என் மலர்
கரூர்
- கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்து ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கரூர்:
கரூர் வஞ்சியம்மன் கோயில் தெருவை ஒட்டியுள்ள அமராவதி ஆற்றங்கரையோரம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கரூரைச் சேர்ந்த இலியாஷ் (வயது 25), என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, இலியாஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வேலாயுதம்பாளையம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்
- புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர்:
கரூர் மாவட்டம் மசக்கவுண்டன்புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வளர்மதி (வயது 44) .இவர் தீராத உடல் வலியால் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் வலி தீர வில்லை. இந்நிலையில் கடந்த 26ம் தேதி வளர்மதி தனக்கு உடம்பு வலிப்பதாக தனது மகன் பூபதியிடம் கூறியுள்ளார். அதற்கு பூபதி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வெளியே வந்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
பிறகு எழுந்து அவரது அம்மாவை பார்த்த போது அம்மா வளர்மதி வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது வளர்மதி அருகில் குருணை மருந்து டப்பா இருந்துள்ளதை பார்த்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பூபதி வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- புகழூரில் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது
- கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரூர்:
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கனிராஜ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-புகழூர் நகராட்சியில் ரூ223.15 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வருடத்திற்கு திடக்கழிவு மேலாண்மை பணிகளை வெளிக்கொணர்ணர்வு முகமை மூலம் பணிகள் மேற்கொள்ளுதல். கக்கன் காலனி ,ஓனவாக்கல்மேடு, ஹைஸ்கூல்வீதி, சுந்தராம்பாள்நகர், கந்தசாமிபாளையம், ராஜாநகர் ஆகிய தெருக்களில் ரூ51.96 லட்சத்தில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை சீரமைப்பு செய்தல்.
ரூ19.65 லட்சத்தில் முந்தைய டிஎன்பிஎல் புகழூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைத்தல்.ரூ36.50 லட்சத்தில் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் பொருத்துதல்.ரூ2.50 லட்சத்தில் பகவதிஅம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால், தரைப்பாலம் ,மராமத்து பணிகள் செய்தல், முல்லை நகரில் மழை நீர் வடிகால், பராமரிப்பு பணி செய்தல், வள்ளுவர் நகர் மெயின் பகுதியில் புதிதாக மழை நீர் வடிகால் சீரமைத்தல்.ரூ2.20 லட்சத்தில் மாரப்பாகாலனியில் மழை நீர் வடிகால் சீரமைத்தல்.
ரூ8.15 லட்சத்தில் முல்லை நகரில் மழை நீர் வடிகால் அமைத்தல்.ரூ6.50 லட்சத்தில் செம்மடைப்பகுதியில் மழை நீர் வடிகால் சீரமைத்தல்.ரூ18 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 9 எண்ணிக்கையிலான பேட்டரி மூலம் இயங்கும் தள்ளுவண்டிகள் வாங்குதல். ரூ43.80 லட்சம் மதிப்பீட்டில் புகலூர் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை பணிக்காக ஆறு எண்ணிக்கையிலான இலகுரக வாகனம் வாங்குதல் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழா மற்றும் நீதிபதிக்கு பாராட்டு விழா நடைபெற்றது
- இவ்விழாவிற்கு வக்கீல் சங்க தலைவரும் அரசு வழக்கறிஞருமான சாகுல்ஹமீது தலைமை வகித்தார்
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க ஆண்டு விழா மற்றும் பணி மாறுதலாகி செல்லும் நீதிபதி தினேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது, இவ்விழாவிற்கு வக்கீல் சங்க தலைவரும் அரசு வழக்கறிஞருமான சாகுல்ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சார்பு நீதிபதி சமுத்திரக்கனி வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி குறித்து வாழ்த்துரை வழங்கினார். விழாவில் அரசு வக்கறிஞர் நீலமேகம், துணைத் தலைவர் முருகேசன், இணை செயலாளர் சரவணன், துணைத் தலைவர் சுதா மற்றும் வழக்கறிஞர்கள் மது, சந்திரசேகர், மது, பிரபு, தோகைமலை குமார், சரவணன், மேட்டு மருதூர் குமார், கார்த்திகேயன், காத்தலிங்கம், நிகில்அரவிந்த் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மருதூர் தமிழரசன் நன்றியுரையாற்றினார்.
- குளித்தலை அருகே சிறுமி மாயமானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
கரூர்:
குளித்தலை அடுத்த, புழுதேரியை சேர்ந்த, 17 வயது சிறுமி கடந்த, 24-ந் தேதி இரவு கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார். வெகு நேரமாகியும் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் தாய் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
- புன்னன்சத்திரம் அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்
- இதுகுறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர்:
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் ஆர்.ஜி நகர் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் மோகன் (வயது 38). கல்குவாரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (32), இவர்களுக்கு ஜனனி(8), சிவாணி(6) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மோகன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தூங்க சென்றார். இரவு சுமார் 9 மணிக்கு வீட்டுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கதவை தட்டி உள்ளார்.
அப்போது மோகன் எழுந்து சென்று கதவை திறந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் உள்ள பணம் நகைகளை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.அதற்கு மோகன் வீட்டில் பணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மர்ம நபர் சென்று விட்டார். இதுகுறித்து மோகன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- மே 2-ந் தேதி மத்திய அரசு தேர்வு பயிற்சி முகாம் தொடங்கப்பட உள்ளது
- கலெக்டர் பிரபுசங்கர் தகவல்
கரூர்:
கரூர் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது 7,500 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்விற்கான பணிக்காலியிடம், தேர்விற்கு விண்ணப்பித்தல் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் மே, 3க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 2ந் தேதி தொடங்குகிறது. சேர விரும்புவோர் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார்அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.
மேலும் தங்கள் விபரத்தை 04324223555 என்ற தொலைபேசி வாயிலாகவோ, gmail.com என்ற இ.மெயில் studycirclekarur@ வாயிலாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். https://tamilnaducareerservices.tn.gov.in 6760TM 6006007 இணையதளத்தில் போட்டி தேர்வுக்கான காணொலி வழி கற்றல், மாதிரிதேர்வு வினாத்தாள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கரூர் மாவட்டத்தில் 70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்
- கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
கரூர்:
கரூர் மாவட்டத்தில் 90க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்கள விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசாரும், அந்த பகுதி காவல் நிலைய போலீசாரும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கரூர், குளித்தலை சின்னதாராபுரம், மாயனூர் மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 10 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 70 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் மில்லி லிட்டரின் அளவு 12,600 என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசார்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 27 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் இயக்கிய அரசு பஸ் ஓட்டுனருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
- ஓட்டுனர் ரவிச்சந்திரன் கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரனை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்
கரூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் கரூர் மண்டலம் குளித்தலை கிளையில் பணிபுரியும் ஓட்டுனர் ரவிச்சந்திரன் (வயது58). இவர் கடந்த 27 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் சிறப்பாக பணி புரிந்ததற்காக டெல்லியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு தேசிய விருது விழாவில் ரவிச்சந்திரனுக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி சிறந்த ஓட்டுநருக்கான விருதினை வழங்கினார். இவ்விருதினை பெற்ற ஓட்டுனர் ரவிச்சந்திரன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஓட்டுனர் ரவிச்சந்திரன் கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரனை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின் போது துணை மேலாளர் (வணிகம்&தொழில்நுட்பம்) சுரேஷ்குமார், உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) சேகர் மற்றும் உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தவிட்டுப்பாளையத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது
- அதிக வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களை, அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காந்தி நகர், கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது. இதில் கிராம, சுகாதார செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர், வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டில் உள்ள பொதுமக்கள், முதியவர்கள், பாலுாட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப்பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார். அதிக வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களை, அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று பரவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- கரூர் மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
- ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள், போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் அகற்றினர்.
கரூர்:
கரூர் மாநகராட்சி சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், மளிகை கடை சாலை, அண்ணாசாலை, மேற்கு காந்தி நகர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டனர். அப்போது வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்டவை முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள், போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் அகற்றினர்.
- கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
- இதில் பங்கேற்க விரும்புவோர், நாளை காலை 10:30 மணிக்குள் நேரடியாக வந்து பயிற்சியில் சேரலாம்.
கரூர்:
கரூர் அருகே, கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது என, கரூர் அருகே, பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால் நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
அறிவியல் ரீதியான கறவை மாடு வளர்ப்பில் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்தல், பண்ணை வீட்டமைப்பு, கறவை மாடுகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் வழிமு றைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், பசுந்தீவன உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் கலப்பு தீவனம் தயாரித்தல் ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், நாளை காலை 10:30 மணிக்குள் நேரடியாக வந்து பயிற்சியில் சேரலாம். என்று அவர் தெரிவித்துள்ளார்.






