என் மலர்
கரூர்
- சட்டவிரோதமாக மது விற்ற 77 பேர் கைது செய்யபட்டனர்
- அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 641 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
கரூர்:
மே தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் விடுமுறை என்பதால் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோத மது விற்பனை நடக்கிறதா என போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 77 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 641 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக தென்னிலை அருகில் வால்நாய்க்கன்பட்டியில் 3 பேரிடமிருந்து 1 ஆயிரத்து 216 மது பாட்டில்களும், ஆம்னி காரும் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி. சுந்தரவதனம் தெரிவித்தார். இது தொடர்பாக, 04324 296299 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
- புகழிமலை ஸ்ரீ பாலசுப்ரமணியசுவாமி கோவிலில் மண்டலாபிஷேகம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது
கரூர்:
கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. மண்டலாபிஷேகம் வருகிற 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று 48 நாள் நிறைவு பெறுகிறது. மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு காந்தி மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பணி குழு தலைவரும், நகராட்சி தலைவருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார்.
திருப்பணிக்குழு துணைத் தலைவர் அண்ணாவேலு, திருப்பணிக்குழு துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கட்டுப்பட்ட அனைத்து ஊர் கொத்துக்காரர்கள் மற்றும் புகழூர் வட்டார ஆன்மிக நண்பர்கள், திருப்பணிக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு 48-ம் நாள் மண்டலாபிஷேகத்தை எவ்வாறு சிறப்பாக நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை தெரிவித்தனர்.
- தோகைமலை அருகே சீத்தப்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியின் 14ம் ஆண்டு விழா நடைபெற்றது
- கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ்கண்ணா கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்
கரூர்:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை சீத்தப்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியினுடைய 14ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா கட்சியின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட செயலாளர் தோகைமலை பிச்சை, இளைஞர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்
- கரூர்-தாராபுரம் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், கூடலுார் கீழ்பாகம் காந்தி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது30). கூலி தொழிலாளியான இவர் சின்னதாராபுரத்தில் உள்ள லேத் பட்டறையில் வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த கார்த்திகேயன் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த கார்த்திகேயன் குடும்பத்துக்கு லேத் பட்டறை நிர்வாகம் சார்பில் நிதியுதவி வழங்ககோரி சின்ன தாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன் கரூர்-தாராபுரம் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
- மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை ஜோராக நடைபெற்றது
- நேற்று மட்டும், 350 கிலோ வரை மீன்கள் விற்கப்பட்டன.
கரூர்:
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூர் காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டப் பட்டுள்ளது. இந்த கதவணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, மீன்கள் வளர்க்கப்படுகிறது. வளர்க்கப்படும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று வலைகளை விரித்து பிடித்துக் கொண்டு வந்து வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மீன்கள் வரத்து சீராக இருப்பதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய், கெண்டை மீன் 110 ரூபாய், விறால் மீன் 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும், 350 கிலோ வரை மீன்கள் விற்கப்பட்டன. மீன்களை வாங்க கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், மணவாசி, சேங்கல், பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.
- க.பரமத்தியில் மன்கிபாத் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யபட்டது
- இதை, நாடு முழுவதும் பா.ஜ.,வினர் ஒளிபரப்பு செய்தனர்.
கரூர்:
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மன்கிபாத் நிகழ்ச்சி, க.பரமத்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாதந்தோறும் வார கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மன்கிபாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி, ரேடியோ மற்றும் 'டிவி'க் களில் பேசி வருகிறார். நேற்று 100வது, மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். இதை, நாடு முழுவதும் பா.ஜ.,வினர் ஒளிபரப்பு செய்தனர். சுரூர் அருகே க.பரமத்தியில் பிரதமரின், மன்கிபாத் உரை டிவி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்நாதன், சு.பரமத்தி வடக்கு ஒன்றிய தலைவர் பழனி சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சங்க புலவர்கள் தூணுக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
- தமிழ் கவிஞர்கள் நாளை முன்னிட்டு நடைபெற்றது
கரூர்:
கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் மற்றும் தமிழ்க்கவிஞர்கள் நாளை முன்னிட்டு கரூர் வட்டாட்சியர் அலுவலக முகப்பில் உள்ள சங்கப் புலவர்களான கருவூர் புலவர்கள் பன்னிருவர் நினைவுத்தூணுக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் திருக்குறள் பேரவையின் சார்பாக தமிழ் அறிஞர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசனின் வெண்பா புனைதல் போட்டி நடத்தப்பட்டது.
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, கரூர் வட்டாட்சியர் (பொ) ரவிகுமார், மேலை பழநியப்பன், தங்கராஜ் , தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
- வடுக்கப்பட்டி கிராமத்தில் சூரியகாந்தி சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது
- இந்த பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி நடந்து வருகிறது.
கரூர்:
கிருஷ்ணராயபுரம் அடுத்த வடுக்கப்பட்டி கிராமத்தில் சூரியகாந்தி சாகுபடி நடந்து வருகிறது. சூரியகாந்தி செடிகளுக்கு தேவையான தண்ணீர், கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்து வருகின்றன. மேலும் கோடை மழை பெய்து வருவதால், பூக்களில் விதைகள் பிடித்து வருகிறது. சூரியகாந்தி செடிகள் அறுவடை பணி, சில வாரங்களில் துவங்கவுள்ளது. மேலும் சூரியகாந்தி விதைகள் விலை குறைந்து வருவதால், விவசாயிகளுக்கு ஓரளவு மட்டுமே வருமானம் கிடைத்து வருகிறது. இந்த பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி நடந்து வருகிறது.
- குளித்தலையில் பள்ளி மாணவன் மாயமானார்
- இது குறித்து, உறவினர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் செல்வி (வயது 40). இவரது உறவினர் மகன், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 27ந் தேதி மாலை கடைக்கு சென்று வருவதாக கூறியவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து, உறவினர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமராவதி அணை நீர்மட்டம் உயராததால் கரூர் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
- கடந்த ஒரு மாதத்தில் 4.54 அடி மட்டும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கருர்:
கேரள மாநிலம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாத நிலை உள்ளது. இதனால், கரூர் மாவட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஏப்ரல் மாத துவக்கத்தில் அணையின் நீர் மட்டம் 52.79 அடியை எட்டியிருந்தது. ஆனால் நேற்று அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 270 கன அடியாகவும், அணை நீர் மட்டம் 56.33 அடியாக மட்டுமே இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் 4.54 அடி மட்டும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அமராவதி அணை மூலம் கரூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது. மேலும், அரவக்குறிச்சி, கூ.பரமத்தி, தான் தோன்றமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளை சேர்ந்த, கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஜூலை மாத இறுதியில் அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என கரூர் மாவட்ட விவசாயிகள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால் அணையின் நீர் மட்டம் உயராததால் கரூர் மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறக்கப்படுமா என்ற கவலையில் உள்ளனர்.
- கரூர் மாவட்டத்தில் சிறப்பு ரோந்தில் 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. தெரிவித்துள்ளார்
- லாட்டரி சீட்டு விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர்:
கரூர் எஸ்.பி. சுந்தரவதனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாகன சோதனையின் போது 837 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நம்பர் பிளேட் இல்லாத 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 20 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லாட்டரி சீட்டு விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் குழந்தைகளை நீர் நிலைகள் அருகில் செல்வதையும், சிறார்களை இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவதை அனுமதிக்காமல் ெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- மதுரைவீரன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்:
கரூர் வேலாயுதம்பாளையம், அண்ணா நகரில் பிரசித்தி பெற்ற மதுரை வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் நிகழ்ச்சியாக திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்க்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலையில் கோவில் பூசாரி அருள்வந்து ஆடி அரிவாள் மீது ஏறி நின்று ஆண், பெண்கள் மீது சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி (பேய் விரட்டும் நிகழ்ச்சி) நடந்தது. அதன் பின் கிடா விருந்து நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.






