துடன் நிலங்களை தந்துள்ளனர். அந்த நிலங்களில் சிப்காட் அமைக்க எந்தவித ஆட்சேப னையும் இல்லை.

    ஆனால், குறு, சிறு விவசாயிகள் வாழ்வாதா ரமான விளைநிலங்களை கையகப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடாது. உயிரே போனாலும் நிலத்தை கையகப்படுத்த விட மாட்டோம் என்று ஆவேசத்துடன் கூறினர்.

    போராட்டத்தில் கோனேரிப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி, குண்டுகுறுக்கி, குருபரா த்தப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர், சூளகிரி தாசில்தார் அனிதா, சிப்காட் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் கோரி க்கைகளை வலியுறுத்தி போராட்ட குழு நிர்வாகிகள் மனு அளித்தனர்.

    • புகைப்படக் கண்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • சிறப்பாக நடத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்கள், சாதனைகள் மற்றும் பயனாளிகளுடனான புகைப்படங்கள், அரசுத் திட்டத் தொடக்க விழா குறித்த புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளது.

    வேளாண்மை துறையால் விவசாயிகளுக்கான அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளும், உணவு பாதுகாப்புத்துறையால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உணவு பொருட்கள் தரம் குறித்த விழிப்புணர்வு செயல்விளக்க அரங்கம் அமைக்கவும், மஞ்சப்பை, மரக்கன்றுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கலைப்பண்பாட்டுத் துறையின் மூலம் உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு, ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வுள்ளது. இதை தவிர பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வுள்ளது. எனவே, இந்த புகைப்படக் கண்காட்சியை நமது மாவட்டத்தில் சிறப்பாக நடத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    • விவேகானந்தரின் 160- வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • விவேகானந்தரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதியமான் , பப்ளிக் பள்ளி, அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பாக விவேகானந்தரின் 160- வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன், செயலர் ஷோபாதிருமால்முருகன், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு விவேகானந்தரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    முன்னதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கி விவேகானந்தரின் விழா பேரணியை தொடங்கி வைத்தார்.

    இப்பேரணியில் பாரத சாரண சாரணியர், ஜூனியர் ரெட் கிராஸ், யூத் ரெட் கிராஸ், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேர் கலந்துகொண்டு விவேகானந்தர் மற்றும் சகோதரி நிவேதிதா போன்று வேடமணிந்தும் விவேகானந்தரின் பொன் மொழி பதாகைகள் ஏந்தியும் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

    இறுதியாக அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விவேகானந்தர் பற்றிய வாழ்க்கை குறிப்புகளை மாணவ, மாணவிகளுக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் விரிவாக எடுத்துரைத்தார்.

    • விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும்.
    • கலெக்டர் அலுவலகம் பின்புறம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். தரமான விதைகள் என்பது சான்றளிக்கப்பட்ட விதைகளாகும். விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும்.

    விதைக்கப்படும் விதையில் பிற தானிய விதை, உயிரற்ற பொருட்கள் மற்றும் களை விதை ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் விதைத் தூய்மையானதாக இருக்கும். அதனால் விதையின் தரம் உயர்கிறது.

    புறத்தூய்மை பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளான முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகியவை கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலையத்தில் மிகக் குறைந்த செலவில் செய்து தரப்படுகிறது.

    அதற்கு விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதைக் குவியலில் இருந்து விதை மாதிரி எடுத்து விதை மற்றும் ரகம், பெயர், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முகப்புக் கடிதத்துடன் ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 என்ற வகிதத்தில், வேளாண்மை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகம், கலெக்டர் அலுவலகம் பின்புறம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    தாங்கள் அனுப்பிய விதை மாதிரிகளின் விதை பரிசோதனை முடிவுகள் 30 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி தெரிவித்துள்ளார்.

    ×