search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சி
    X

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சி

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • குமரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் உள்ளன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை மாத சிறப்பு காட்சிப்பொருள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் பாக்கு வெட்டி காட்சிபடுத்தப்பட்டு உள்ளன.

    குமரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொருள்களும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. அத்தனை சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக இதுபோன்று மாதம் ஒரு சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தின் இருப்பில் உள்ள அரும் பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அப்பொருளைபற்றிய விளக்கமும் வைக்கப்பட்டு இருக்கும். ஒரு மாதம் முழுவதும் இந்த பொருள் பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சிய கத்தில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு பொருள்க ளின் முக்கியத்துவத்தை குமரி மாவட்ட மக்களிடையே எடுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சிதான் இந்த சிறப்பு காட்சி பொருள் கண்காட்சி. இந்த மாதத்துக்கான இந்த கண்காட்சியில் பாக்கு வெட்டி இடம்பெற்றுள்ளது. பழங்காலத்தில் இருந்த வெற்றிலை, பாக்கு தமிழர் பண்பாட்டோடு கலந்த பொருளாக இருந்து வருகிறது.

    தெய்வ வழிபாட்டிலும், திருமணம் முதலிய நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை, பாக்கு முக்கிய இடத்தை பெறுகிறது. வெற்றிலை, பாக்கு மகிழ்வுக்குரிய ஒன்றாக இன்ப உணர்ச்சியை தூண்டும் ஒன்றாக தமிழரின் அகவாழ்வில் கலந்திருந்த வரலாறு அரியத்தக்க ஒன்றாகும்.

    "வெற்றிலை இந்தியாவின் பூர்வீக பயிர்வகை கிடையாது. இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இது மலேயா நாட்டிலிருந்து தமிழகம் வந்திருக்கலாம்' என்று வரலாற்று பேராசிரியர் பி.டி.சீனிவாச ஐயங்கார் கூறியுள்ளார். "வெற்றிலை, பாக்குப் போடும் பழக்கம் தமிழர்களிடையே சங்க காலத்திற்கு பின் தோன்றியதாக இருக்கலாம் என்று வரலாற்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறியுள்ளார். ஆனால் சங்க இலக்கியங்களில் வெற்றிலை பாக்கு போடுவது பற்றிய குறிப்புகள் நிறைய காணப்படுகின்றன.

    தமிழர்களோடு ஒன்றிணைந்த இந்த பண்டைய தமிழகத்தில் அரசருடன் இருக்கும் ஒரு குழு எண்பேராயம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் குழுவில் வெற்றிலை பாக்கு வைத்திருக்கும் ஒருவரும் அடங்குவர். இவரை அடைப்புக்காரன் என்று குறிப்பிடுவர் இதிலிருந்து வெற்றிலை பாக்கு தமிழர் வாழ்வில் எவ்வளவு முக்கியம் பங்கு பெற்றிருக்கிறது என்பதை அறிகிறோம்.

    தாம்பூலம் தரித்தல் என்பது ஒரு பழக்கமாக, பண்பாடாக, நம் முன்னோரால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. பாக்கினை வெட்டுவதற்கான கருவிதான் பாக்கு வெட்டி. குறடு போன்று தோற்றமளிக்கும், இரு கை பிடிகள், முனையில், இரு கூர் முனைகள். இரு கூர்மையான முனைகளுக்கு இடையில், பாக்கினை வைத்து வெட்டி, சிறு சிறு துண்டுகளாக்கி மெல்லுவார்கள். இந்த பாக்கு வெட்டிக்குப் பல பயன்கள் உண்டு.

    நமது முன்னோர்கள் பயன்படுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினர் அனை வருக்கும் தெரிவிப்பதே இக்கண்காட்சியில் நோக்கமாகும் என இக்கண்காட்சியை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார்.

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தக்கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.

    Next Story
    ×