என் மலர்
கிருஷ்ணகிரி
- குடிநீர் வழங்கல் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- டெங்கு விழிப்புணர்வு முகாமை நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்து பேசினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த டெங்கு விழிப்புணர்வு முகாமை நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் வசந்தி, துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் உதயகுமார், மாதேஸ்வரன், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் கொசுப்புழு உற்பத்தி தடுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கொசு உற்பத்தி தவிர்ப்பது எளிது, கொசுக்களை கட்டுப்படுத்துவது நம் கையில் உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அத்துடன் கொசு ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
- அண்ணாமலை வருகையையொட்டி ஓசூர் நகரில் வழி நெடுக பா.ஜ.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தது.
- அண்ணாமலை வருகையொட்டி தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.
ஓசூர்:
மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஓசூர் ராம்நகரில் இன்று மாலை 4 மணி அளவில் நடக்கிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். இதையடுத்து அண்ணாமலை வருகையையொட்டி ஓசூர் நகரில் வழி நெடுக பா.ஜ.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தது. அவரை வரவேற்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணாமலை வருகையொட்டி தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.
- ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர்.
- ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.
கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒம்பலகட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் குடியேறி ஊரில் புகுந்துள்ள பேயை விரட்ட முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று அதிகாலையில் ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர். அப்போது தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் உடன் அழைத்து சென்றனர். ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் மாலை சூரியன் மறைந்த பின் கிராம தெய்வங்களுடன் கரகம் எடுத்து கொண்டு முன்னால் செல்ல, அந்த கரகத்தின் பின்னால் கிராம மக்கள் அணிவகுத்து சென்றனர்.
பின்னர் தங்கள் ஊர் எல்லையை சென்றடைந்ததும் ஆடுகளை பலியிட்டு வழிபட்டதுடன் தங்கள் வீடுகளுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
- காரை பின்தொடர்ந்து வந்த போலீசார் ஏரி பகுதிக்கு ஓடிச் சென்ற அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர்.
- சோதனையில் அந்த காரில் 5 மூட்டையில் சுமார் 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்துள்ளது தெரிய வந்தது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தினர்.
ஆனால், காரில் இருந்த நபர் காரை அங்கு நிறுத்தாமல் அதிவேகத்தில் எடுத்து சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இது குறித்து உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். ரோந்து வாகன போலீசார் அந்த காரை ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்றுள்ளனர். போலீசார் காரை பின் தொடர்ந்து துரத்துவதை பார்த்த காரில் இருந்த நபர் தேசிய நெடுஞ்சாலையில் சப்படி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அருகிலுள்ள ஏரி பகுதிக்கு தப்பி ஓடினார்.
காரை பின்தொடர்ந்து வந்த போலீசார் ஏரி பகுதிக்கு ஓடிச் சென்ற அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் வந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 5 மூட்டையில் சுமார் 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்துள்ளது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் வட மாநிலத்தை சேர்ந்த ஹனுமான் என்பதும் கர்நாடக மாநிலம் ஜிகினி பகுதியில் இருந்து கோயம்புத்தூருக்கு குட்கா பொருள்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து குட்கா கடத்தி வந்த அனுமானை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கார் மற்றும் 100 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- திங்கட்கிழமை முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்
- வங்கி சேவை, அஞ்சல் காப்பீடு மற்றும் தபால் சேவை உட்பட அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி தர்மராஜா கோயில் தெருவில் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம், பொதுமக்களின் நலன் கருதி நாளை (12ம் தேதி) திங்கட்கிழமை முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
வங்கி சேவை, அஞ்சல் காப்பீடு மற்றும் தபால் சேவை உட்பட அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறும் அஞ்சலகமாக செயல்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக ்கொள்கிறோம்.
வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல் தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணி ப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-
தருமபுரி மாவட்டத்தில் பொது மக்களின் நலன் கருதி தருமபுரி தலைமை அஞ்சலகம் வருகின்ற 12-ம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வங்கி சேவை, அஞ்சல் காப்பீடு மற்றும் தபால் சேவை உட்பட அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறும் அஞ்சலகமாக செயல்பட உள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
- என்மீது உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்படுகிறது.
- கல்குவாரி இருப்பதாக நிரூபித்தால், எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கனிம வளம் கடத்தப்பட்ட பின்னணியில், ஓசூர் எம்.எல்.ஏ.வும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான ஒய். பிரகாஷ் இருப்பதாக, வாரம் இரு முறை வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்திக் கட்டுரை வெளிவந்துள்ளது.
இது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஓசூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அந்த பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி கட்டுரைக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இதுவரை எந்தவித சர்ச்சையோ, ஊழல், புகார் வழக்குகளுக்கு சிக்காத எம்.எல்.ஏ. என்றால், அதில் முதன்மையானவனாக நான் இருப்பேன். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள என்மீது உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்படுகிறது.
செய்தி வெளியிட்ட வர்கள் மீதும், அதனை வெளியிட காரண மானவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனக்கு எந்த கிரானைட் தொழிற் சாலையோ,கல்குவாரியோ இல்லை. அப்படி இருப்பதாக நிரூபித்தால், எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயார்.இந்த செய்தியை பரப்பிய சம்பந்தப்பட்ட பத்திரிகை நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு அவதூறு வழக்குத்தொடரப்படும். என் சார்பில் வழக்கு தொடர்வதா, அல்லது கட்சி சார்பிலா? என்பதை தலைமையுடன் பேசி முடிவெடுக்கப்படும்", இவ்வாறு அவர் கூறினார்.
- கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
- வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர், ஜூன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலை ஆர்.கே.நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி புஷ்பா (வயது38). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காணப்பட்ட புஷ்பா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் சந்திரா ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் தமிழக முதல் -அமைச்சர் அறிவித்தார்.
- ஒசூர் - தேன்கனிக்கோட்டை வழி, தளி சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை நெடுஞ்சாலைதுறை மூலம் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு நெடுஞ்சாலைதுறை மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என மானிய கோரிக்கையில் தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்துக்குட்பட்ட ராயக்கோட்டை சாலை மற்றும் ஒசூர் - தேன்கனிக்கோட்டை வழி, தளி சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
இதில் நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் திருமால் செல்வன், உதவி பொறியாளர் மன்னர் மன்னன், இளநிலை பொறியாளர் டேவிட், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வடிவேல் தனது மனைவி ஜோஸ்பினிடம் பால் கேனை சுத்தம் செய்து தருமாறு கூறினார்.
- ஜோஸ்பின் தலையில் காயம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சென்னந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் வடிவேல் (வயது29). கட்டிட மேஸ்திரி. இவருக்கு ஜோஸ்பின் என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வடிவேல் தனது மனைவி ஜோஸ்பினிடம் பால் கேனை சுத்தம் செய்து தருமாறு கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து ஜோஸ்பினை அவரது கணவர் வடிவேல் சரமாரியாக தாக்கினார்.
இதில் ஜோஸ்பின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜோஸ்பின் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டீனுக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அரவிந்தராஜை தேடிவருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்தியை அடுத்த தொன்னைமாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் அரவிந்தராஜ் (வயது22). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 29-ந் தேதி தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டீனுக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முத்துராஜ் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அரவிந்தராஜை தேடிவருகின்றனர்.
- திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது.
- கிணற்றை எட்டி பார்க்கும்போது தவறி கீழே விழுந்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எஸ்.தட்டனபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி யசோதா (வயது24). கூலித்தொழிலாளியான இவருக்கும் திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கை கழுவுதற்காக சென்றார். அப்போது அவர் கிணற்றை எட்டி பார்க்கும்போது தவறி அதில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர் வெங்கடேஷ் பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 6 வருடங்கள் ஆனநிலையில் யசோதா இறந்த சம்பவம் குறித்து ஓசூர் டி.எஸ்.பி. பாபுபிரகாஷ் பெண்ணின் கணவர் சீனிவாஸ் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
- 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
- வாலிபர், போலீசாரின் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுக்கா பாகலூர் அருகே சென்னசந்திரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கடந்த 7-ந்தேதி கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் உடல் நிர்வாண நிலையிலும், உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்திருந்தன.
இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த பெண் யார்? எந்த ஊர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், கள்ளத்தொடர்பு காரணமாக அந்த பெண் கொலையாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, கொலையான பெண், தர்மபுரி அதியமான்கோட்டையை சேர்ந்த பூங்கொடி (40), ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்துவந்தார். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புக்கசாகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில்தான் பூங்கோதை கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. கொலையில் சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபர், போலீசாரின் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் அவரை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஒசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






