என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • விழாவை முன்னிட்டு காலை 6 மணியளவில் வள்ளலாரின் அருட்பெரும் ஜோதி அகவல் பாராயணம் சுத்த சன்மார்க்க அன்பர்களால் பாடப்பட்டது.
    • நிறைவாக ஜோதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எஸ்.வி.வி. திருமண மண்டபத்தில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளல் பெருமானின் 200வது ஆண்டு தொடக்கமும், தருமச்சாலை தொடங்கி 156வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசன 152-வது ஆண்டும் சேர்ந்து வள்ளலாரின் 200-வது முப்பெரும் விழா நடந்தது.

    இதற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். டி.மதியழகன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவை முன்னிட்டு காலை 6 மணியளவில் வள்ளலாரின் அருட்பெரும் ஜோதி அகவல் பாராயணம் சுத்த சன்மார்க்க அன்பர்களால் பாடப்பட்டது. பின்னர் சன்மார்க்க சங்க கொடி ஏற்பட்டது.

    தொடர்ந்து 200-வது முப்பெரும் விழாவையொட்டி நடந்த பேரணியை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சுதர்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி பஸ் நிலையம் அருகில் துவங்கி, ராயக்கோட்டை சாலை மேம்பாலம் வழியாக அரசு மகளிர் கல்லூரியில் நிறைவடைந்தது.

    மேலும் பல்வேறு யோகாசன செயல்முறை பயிற்சி மற்றும் வீணை இசை, மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிறைவாக ஜோதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

    முன்னதாக, சமரச சுத்த சன்மார்க்கப் பெரியோர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, வள்ளலார் கண்ட ஞான மூலிகைகளான கருப்புகவுணி பிஸ்கட், கரிசலாங்கண்ணி லேகியம், பனைபழம் அல்வா, நெல்லிகனி இனிப்பு, அகத்தி விதை தேன் என 21 வகையான மூலிகை பொடி, பிரண்டை இட்லி பொடி, வசம்பு பொடி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ரஜினிசெல்வம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ. மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை (13-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
    • அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபான ந்தன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஜுஜுவாடி, பேகேப்பள்ளி மற்றும் நாரிகானபுரம், பாகலூர் ஆகிய துணை மின்நிலையங்களில், நாளை (13-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, ஜுஜுவாடி, மூக்கண்டபள்ளி, பேகே ப்பள்ளி, பேடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி,

    சிட்கோ பேஸ் -1 லிருந்து சூரியா நகர், பாரதிநகர், எம்.ஜி.ஆர் நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், பாகலூர் ஜீ மங்கம், உளியாலம், நல்லூர், பெலத்தூர் தின்னப்பள்ளி, சூடாபுரம் அலசபள்ளி, பி.முதுகானபள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியம ங்கலம், தும்மனப்பள்ளி, படுதேபள்ளி, பலவன ப்பள்ளி, முத்தாலி,முது குறுக்கி,

    வானமங்கலம், கொத்த ப்பள்ளி, சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி, நாரி கானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நர்சாபள்ளி, பன்னப்பள்ளி, சீக்கனபள்ளி, நெரிகம், கூல் கெஜலன் தொட்டி, தண்ணீர் குண்டலபள்ளி,எலுவப் பள்ளி, கே. என் தொட்டி,பி.எஸ் திம்மசந்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது26). இவர்ஓசூர் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி பகுதி அருகே நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து சென்று ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாட்டை கட்டி வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு ஏற்கனவே இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
    • எல்லம்மாவுக்கும், நாராயணப்பாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வெங்கடேசபுரம் வெங்கடப்பா. இவரது மனைவி எல்லம்மா (வயது56). இவரது மகன் மஞ்சுநாத் (38). கூலித்தொழிலாளி.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் நாராயணப்பா (55). இருவரது வீடும் அருகருகே உள்ளதால் மாட்டை கட்டி வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு ஏற்கனவே இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று நாராயணப்பாவின் பேரன் எல்லம்மாவின் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுவனிடம் எல்லம்மா பேசிக் கொண்டிருந்தார்.

    இதன் காரணமாக எல்லம்மாவுக்கும், நாராயணப்பாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் அவர் அருகே இருந்த மரக் கட்டையை எடுத்து எல்லம்மாவின் தலையில் தாக்கி மிரட்டியுள்ளார். இதனால் காயம் அடைந்த எல்லம்மாவை உறவினர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மஞ்சுநாத் பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் நாராயணப்பா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 21 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது எங்கள் கிராமத்தில் துர்மரணம் அதிகளவில் ஏற்பட்டது.
    • தீய சக்திகளை விரட்ட நாங்கள்மட்டுமின்றி, அனைத்து கால்நடைகளையும் அழைத்து கொண்டு ஊரை காலி செய்து வனப்பகுதியில் குடியேறினோம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்குட்பட்ட ஒம்பலகட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் குடியேறி ஊரில் புகுந்துள்ள பேயை விரட்ட முடிவுசெய்தனர்.

    அதன்படி நேற்று அதிகாலையில் ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர். அப்போது தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் உடன் அழைத்து சென்றனர். ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரை யோரம் உள்ள வனப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு சமைத்து சாப்பிட்டனர்.

    பின்னர் மாலை சூரியன் மறைந்த பின் மண்டு மாரியம்மன், முத்து மாரியம்மன், செல்லி மாரியம்மன் ஆகிய கிராம தெய்வங்களுடன் கரகம் எடுத்து கொண்டு முன்னால் செல்ல, அந்த கரகத்தின் பின்னால் கிராம மக்கள் அணிவகுத்து சென்றனர்.

    பின்னர் தங்கள் ஊர் எல்லையை சென்றடைந்ததும் ஆடுகளை பலியிட்டு வழிபட்டதுடன் தங்கள் வீடுகளுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் சிலர் கூறியதாவது:- 21 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது எங்கள் கிராமத்தில் துர்மரணம் அதிகளவில் ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் பேய், காத்து கருப்பு போன்ற தீயசக்திகள் புகுந்துள்ளதால் தான் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கருதி, அந்த தீய சக்திகளை விரட்ட நாங்கள்மட்டுமின்றி, அனைத்து கால்நடைகளையும் அழைத்து கொண்டு ஊரை காலி செய்து வனப்பகுதியில் குடியேறினோம். ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு மாலை வீடு திரும்பி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள்கூறினர்.

    • வீட்டில் தனியாக இருந்த கஜேந்திரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நந்தி மங்கலத்தை அடுத்த எம்.காரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 55). கூலித் தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளது.

    கடந்த 3மாதமாக அவர் சற்று மனநிலை பாதிப்புடன் காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த கஜேந்திரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.12,500 மதிப்புள்ள 16 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் அடிக்கடி மர்ம நபர்கள் கர்நாடகாவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வருவதாக சூளகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூளகிரி போலீசார் கோபசந்திரம் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 16 கிலோவை சூளகிரியை அடுத்த திருமலைகவுணிகொட்டாய் பகுதியைச் சேர்ந்த மருதகான் (வயது43), சானமாவு பகுதியைச் ேசர்ந்த தஸ்தகீர் (52) ஆகிய 2 பேர் கடத்தியது தெரியவந்தது.

    உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கார், ரூ.12,500 மதிப்புள்ள 16 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளது.
    • நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஜோகிர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது54). கூலித்தொழிலாளி.

    இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளது. இதன்காரணமாக இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அடிக்கடி அவர் நெஞ்சுவலியால் அவதி அடைந்து வந்தார். இதன்காரணமாக கோவிந்தன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் பலனில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் குமார் என்பவர் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குந்தாரப்பள்ளி அடுத்த திப்பனப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி, நிர்வாகிகள் நாராயணபெருமாள், தாபா வெங்கட்ராமன், ரமேஷ், மகேந்திரன், சக்திசீலன், தீர்த்தகிரி, ராமலிங்கம், வேடியப்பன், ஐடி விங் மாவட்ட பொறுப்பாளர் சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு கிடைத்திடுவதை தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்கள் உறுதி செய்திட வேண்டும்
    • தெருவிளக்குகளை அவ்வப்போது சரி செய்ய ஊராட்சி மன்றத் தலைவர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஓசூர், தளி, சூளகிரி, கெலமங்கலம் மற்றும் வேப்பனப்பள்ளி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 173 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் 5 வட்டாரத்தில் இருந்து 173 கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு மாவட்ட அளவிலான இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இணைவழி வரி வசூல், பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தமாகவும், தங்களது ஊராட்சியில் தேங்கும் குப்பைகளை நாள்தோறும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து, பிளாஸ்டிக் பயன்பாட்டினை கட்டுப்படுத்தியும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் பொதுமக்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யவும், தெருவிளக்குகளை அவ்வப்போது சரி செய்ய ஊராட்சி மன்றத் தலைவர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும்.

    அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு எவ்விதப் பாகுபாடு இல்லாமல் சமமாகக் கிடைத்திடுவதை தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்கள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குருராஜன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • காரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவர் 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை சோதனை செய்த போது அவர் 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர் பெயர் அன்பரசன் (24) கதவணை பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
    • மாநகராட்சி கவுன்சிலர் தேவி மாதேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 21,23-வது வார்டிற்குட்பட்ட கொத்தூர் முதல் கொத்தகொண்டப்பள்ளி பிரதான சாலை, 100அடி சாலை பகுதியில் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணியை, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    மேலும் இதில், மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர் தேவி மாதேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×