என் மலர்
கன்னியாகுமரி
- ஜே.சி.பி. மூலம் செம்மண் எடுப்பது தெரியவந்தது.
- போலீசாரை கண்டதும் ஜே.சி.பி. டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளாவுக்கு குமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் அனுமதியின்றியும் அளவுக்கு அதிகமாகவும் கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வருவாய்துறை யினரும் போலீசாரும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர மண் எடுக்க பயன்படுத்தும் ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் திருவட்டார் பகுதியில் இருந்து அனுமதியின்றி செம்மண் எடுத்துச் செல்வதாக புகார் வந்தது. குமரன்குடி பகுதியில் இருந்து இந்த மண்ணை கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அவர், திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் போலீசாருடன் இணைந்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தச் சென்றார். அப்போது அங்கு ஜே.சி.பி. மூலம் செம்மண் எடுப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ஜே.சி.பி. டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் ஜே.சி.பி.யை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அதன் உரிமையாளர் யார்? செம்மண் தோண்டியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில்வே அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக மனு பலமுறை அனுப்பி கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது.
- 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று குவிந்தனர்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே நெய்யூர் பேரூ ராட்சிக்குட்பட்ட பரம்பை கண்ணோடு கொக்கோட்டி லிருந்து சரல்விளை பாளை யம், பழவண்டான்கோணம் ஆகிய ஊர்கள் செல்ல ரெயில் வழித்தடத்தில் மேம்பாலம் அமைத்து தரும்படி மாவட்ட கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக மனு பலமுறை அனுப்பி கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் நெய்யூர் பேரூராட்சி தலைவர் பிரதீபா, வார்டு கவுன்சிலர்கள் ராஜகலா ஹரிதாஸ், வக்கீல் ஜெகன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று குவிந்தனர்.
இதனை அடுத்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார், சப்-இன்ஸ் பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மேம்பாலம் கட்டுவது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் இடம் மனு அளித்து தீர்வு காண அறிவுரை கூறினார். இதனை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
- உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
- கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் எண்ணப்படவில்லை.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த அன்னதான திட்டம், பக்தர்களின் நன்கொடை மூலமும், கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
இந்த மாதம் அன்னதான உண்டியல் நேற்று மாலை திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் சுஜித், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் கணக்காளர் கண்ணதாசன், பொரு ளாளர் முருகையா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
இதில் காணிக்கையாக ரூ.69 ஆயிரத்து 339 வசூல் ஆகி இருந்தது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் எண்ணப்படவில்லை.
- பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை உணவு பிரிவு தடுப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
- வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட உணவுப் பிரிவு தடுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் தலைமை யிலான போலீசார் மண வாளக்குறிச்சி வள்ளியாற்று பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிரைவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.
போலீசார் வண்டியை சோதனை செய்தபோது அதில் எந்த ஒரு ஆவணமும் இன்றி மண்எண்ணை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கேன்களில் இருந்த 2000 லிட்டர் மண்எண்ணையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தக்கலை பகுதியை சேர்ந்த ஜெகன் ராஜ் (வயது 27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை உணவு பிரிவு தடுப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெகன்ராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மண்எண்ணையை முட்டத்திலிருந்து கொட்டில்பாட்டிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொட்டில்பாட்டை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு மண்எண்ணை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் கண்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- குமரி மேற்கு கடற்கரையில் 2 நாளில் தடை நீங்குகிறது
- 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும்
குளச்சல், ஜூலை 29-
மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக் காலம் 2 பருவகாலமாக உள்ளது.
குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.
தற்போது தடைக்காலம் என்பதால் குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டன. இந்த காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்த்தனர். வலைகளை பின்னும் பணியிலும் தீவிரமாக ஈடுப்பட்டனர். மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்தனர்.
இந்த நிலையில் குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைக்காலம் நீங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்றவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வார்கள். அதன் ஒரு பகுதியாக விசைப்படகுகளில் ஐஸ் நிரப்பும் பணி இன்று காலை தொடங்கியது. டீசல் நிரப்பும் பணி குடிநீர் ஏற்றும் பணியும் தொடங்கி உள்ளது.
இதற்காக மீன் பிடி சார்ந்த தொழிலாளர்கள் மீண்டும் குளச்சல் வந்து தங்கள் வழக்கமான பணியை தொடங்கி உள்ளனர். இதனால் குளச்சல் மீன் பிடித்துறைமுகம் மீண்டும் பரபரப்பாக இயங்க தொடங்கி உள்ளது. விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் வந்து நிற்க தொடங்கி விட்டன. 31-ந் தேதி நள்ளிரவு முதல் விசைப்படகில் மீன் பிடிக்கும் பணி தொடங்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
- குமரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் உள்ளன.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை மாத சிறப்பு காட்சிப்பொருள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் பாக்கு வெட்டி காட்சிபடுத்தப்பட்டு உள்ளன.
குமரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொருள்களும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. அத்தனை சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக இதுபோன்று மாதம் ஒரு சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தின் இருப்பில் உள்ள அரும் பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அப்பொருளைபற்றிய விளக்கமும் வைக்கப்பட்டு இருக்கும். ஒரு மாதம் முழுவதும் இந்த பொருள் பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சிய கத்தில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு பொருள்க ளின் முக்கியத்துவத்தை குமரி மாவட்ட மக்களிடையே எடுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சிதான் இந்த சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி. இந்த மாதத்துக்கான இந்த கண்காட்சியில் பாக்கு வெட்டி இடம்பெற்றுள்ளது. பழங்காலத்தில் இருந்த வெற்றிலை, பாக்கு தமிழர் பண்பாட்டோடு கலந்த பொருளாக இருந்து வருகிறது.
தெய்வ வழிபாட்டிலும், திருமணம் முதலிய நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை, பாக்கு முக்கிய இடத்தை பெறுகிறது. வெற்றிலை, பாக்கு மகிழ்வுக்குரிய ஒன்றாக இன்ப உணர்ச்சியை தூண்டும் ஒன்றாக தமிழரின் அகவாழ்வில் கலந்திருந்த வரலாறு அரியத்தக்க ஒன்றாகும்.
"வெற்றிலை இந்தியாவின் பூர்வீக பயிர்வகை கிடையாது. இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இது மலேயா நாட்டிலிருந்து தமிழகம் வந்திருக்கலாம்' என்று வரலாற்று பேராசிரியர் பி.டி.சீனிவாச ஐயங்கார் கூறியுள்ளார். "வெற்றிலை, பாக்குப் போடும் பழக்கம் தமிழர்களிடையே சங்க காலத்திற்கு பின் தோன்றியதாக இருக்கலாம் என்று வரலாற்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறியுள்ளார். ஆனால் சங்க இலக்கியங்களில் வெற்றிலை பாக்கு போடுவது பற்றிய குறிப்புகள் நிறைய காணப்படுகின்றன.
தமிழர்களோடு ஒன்றிணைந்த இந்த பண்டைய தமிழகத்தில் அரசருடன் இருக்கும் ஒரு குழு எண்பேராயம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் குழுவில் வெற்றிலை பாக்கு வைத்திருக்கும் ஒருவரும் அடங்குவர். இவரை அடைப்புக்காரன் என்று குறிப்பிடுவர் இதிலிருந்து வெற்றிலை பாக்கு தமிழர் வாழ்வில் எவ்வளவு முக்கியம் பங்கு பெற்றிருக்கிறது என்பதை அறிகிறோம்.
தாம்பூலம் தரித்தல் என்பது ஒரு பழக்கமாக, பண்பாடாக, நம் முன்னோரால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. பாக்கினை வெட்டுவதற்கான கருவிதான் பாக்கு வெட்டி. குறடு போன்று தோற்றமளிக்கும், இரு கை பிடிகள், முனையில், இரு கூர் முனைகள். இரு கூர்மையான முனைகளுக்கு இடையில், பாக்கினை வைத்து வெட்டி, சிறு சிறு துண்டுகளாக்கி மெல்லுவார்கள். இந்த பாக்கு வெட்டிக்குப் பல பயன்கள் உண்டு.
நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினர் அனை வருக்கும் தெரிவிப்பதே இக்கண்காட்சியில் நோக்கமாகும் என இக்கண்காட்சியை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார்.
கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தக்கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.
- பந்தல் அகற்றப்பட்டதால் பரபரப்பு
- நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும். இந்த சந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு புதிதாக 250-க்கு மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டது.
தற்போது சந்தையில் உள்ள 125-க்கும் மேற்பட்ட கடைகளில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். 120-க்கும் மேற்பட்ட கடைகள் காலியாகவே இருந்து வருகிறது. டெபாசிட் உயர்வு மற்றும் வாடகை அதிகமாக உள்ளதால் கடைகள் முழுமையாக செல்ல வில்லை என்று வியாபாரி கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. காலியாக கிடக்கும் கடைகளை மாநகராட்சி சார்பில் ஏலம் இடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பலமுறை நடவடிக்கை மேற்கொண்டும் ஏலம் செல்லவில்லை. இந்த நிலையில் வடசேரியில் ரூ.55 கோடி செலவில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மூன்று மாடியில் வணிக வளாகமும் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து வடசேரி கனகமூலம் சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். மாநகராட்சி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதால் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மாநகராட்சி மேயர் மகேசை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு பஸ் நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ததால் தற்போது எதுவும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வியா பாரிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து வடசேரி அண்ணா சிலையையொட்டியுள்ள சந்தையின் ஓரத்தில் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
பந்தல் போடப்பட்ட நிலையில் போலீசார் உண்ணா விரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பந்தல் அமைக்க கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து போடப்பட்ட பந்தல் அகற்றப்பட்டது. இந்த நிலையில் வியாபாரிகள் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மொத்த சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சந்திரன், குமரி கனகமூலம் சந்தை வியாபாரிகள் சங்கத் தின் தலைவர் கண்ணன், குமரி மாவட்ட வணிகர் சங்கத்தின் தலைவர் நாகராஜன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கி னர்.
ஆர்ப்பாட்டத்தில் காய்கறி வியாபாரிகள் ஏராள மானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்தை மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் சந்தையில் உள்புறத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வடசேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வருகிற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுவது வழக்கம்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறித்தவ ஆலயங்களில் ஒன்றான மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுவது வழக்கம்.
விழாவின் முதல் நாளான வருகிற 6-ந்தேதி காலை 7.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு புனித ஜோசப் தொடக்கப் பள்ளியின் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
விழாவில் 14-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஆலஞ்சி வட்டார முதல்வர் பேரருட்பணி தேவதாஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி ஆடம்பர மாலை ஆராதனை நடத்துகிறார். இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.
விழாவின் 15-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் மரிய டேவிட் தலை மை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 7 மணிக்கு இரையுமன் துறை பங்குத்தந்தை அருட்பணி சூசை ஆன்றனி தலைமை தாங்கி, மலையாள திருப்பலி நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முன் னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீர், சிறப்பு வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடு களை பங்குத்தந்தை ஜெஸ்டின் பிரபு தலைமையில் இணை பங்குத்தந்தை மகிமை நாதன், பங்கு இறைமக்கள், பங்குபேரவை துணை தலைவர் பெர்னாண்டஸ், செயலாளர் மைக்கலோஸ், ஜோண் ஆப் ஆர்க் ஜோஸ், பொருளாளர் செல்லம், துணை செயலாளர் கிறிஸ்துதாஸ், பங்குபேரவை உறுப்பினர்கள், விழாக்குழு பொறுப்பாளர்கள், அருட் சகோதரிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- மீனவர்கள் காப்பாற்றினர்
- மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடலில் புனித பாதம் நனைப்பது வழக்கம்.
கன்னியாகுமரி:
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள கடலில் புனித பாதம் நனைப்பது வழக்கம்.
நேற்று காலை அங்கு கடற்கரையில் நின்ற பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்தார். இதனால் அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். உடனே அவர்கள் சப்தமிட்டனர். உடனே புதூர் மீனவர்கள் கடலில் குதித்து கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு கரை சேர்த்தனர்.
உடல் முழுவதும் மணல் ஒட்டியிருந்தது. தகவலறிந்த குளச்சல் மரைன் இன்ஸ் பெக்டர் நவீன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அந்த பெண் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு கிறார். போலீசார் நடத்திய விசார ணையில் அந்த பெண் கருங்கல் அருகே நட்டாலம் கிணற்று விளையை சேர்ந்த ஜானி மனைவி ஆன்சி (30) என்பதும், கணவன்-மனை விக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனம் உடைந்த ஆன்சி மண்டைக் காடு வந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஆன்சிக்கு 2 பெண் குழந்தை கள் உள்ளனர்.
- மாணவ-மாணவிகளை இறக்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட பஸ் ஒன்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட பஸ் ஒன்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பு அருகே உள்ள திருப்பத்தில் திரும்பும் போது பஸ்சின் முன்பக்க என்ஜின் பகுதியில் "திடீர்" என்று"டமார்" என்ற சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து அந்த என்ஜின் பகுதியில் "திடீர்"என்று தீப்பிடித்து ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.
உடனே அந்த பஸ்சை டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தினார். அந்த பஸ்சில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். அதன்பிறகு அந்த பஸ்சின் டிரைவர் அந்த பஸ்சில் இருந்த தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கிடையில் இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் கன்னியா குமரி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பால கிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் பஸ்சின் முன் பகுதியில் பிடித்த தீயை டிரைவரும் பொதுமக்களும் சேர்ந்து முழுமையாக அணைத்து விட்டனர். இருப்பினும் மேலும் அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.
இதனால் தீ அணைக்கும் படை வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருப்பதற்காக தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவத்தின் போது மாணவ-மாணவிகள் பஸ்சில் இருந்து தப்பி வெளியே ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். பள்ளிக்கூட பஸ்சில் தீ பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அனிஷை ஆஷிக் றோஸ் கூப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதி காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் ராஜன் (வயது 35). இவர் வேங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்தி ஆசிரியராக உள்ளார். வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் றோஸ் மகன் ஆஷிக்றோஸ் ஆகியோர் அதே பகுதியில் மரப்பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆஷிக் றோசின் திருமண செலவுக்காக அனிஷ் தனது கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆஷிக்றோசுக்கு கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அனிஷை ஆஷிக் றோஸ் கூப்பிட்டுள்ளார். இதையடுத்து பணம் வாங்க அனிஷ் மற்றும் அவர் மனைவி டெலிஷா என்பவருமாக சென்றனர். அங்கு பணம் கொடுக்காமல் ஆசிரியர் அனிஷை ஆஷிக் தாக்கியுள்ளார். தடுக்க முயற்சி செய்த அனிஷின் மனைவியை அவதூறாக பேசியுள்ளார். இதில் காயமடைந்த அனிஷ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு
- கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.மணி கண்டபிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர் துறை ஆணையருமான அதுல் ஆனந்த உத்தரவின்படி மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் அறிவுரையின் பேரில் நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி மரம் வெட்டும் தொழில், விவசாய தொழிலில் கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்துப்படுகிறார்களா? என்று எனது மண கண்ட பிரபு) தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகியோருடன் தக்கலை, திருவட்டார், ஆற்றூர் மற்றும் அழகிய மண்டபம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.கொத்தடிமை தொழிலாளர் முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே தொழிலாளர்களை கொத்தடி மைகளாக பணிக்கு அமர்த்து வது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும். மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப டும். இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது தெரியவந்தால் 1098 என்ற எண்ணிலும், 04652-229077 என்ற எண்ணிலும் புகார் தெரி விக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






