என் மலர்
கிருஷ்ணகிரி
- அதே பகுதியை சேர்ந்த அபூர்வன் என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக சீனிவாசன் சிப்காட் போலீசில் புகார் செய்துள்ளார்.
- சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கிருஷ்ணப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மகள் அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
கடந்த 16-ந்தேதி வீட்டை விட்டு சென்ற அந்த மாணவி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னா என்பவர் கடத்தி சென்று விட்டதாக பிரபு ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேகைபள்ளி எழில் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகள் நித்யா (21) என்பவர் கடந்த 16-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
அவரை அதே பகுதியை சேர்ந்த அபூர்வன் என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக சீனிவாசன் சிப்காட் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதேபோல போச்சம்பள்ளி அருகேயுள்ள குள்ளனூர் பகுதியை சேர்ந்த அருள்மூர்த்தி என்பவரது மனைவி சித்ரா (38). இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அருள்மூர்த்தி போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.
- 3-வது இடத்தை மொத்தம் 9 பேர், சிறந்த ஓவியம் வரைந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- இவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேடரபள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஒரு தனியார் நிறுவனம் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டியை நடத்தின.
இதில், 6, 7, மற்றும் 8 ஆம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் 3 வகுப்புகளிலும், முதலாம் இடம், 2-வது இடம் மற்றும் 3-வது இடத்தை மொத்தம் 9 பேர், சிறந்த ஓவியம் வரைந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சுனிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் பொன். நாகேஷ் வரவேற்றார். தனியார் நிறுவன மேலாளர் அனில்குமார் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் இதில் பள்ளி ஆசிரியர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
- எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பெத்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கோவிந்தன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (64) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பெங்களூரு-சேலம் சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து அடிபட்டு உயிரிழந்தார்.
இது குறித்து அவரது உறவினர் கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காவேரிப்பட்டணத்தில் உள்ள, 100-க்கும் மேற்பட்ட கடைகளில் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
- 4 கிலோ அளவிலான ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதி கடைகளில், தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என கடந்த வாரத்தில் காவேரிப்பட்டணம் பேருராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்து கடைகள் தோறும் நோட்டீஸ் வழங்கியும், ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று காவேரிப்பட்டணத்தில் உள்ள, 100-க்கும் மேற்பட்ட கடைகளில் செயலாளர் செந்தில்குமார், இளங்கோ, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர், மற்றும் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இதில் சுமார், 4 கிலோ அளவிலான ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளிலிருந்து, 7,500 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது.
- கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் முத்துகிருஷ்ணன் பிடிபட்டார்.
- கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 32). இவர் ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி செல்ல முயன்றார்.
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் முத்துகிருஷ்ணன் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஓசூர் டவுன் போலீசார் நடத்திய வேட்டையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த தங்கலிங்கம் (40) என்பவரும் போதை பொருட்களுடன் பிடிபட்டு கைதானார்.
- மல்லிகார்ஜுன சாமிக்கு திருக்கல்யாண உற்சவ வைபோகம் நடைபெற்றது.
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அம்ருதா மல்லிகார்ஜுன சாமி கோவில் உள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து 600 ஆண்டுகளுக்கு முன்பு சாமியின் திருமண் கொண்டு வரப்பட்டு இங்கு இந்த கோவிலானது, பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று மல்லிகார்ஜுன சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது.
முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியை வைத்து, எஸ் .முதுகானப்பள்ளி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தேர் கிராமத்தின் வீதிகளில் சுற்றி வந்து பின்னர், கோயிலுக்கு அருகே நிலைக்கு கொண்டுவரப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மல்லிகார்ஜுன சாமிக்கு திருக்கல்யாண உற்சவ வைபோகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவ ஜாம பூஜை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த விழாவில், திரளான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அங்கு சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
- இதையடுத்து அவர்கள் 6 பேரையும் மத்தூர் போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ், சுப்பிரமணி, மாரியப்பன், விநாயகமூர்த்தி, ராஜ்குமார், கேசவன் ஆகியோர் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் மத்தூர் போலீசார் கைது செய்தனர்.
- 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து மா ணவர்கள் இக்கண்கா ட்சியைப் பார்வையிட்டு பயனடைந்தனர்.
- கல்லூரி சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மத்தூர்,
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் (தன்னாட்சி) கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையமும் ஒருங்கிணைந்து 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அறிவியல் மற்றும் கலைக் கண்காட்சியினை ஸ்ரீ வித்யா மந்திர் கல்விக் குழுமங்களின் நிறுவனர் சந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு பெரியார் பல்கலைகழக இயற்பியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் குமாரதாஸ், தலைவர் ஜலஜா மதன் மோகன், கல்லூரியின் செயலர் அருண்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்வாணையர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து மா ணவர்கள் இக்கண்கா ட்சியைப் பார்வையிட்டு பயனடைந்தனர்.
கல்லூரி சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு பள்ளிக்கும் கல்லூரி பேருந்து மூலம் மாணவர்களை அழைத்து வந்து மீண்டும் கண்காட்சி முடிந்தவுடன் பாதுகாப்பாக அப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்விழாவினைக் கல்லூரி கணினி துறைத் தலைவர்கவிதா, கணிதத் துறைத் தலைவர் ராகவன், இயற்பியல் துறைத் தலைவர்அறிவுச்செல்வி, வேதியியல் துறைத் தலைவர்கார்த்திகேயன் மற்றும் அறிவியல் அதிகாரி பார்த்திபன், மூத்த தொழில் நுட்பவியலாளர்உதயகுமார் மற்றும் மூத்த அறிவியல் உதவியாளர் ராமு ஆகியோர் இக்கண்காட்சியினை ஒருங்கிணைந்து நடத்தினர்.
- கிருஷ்ணாபுரம் கூட்டு ரோடு அருகே பரமசிவம் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் உயிரிழந்தார்.
மத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், மேற்குவதனவாடி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
நேற்று வழக்கம்போல கடை வியாபாரத்தை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி-காவேரிப்பட்டணம் சாலையில் கிருஷ்ணாபுரம் கூட்டு ரோடு அருகே பரமசிவம் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த பரமசிவத்துக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அம்மன் கோவில் மயானக் கொள்ளைத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
- சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளைத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது-. இதையொட்டி நேற்று காலை ஹோமங்கள், மற்றும் சிறப்பு பூஜைகளுடன் கோவில் வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து கோவில் திருப்பணி பணியாளர்கள் அனைவருக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம், முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், மகா கணபதி ஹோமம், மற்றும் பூஜைகளுடன் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இன்று மஹா சிவராத்திரியும், நாளை சூலம் போடுதல் நிகழ்ச்சியும், அம்மன் மயான கொள்ளைக்கு புறப்படுதலும் நடைபெற உள்ளது. இதே போல் காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோயில் மற்றும் பன்னீர் செல்வம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயிலில், மயான கொள்ளைத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை மாவட்ட பள்ளிகளின் முன்னோடி திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது.
- மாணவ, மாணவியருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி பார்வை திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:&
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலம் அலுவலர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளியின் வகுப்பறை உற்று நோக்கலை வலுப்படுத்தும் வகையில் பள்ளிபார்வை செயலி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது திருவண்ணாமலை, சென்னை மாவட்ட பள்ளிகளின் முன்னோடி திட்டமாகவும் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை தற்போது கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வகுப்பறையில் கல்வி தரத்தின் உண்மையான நிலையை அறிய முடியும். ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் தரவுகளின் அடிப்படையில் அறியலாம். இந்த செயலி பள்ளியின் கற்றல் நிலை, ஆசிரியர்களின் திறனறிந்து நிர்வகிக்க கள அளவில் கண்காணிப்பு அலுவலர்களுக்கும் உதவியாக இருக்கும்.
மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், வட்டார அளவிலான அலுவலர்களுக்கு இந்த நிர்வாக பயிற்சி வழங்கப்படுகிறது. இச்செயலியை பயன்படுத்தி மாணவ, மாணவியருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- 35 மாணவர்கள் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டார கல்வி வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேட்டு தலைமையேற்று நடத்தினார் . வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ண தேஜஸ், வேதா மற்றும் கோவிந்தப்பா முன்னிலை வகித்தனர்.
மருத்துவ முகாமில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், குழந்தைகள் நல மருத்துவர், மனநல மருத்துவர், முட நீக்கியல் மருத்துவர், கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர் உள்ளிட்ட சிறப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பரிசோதனை செய்து அரசு நல திட்டங்களை பெறவும், மருத்துவ சிகிச்சை பெறவும் பரிந்துரை செய்தனர்.
இம்மருத்துவ முகாமில் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி குழந்தைகள் 62 பேர் கலந்து கொண்டனர். 28 மாணவர்களுக்கு புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
35 மாணவர்கள் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டனர். 33 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் பெற பரிந்துரைக்கப்பட்டது.






