என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகைப்படக் கண்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்
- புகைப்படக் கண்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- சிறப்பாக நடத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்கள், சாதனைகள் மற்றும் பயனாளிகளுடனான புகைப்படங்கள், அரசுத் திட்டத் தொடக்க விழா குறித்த புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளது.
வேளாண்மை துறையால் விவசாயிகளுக்கான அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளும், உணவு பாதுகாப்புத்துறையால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உணவு பொருட்கள் தரம் குறித்த விழிப்புணர்வு செயல்விளக்க அரங்கம் அமைக்கவும், மஞ்சப்பை, மரக்கன்றுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கலைப்பண்பாட்டுத் துறையின் மூலம் உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு, ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வுள்ளது. இதை தவிர பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வுள்ளது. எனவே, இந்த புகைப்படக் கண்காட்சியை நமது மாவட்டத்தில் சிறப்பாக நடத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.






