என் மலர்
கன்னியாகுமரி
- இரவு 8 மணி அளவில் கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டி ருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள நாச்சியார் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 41). பிரபல ரவுடி லிங்கத்தின் உறவினர் ஆவார். இவரும் பிரபல ரவுடி லிங்கத்தின் மகனுமான சுஜித் (25) என்பவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ஜெகதீஷ் என்பவர் ஓட்டிச்சென்றார். இவர்களது மோட்டார் சைக்கிள் பழத்தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த டெம்போ ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டி ருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
இதில் ஜெகதீஷ் மேல் சிகிச்கைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார். பிரபல ரவுடி லிங்கத்தின் மகன் சுஜித்துக்கு கால் முறிவு ஏற்பட்டதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஜெகதீசின் உடல் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
நாகர்கோவில்:
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூத்தூர், நடைக்காவு, சூழால், வாவறை, முஞ்சிறை, பைங்கு ளம், விலாத்துறை ஆகிய
ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூத்துறை பகுதியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய சுகாதார கட்டிடம் அமைக்கும் பணியையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணியையும், 15-வது நிதிக்குழு 2023-24 திட்டத்தின் கீழ் தூத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகில் பவர் பிளாக் அமைத்தல் ஆகிய பணிகளையும், நடைக்காவு ஊராட்சி க்குட்பட்ட வாழனூர் பகுதியில் ஜல் ஜீவன் திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.9.85 லட்சம் மதிப்பில் காஞ்சிரக்கோடு முதல் சாத்தன்கோடு வரையுள்ள கால்வாய்களை துர்வாரும் பணியையும், சூலால் ஊராட்சிக்குட்பட்ட சட்டமன்ற உறு ப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.24.70 லட்சம் மதிப்பில் வெங்கஞ்சி அரசுதொடக்கப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, வாவறை ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2022-23-ன் கீழ் ரூ.13.25 லட்சம் மதிப்பில் மணலி முதல் பள்ளிக்கல் வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், முஞ்சிறை ஊராட்சிக்குட்ப்பட்ட பார்த்திவபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.13.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளும்,
பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் குரங்கினார்விளை முதல் முள்ளகிரிவிளை வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், விலாத்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் தையல் எந்திர அறை கட்டும் பணி யினையும், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், நெல்லிகாவிளை பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.இந்த ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் ராஜேஷ், டேவிட், ஊராட்சி மன்ற தலைவர்கள் லைலா (தூத்தூர்), மெற்றில்டா, உதவி பொறியாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- இவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை:
தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது52), கூலி தொழிலாளி. இவர் சுமார் ஆறு மாதம் முன்பு பாக்கு மரத்தில் ஏறியதில் தவறி கீழே விழுந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் மனைவி ரவிக்கு சாப்பாடு கொண்டு கொடுக்க சென்று பார்த்த போது கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் இவரை தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய கொண்டு சேர்த்தனர். பின்னர் கலா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- 28 மதுபாட்டில் இருந்ததை கண்டு பிடித்தனர்.
தக்கலை:
தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அழகியமண்டபம் பகுதியில் போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி பிடித்து சோதனை செய்து பார்த்த போது மறைத்து விற்பனைக்கு வைத்திருந்த 28 மதுபாட்டில் இருந்ததை கண்டு பிடித்தனர். உடனே அவரை போலீஸ் நிலையம் கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் காப்புகாடு பகுதியில் சேர்ந்த சிந்துகுமார் (வயது 35).இவர் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நல்லூர் பகுதியில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நல்லூர் தேனாம்பாறை பகுதியில் நல்லூர் தேம்பறதல விளை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தங்கராஜ் (வயது 71) என்பவர் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மேக்கோடு கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார்.
திருவட்டார்:
வேர்கிளம்பி பேரூராட் சிக்குட்பட்ட பகுதி முதியோர் உதவித்தொகை வாங்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு தீபாவளிக்கு வேட்டி-சேலை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் முதியோர்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் துரைராஜ் மனுவேல் மேக்கோடு கிராம நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேர்கிளம்பி பேரூராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட முண்டவிளை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இருந்தது. அதை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி வார்டு உறுப்பினர் லலிதா கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக் கையை ஏற்று ரூ.3.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடியில் சுற்று சுவர் சீரமைத்தல், குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சாலை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலை சீரமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங் குமார் தொடங்கி வைத்தார்.
- ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஹரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மஞ்சாலுமூடு கைதகம் தெற்றிவிளை பகுதியில் மழை காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அருமனை:
மஞ்சாலுமூடு கைதகம் தெற்றிவிளை பகுதியில் மழை காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க கோரி பா.ஜ.க. சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. மேல்புறம் வடக்கு ஒன்றிய தலைவர் சதீஷ் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுடர் சிங், பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் நந்தினி, ஒன்றிய பொதுச் செயலாளர் வின்சென்ட், மற்றும் ஆனந்த், முழுக்கோடு கட்சித் தலைவர் அனில் குமார் மஞ்சாலுமூடு தலைவர் வினு, அருமனை கவுன்சிலர் விஜயகுமார், ராமச்சந்திரன் மற்றும் சுஜி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஹரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.
மேலும் மாவட்டத்தில் கொடுங்குற்ற வழக்குகளில் விரைவில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தவர்கள், கொலை, கொள்ளை வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை நிறைவேற்றுவதில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்கள். நீதிமன்றத்தில் வழக்குகளை கோப்புக்கு எடுத்து விரைவில் முடித்திட திறம்பட செயல்பட்டவர்கள், சி.சி.டி. என்.எஸ். பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பின்னர் சூப்பிரண்டு சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் ஓட்டுநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொரு உட்கோட்டத்தில் உள்ள இரு சக்கர வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
- இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. தினமும் காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தாலும் மாலையில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகப்பட்சமாக சிற்றார் 2-ல் 90 மில்லி மீட்டர் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை கனமழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. மழையில் இருந்து தப்பிக்க பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு சென்றனர்.
பூதப்பாண்டி, கன்னிமார், குழித்துறை, மயிலாடி, கொட்டாரம், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோரப்பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு-1 அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று அணையிலிருந்து தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அணை நிரம்பிவருவதையடுத்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோதை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர்களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டினம் கடலில் சென்று சேரும். எனவே கோதையாறு தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.
அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருவதால் இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.14 அடியாக இருந்தது. அணைக்கு 468 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 328 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.18 அடியாக உள்ளது. அணைக்கு 674 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. தொடர் மழைக்கு அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 4 வீடுகளும் தோவாளை தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பழையாறு, வள்ளியாறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாசன குளங்களும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் குளங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகளை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 6.6, பெருஞ்சாணி 10.2, சிற்றாறு 1-8.6, சிற்றார் 2-90, பூதப்பாண்டி 19.2, களியல் 60, கன்னிமார் 19.2, கொட்டாரம் 4, குழித்துறை 80, நாகர்கோவில் 12.4, சுருளோடு 10, தக்கலை 32, குளச்சல் 6, இரணியல் 15, பாலமோர் 5.2, மாம்பழத்துறையாறு 29, திற்பரப்பு 17.3, கோழிப்போர்விளை 12.6, அடையாமடை 18.1, குருந்தன்கோடு 16.4, முள்ளங்கினாவிளை 3.4, ஆணைக்கிடங்கு 28.4, முக்கடல் 7.4.
- கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.
- பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
நாகர்கோவில்:
சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 8-வது மேலாண்மை விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் மரியவில்லியம் தலைமை தாங்கினார். மாணவி சகாய ரினோஷா வரவேற்றார். விழாவின் அமைப்பு செயலாளர் பேராசிரியை பமிமா விழாவிற்கான அறிமுக உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.
கல்லூரி பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்தி பேசினார். பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற துணை மேலாளர் அமல்ராஜ் கலந்துகொண்டு பேசினார்.
விழாவில் மாணவர்களுக்கான சிறந்த மேலாளர் போட்டி, படத்தொகுப்பு போட்டி, வினாடி-வினா, மவுன மொழி நாடகம் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் இணை ஒருங்கிணைப்பா ளர் மாணவர் சேக் சித்தா அர்ஷக் நன்றி கூறினார்.
விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் வணிக மேலாண்மை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து வழங்கினார்
- வேட்டி மற்றும் சேலை இலவசமாக வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கொட்டாரம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மகாராஜபுரம் பஞ்சாயத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் 300 பேருக்கு முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் தீபாவளி பண்டிகையையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வேட்டி மற்றும் சேலை இலவசமாக வழங்கப்பட்டது. நலத் திட்ட உதவிகளை மகாராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து வழங்கினார். வார்டு உறுப்பினர்கள் சுயம்பு, அனீஸ்வரி, ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குழந்தைகளுடன் வந்தவர்கள் பரிதவிப்பு
- பயணச்சீட்டை பெற்று பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
நாகர்கோவில்:
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது பெண்களுக்கான இலவச அரசு பேருந்து வசதி திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், அதற்கென இயக்கப்படும் பிரத்தியேக அரசு பேருந்துகளில், பிரத்யேகமாக வழங்கப்படும் பயணச்சீட்டை பெற்று பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களுக்கான இலவச அரசு பேருந்துகளில் இலவ சமாக பயணம் செய்வதன் மூலம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை தங்களுக்கு மிச்சமாவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் பெண் களுக்கான இலவச அரசு பேருந்து வசதி திட்டத்தில் ஏராளமான பஸ்கள் இயக்கப் படுகின்றன. மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கும் இலவச பஸ்கள் இயக்கப்படுவதால், கிராமப்புறம் நகர்ப்புறம் என அனைத்து பகுதி பெண்களும் பயனடைந்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கான இலவச பஸ்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பஸ்களில் ஏராளமான பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பயணிக்கின்றனர். காலை முதல் இரவு வரை பெண்களுக்கான இலவச பஸ்கள் தொடர்ந்து இயக்கப் படுவதால் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு செல்பவர்கள், பணி நிமித்தமாக செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது.
பெண்களுக்கான இலவச பஸ்களில் ஆண்க ளும் பயணிக்கலாம். இந்த பஸ்களில் மற்ற வகை பஸ்களை காட்டி லும், கட்டணம் குறை வாகும். இதனால் ஆண்களும் இந்த பஸ்களில் அதிகளவில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் நாகர்கோவிலில் பெண்களுக்கான இலவச பஸ் ஒன்று பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விட்ட சம்பவம் நடந்துள்ளது.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரிய பெருமாள்விளை காலனிக்கு தடம் எண் 36பி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் அந்த பஸ், நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார், செட்டிகுளம் ஜங்ஷன், இந்து கல்லூரி, பீச் ரோடு, இருளப்ப புரம், வல்லன் குமாரன்விளை, என்.ஜி.ஓ. காலனி, மேல கிருஷ்ணன்புதூர், புத்தளம் வழியாக அரிய பெருமாள்விளை காலனிக்கு சென்று வருகிறது.
அந்த பஸ் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் வழக்கம் போல் புறப்பட்டது. அந்த பஸ்ஸில் பீச் ரோடு, இருளப்ப புரம், என்.ஜி.ஓ. காலனி, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ஏராளமான பெண்கள் பயணித்தனர். ஒரு சிலரை தவிர அனைவருமே பெண் பயணிகள் ஆவார். சில பெண்கள் தங்களது குழந்தைகளுடன் அந்த பஸ்ஸில் சென்ற னர்.
அவர்களில் கைக் குழந்தை களுடன் வந்த பெண்களும் இருந்தனர். அனைவருக்குமே கண்டக்டர் பயணச்சீட்டை கொடுத்தார். பெண் பயணி களுக்கு இலவச பயண டிக்கெட்டை வழங்கினார். இந்நிலையில் அந்த பஸ் செட்டிகுளம் ஜங்ஷனை தாண்டி சென்று கொண்டி ருந்தது. அப்போது இந்து கல்லூரி அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அந்த பஸ் நிறுத்தப்பட்டது.
பணிமனைக்குள் பஸ் செல்வதாக கூறி, பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பணிமனைக்கு வெளியே இறக்கி விடப்பட்டனர். இந்த பஸ்சுக்கு பதிலாக மாற்று பஸ் மாலை 4 மணிக்கு பிறகு வரும் என்றும், அதுவரை பணி மனைக்கு வெளியே காத்திருக்குமாறும் பயணிகளிடம் கண்டக்டர் கூறினார்.
பஸ் புறப்படும் போது எதுவும் கூறாமல், அனை வரையும் ஏற்றுக்கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு பயண டிக்கெட்டையும் கொடுத்துவிட்டு, நடுவழியில் இறக்கி விட்டதால் அந்த பஸ்ஸில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திடீ ரென நடுவழியில் இறக்கி விட்டால் தங்களது ஊருக்கு எப்படி செல்வோம் என்று சில பயணிகள் கண்டக்டரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் பஸ்ஸில் ஒரு போல்ட் மாட்ட வேண்டி இருக்கிறது. ஆகவே அந்த பஸ்சை தொடர்ந்து இயக்க முடியாது. மாற்று பேருந்து வரும்வரை காத்திருக்குமாறு கண்டக்டர் கூறியிருக்கிறார். அரை மணி நேரத்திற்கு மேல் எவ்வாறு நடுவழியில் காத்திருப்பது என்று பயணிகள் கேட்டனர். அதற்கு கண்டக்டர் வேறு வழியில்லை எனவும், விரும்பினால் அண்ணா பஸ் நிலையத்திற்கு மாற்று பஸ்சில் ஏற்றி விடுவதாக தெரிவித்திருக்கிறார்.
ஏறிய இடத்திற்கே மீண்டும் ஏற்றி விடுவதாக கண்டக்டர் கூறியதால், பயணிகள் என்ன செய்வ தென்று தவித்தபடி நின்றனர். அந்த பஸ்ஸில் தான் சென்றாக வேண்டும் என்ற நிலையில் இருந்த பயணிகள், பணிமனைக்கு வெளியிலேயே வெகு நேரம் காத்திருந்தனர். அருகில் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டியவர்கள் அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ் உள்ளிட்ட வேறு பேருந்துகளில் ஏறிச் சென்றனர். அரசு பஸ்களை பொறுத்தவரை, நடுவழியில் பழுதாகி நின்றால் செல்ல வேண்டிய இடத்திற்கு உடனடி யாக மாற்று பஸ் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள்.
ஆனால் பணி மனைக்கு செல்லும் ஒரு பஸ்ஸில், பயணிகளை பயணச் சீட்டு கொடுத்து ஏற்றுக்கொண்டு சென்றது மட்டுமின்றி, அவர்களை நடுவழியிலேயே இறக்கி விட்டு காத்திருக்கு மாறு கூறிய சம்பவம் அந்த பஸ்ஸில் சென்ற பயணி கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யது. இலவச பஸ் என்பதால் பயணிகளை இவ்வாறு நடத்து கிறார்கள் என்று பெண்கள் பலர் புலம்பினர். பெண்களுக்கான இலவச பஸ்ஸில் பயணிப்போருக்கு இதுபோன்று அசவுகரியம் நடக்காத வகையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி அறிவுரை
- பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள் வரவேற்றார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் தீயணைப்பு துறை சார்பில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட உதவி தீயணைப்பு துறை அதிகாரி துரை தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள் வரவேற்றார். தாளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பசுமை பட்டாசுகள் வெடித்தும், தீயணைப்பு வீரர்கள் பட்டாசு வடிவில் வேடமணிந்தும் மாணவ-மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்யகுமார் கலந்து கொண்டு கூறியதாவது:-
பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடும் வகையில் இப்படிப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வெளியில் திறந்த வெளியில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்காதீர். பட்டாசு வெடிக்கும் போது தளர்வான ஆடைகளை அணியகூடாது. குடிசைகள் நிறைந்த பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது. மருத்துவமனை திரையரங்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க கூடாது. மொத்தத்தில் பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.






