என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்
    • ஏற்பாடுகளை அந்த ஊர் தலைவர் சிவபெருமான் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    தென்தாமரைகுளம் அருகே கரும்பாட்டூர் அருகில் உள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் தேவி முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் திருமணமான பெண்கள் கலந்துகொண்டு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமணமான சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைப்பதற்கும், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கும் பாடல்பாடி பூஜையில் ஈடுபட்டனர். பின்னர் கொலு பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்த ஊர் தலைவர் சிவபெருமான் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
    • மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    மணவாளக்குறிச்சி:

    வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஐ.இ.டி. கன்னியாகுமரி நெட்வொர்க் மற்றும் அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்த கண்காட்சியில் 172 மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக காட்சிப்படுத்திய மாதிரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளியின் துணை தாளாளர் சுனி, இயக்குநர் தருண்சுரத், அருணாச்சலா பொறியியல் கல்லூரி முதல்வரும், ஐ.இ.டி.கன்னியாகுமரி நெட்வொர்க்கின் முன்னாள் தலைவருமான ஜோசப் ஜவகர், அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜிமலர் ஆகியோர் கலந்துகொண்டனர். கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது
    • போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வெளியேற்றம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து இடையிடையே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் வானம் மழை மேகத்துடன் மப்பும் மந்தாரமாக காட்சியளித்தது. பின்னர் மதியம் 12.30 மணியில் இருந்து "திடீர்"என்று இடி-மின்ன லுடன் கனமழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை பிற்பகல் 2.30 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. அதன்பிறகு மாலை வரை விட்டு விட்டு சாரல் போன்று மழை பெய்து கொண்டே இருந்தது. இடையிடையே பயங்கர இடி முழக்கமும், கண்ணை பறிக்கும் வகையில் "பளிச், பளிச்"என்று மின்னலும் ஏற்பட்டது. இந்த கனமழையினால் தெருக்களில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழை வெள்ளம் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் புகுந்தது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதைத்தொடர்ந்து கோவில் மேலாளர் ஆனந்த் மேற்கொண்ட அதிரடி நட வடிக்கையின் காரணமாக திருக்கோவில் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் கோவிலுக்குள் தேங்கி நின்ற மழையின் நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரத் துக்குள் அந்த மழை வெள்ளம் முழுமையாக வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மாலை 4 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வந்தனர். தொடர்ந்து பெய்த இந்த கனமழையினால் கன்னியா குமரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க முடியாமல் லாட்ஜில் உள்ள அறைகளி லேயே முடங்கி கிடந்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது.

    • அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் கொள்ளளவை நெருங்கியதால் அணை களுக்கு வந்த தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழையின் வேகம் படிப்படியாக குறைந்து வந்தது. 2 நாட்களாக தூறலுடன் மட்டும் நின்றது. நேற்று காலை வெயில் தலைகாட்டத் தொடங்கியது. ஆனால் இது சற்றுநேரம் தான் நீடித்தது. மதியம் 2 மணிக்கு வானில் திடீரென்று கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகை யில் மழை பெய்யத் தொடங்கியது.

    இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. நாகர்கோவில், கன்னியாகுமரி, இரணியல், தக்கலை, மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த இந்த மழை குமரியை புரட்டிப் போட்டது. நாகர்கோவில் கோர்ட்டு சாலை, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் ரோடு, செம்மாங்குடி ரோடு, நாகராஜா கோவில் கிழக்கு வாசல், ஆசாரிமார் வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்தது.

    திங்கள் சந்தை, குளச்சல் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால் சில சாலைகளில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் சென்ற வர்கள் பெரிதும் தவிப்புக்குள்ளானார்கள். தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 117 வீடுகள் இடிந்து சேதமடைந்திருந்தன. இந்த நிலையில் கல்குளம் தாலுகாவில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

    குருந்தன்கோட்டில் 60 மில்லி மீட்டரும், கொட்டா ரத்தில் 57.2 மில்லி மீட்டரும், நாகர்கோவிலில் 54.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர் மழையின் காரண மாக அணைகளுக்கு நீர்வ ரத்தும் அதிகமாக உள்ளது. சிற்றாறு அணைகள் கொள்ளளவை நெருங்கி வருவதால், தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்தும் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மழையின் காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.17 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 836 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. 229 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77 அடி கொள்ள ளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.50 அடியாக உள்ளது. அணைக்கு 675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.40 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குருந்தன்கோடு 60, கொட்டாரம் 57.2, நாகர் கோவில் 54.2, இரணியல் 51, மாம்பழத்துறையாறு 48.4, ஆணைக்கிடங்கு 46.8, மயிலாடி 45.2, குளச்சல் 32, அடையாமடை 23, தக்கலை 22, குழித்துறை 16, பூதப் பாண்டி 15.8, முள்ளங்கினா விளை 13.6, கன்னிமார் 12.4, களியல் 11, திற்பரப்பு 10.8, கோழிப்போர்விளை 10.5, சுருளகோடு 10.2, ஆரல்வாய் மொழி 9.4, பேச்சிப்பாறை 3.2, பெருஞ்சாணி 7.6, புத்தன் அணை 7, சிற்றாறு 2- 5.2, முக்கடல் அணை 5.2.

    • சி.பி.சிஐ.டி. போலீசார், பேராசிரியர் பரமசிவத்தை விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
    • அடுத்த கட்டமாக பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தவர் சுகிர்தா (வயது 27). தூத்துக்குடியை சேர்ந்த இவர், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி மாணவி சுகிர்தா, விடுதி அறையில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் குலசேகரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அறையில் சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரீஷ், மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் தொந்தரவு கொடுத்ததாகவும் சுகிர்தா குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று சுகிர்தாவின் தந்தை சிவகுமார் மற்றும் பலர் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் விசாரணையை தொடங்கினர். அவர்கள் மூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    சுகிர்தா தற்கொலை செய்த விடுதி அறையை பார்த்த அவர்கள், சக மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் போன்றோரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விவரம் சேகரித்தனர். தொடர்ந்து சிறையில் இருக்கும் பேராசிரியர் பரமசிவம் மற்றும் முன்ஜாமீன் பெற்றுள்ள ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

    இதற்காக பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுக்க வேண்டி, நாகர்கோவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த மனு நேற்று மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் அழைத்து வந்திருந்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி, ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து சி.பி.சிஐ.டி. போலீசார், பேராசிரியர் பரமசிவத்தை விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை காண்பித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் பேராசிரியர் பரமசிவம், தனக்கும், இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இன்று காலையும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கினர். பேராசிரியர் பரமசிவத்தை குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தினர். பிறகு மாலையில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அடுத்த கட்டமாக பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விசாரணைக்கு ஆஜராகும்படி 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்படுகிறது.

    • ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கற்பக விநாயகர் ஆலயத்தில் பெருமாள் வேலை பார்த்து வந்தார்.
    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பெருமாள் உணர்வற்று விழுந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 52). இவர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் இருக்கும் ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கற்பக விநாயகர் ஆலயத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று பெருமாள், வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். அவர் கோவிலில் பணிகளை செய்து கொண்டிருந்த மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. மேகங்கள் திரண்டிருந்ததால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    கோவிலுக்குள்ளும் வெளிச்சம் இல்லாததால், பெருமாள் மின்விளக்கு சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெருமாள் உணர்வற்று விழுந்தார்.

    இதனை பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக பெருமாளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில், கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெருமாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

    மழையின் காரணமாக சுவிட்ச் போர்டு இருந்த கோவில் சுவற்றில் நீர் கசிந்து இருந்ததும் அது தெரியாமல் பெருமாள் சுவிட்ச் போட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பெருமாளுக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    • மகன்களிடம் இருந்து சொத்தை மீட்டுதர கோரிக்கை
    • தங்களை பராமரிக்காமல் கைவிட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மற்ற நாட்களிலும் பொதுமக்கள் மனு அளித்து செல்கிறார்கள். மனு அளிக்க வருபவர்கள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதை தடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பூதப்பாண்டி அருகே நடுவூர் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியினர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களது சொத்தை மகன்கள் எழுதி வாங்கி விட்டதாகவும், அதன் பிறகு தங்களை பராமரிக்காமல் கைவிட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    எனவே அந்த சொத்தை மீண்டும் எங்களுக்கு மீட்டு தர வேண்டும் என்று கூறி மனு அளித்தனர். திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக பகுதியில் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

    மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட ஜோசப் தெரு, வடக்கு தெருவில் (பிஷப் ஹவுஸ் ரோடு) ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் 41-வது வார்டுக்குட்பட்ட சாஸ்தான் கோவில் தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் சீரமைப்பு பணி, 48-வது வார்டுக்குட்பட்ட தெற்கு புதுத்தெரு, பிர்தவுசியா நகரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி போன்றவையும் இன்று நடந்தது. இந்தப் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சுஜின், தொழில் நுட்ப உதவியாளர் அரவிந்த், மண்டல தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் ஜோனா கிறிஸ்டி, அனிலா, பியாசா ஹாஜிபாபு, பகுதி செயலாளர் சேக் மீரான், அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், ராதாகிருஷ்ணன், பீட்டர் வட்ட செயலாளர்கள் ஆதித்தன், கரீம் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
    • பாதிக்கப்பட்ட வயல்களை படம் எடுத்து அதிகாரிகளிடம் வழங்கலாம்

    நாகர்கோவில், அக்.19-

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து புலவர் செல்லப்பா பேசுகையில், பழையாற்றை மீட்டெடுப்போம் என்று முயற்சி மேற்கொண்டுள்ள கலெக்டர் ஸ்ரீதருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாகர்கோவில் மாநகராட்சி மேயரை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது விவசாயிகள் அனைவரும் அதற்கு துணை இருப்போம் என்றார்.

    இதைத் தொடர்ந்து கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவிக்கப்பட்டது. பின்னர் விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது மழை பெய்து வருகிறது. பரசேரி. வில்லுக்குறி பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகிறார்கள். எனவே சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத்திற்கு கீழுள்ள நெல்களை மட்டுமே வாங்குகிறார்கள். மற்ற நெற்களை திருப்பி அனுப்புகிறார்கள்.

    தற்போது குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் 17 சதவீதத்திற்கு குறைவாக நெல் வழங்க முடியாது. எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தோவாளை பகுதியில் ஏற்கனவே மழை இல்லாமல் நெற்பயிர்கள் கருகி இருந்த நிலையில் விவசாயிகள் கஷ்டப்பட்டு அந்த வயலை விளைய வைத்துள்ளனர். தற்பொழுது நெல்லை கொடுக்க சென்றால் அதிகாரிகள் நெற்களை வாங்காமல் புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது.

    காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நெல் விவசாயிகளுக்கும் விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து வருகின்றன. சம்பா அரிசி ஒரிஜினல் நமது மாவட்டத்தில் விற்பனை செய்யப்படவில்லை. 2 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்துள்ளேன். ஆனால் எனக்கு குறைவான மகசூலே கிடைத்தது. மற்ற ரக நெல்களை விவசாயம் செய்த விவசாயிகளுக்கு ஒன்றரை மேனி முதல் 2 மேனி வரை கிடைத்துள்ளது.

    இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை விட்டு விட்டு வருகிறார்கள். பாரம்பரிய நெல் விவசாயத்தை ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காரவிளை பகுதியில் விளைநிலங்களில் தண்ணீர் புகுவதால் மரச்சீனி மற்றும் வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 6 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் மணல் மூடைகள்அடுக்கப்பட்டு இருந்தன. தற்பொழுது மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 17 சதவீதத்திற்கு மேல் உள்ள நெற்பயிர்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். குமரி மாவட்டத்தில் எவ்வளவு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட இடங்களை புகைப்படம் எடுத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் அல்லது வேளாண் துறை அதிகாரிகளிடம் வழங்கலாம்.

    தற்பொழுது 70 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வள்ளியாற்றில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் இணை பதிவாளர் சிவகாமி, மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதி
    • திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் வேகமாக வந்தது.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இளம்பிலாம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (வயது 24). இவரது நண்பர்கள் தினேஷ் (23), அபினேஷ் (23).

    இவர்கள் 3 பேரும் நேற்று இரவு மார்த்தாண்டத்தை அடுத்த ஞானன் விளை பகுதியில் உள்ள ெரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அந்த வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் வேகமாக வந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தண்டவாளத்தில் இருந்து நகர்ந்து செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் ரெயில் அருகில் வந்து விட்டது. இதனால் தினேஷ், மற்றும் ரதீஸ் மீது ரெயில் உரசியபடி சென்றுள்ளது. இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று காயம்அடைந்த தினேஷ் மற்றும் ரதீசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உருப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா கலந்து கொண்டார்

    குளச்சல் :

    குளச்சல் நகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா அண்ணா சிலை அருகே நடைபெற்றது.

    இதில் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமையில் எம். ஜி.ஆர்., ஜெயலலிதா உருப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரவீந்திர வர்சன், ஆனக்குழி சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் சந்துரு, மாவட்ட பொருளாளர் திலக், எஸ்.எம்.பிள்ளை, விஜயகுமார், பஷீர் கோயா, தாசின், மேரி ஜெசிக்கலா, செர்பா, சிட்டி ஷாகுல், வினோத், ஜெகன், அம்பிளிகலா, சிசிலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நாளை இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது
    • ஏற்பாடுகளை புத்தேரி ஸ்ரீதேவி துர்கா ஆதிபராசக்தி சக்தி பீடபக்தர்கள் செய்து வருகின்றனர்.

    பார்வதிபுரம் :

    நாகர்கோவில் புத்தேரி ஸ்ரீதேவி துர்கா ஆதிபராசக்தி பீடத்தில் நவராத்திரி பூஜை கடந்த 15-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. தினமும் காலை அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கூட்டு வழிபாடு, வேள்வி பூஜை, பின்னர் மாலையில் கொலு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான நாளை (20-ந்தேதி) காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு மகா இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் மூலஸ்தானத்திற்கு சென்று தாங்களே நேரடியாக அபிஷேகம் செய்யலாம். வருகிற 22-ந்தேதி 8-ம் நாளில் துர்கா அஷ்டமி சிறப்பு வழிபாடும், மாலை சக்தி பீடத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். 23-ந்தேதி சரஸ்வதி பூஜை அன்று சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளும் நடைபெறும். 24-ந்தேதி விஜயதசமி தினத்தன்று காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறும். மாலை 4 மணிக்கு அன்னை பாரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் நிகழ்ச்சியை தொடர்ந்து சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை புத்தேரி ஸ்ரீதேவி துர்கா ஆதிபராசக்தி சக்தி பீடபக்தர்கள் செய்து வருகின்றனர்.

    ×