என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    சங்கராபுரம் அருகே காய்கறி மூட்டைகளுக்குள் மறைத்து வைத்து சாரயம் கடத்தியவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரு கே மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுகத்அலி மற்றும் போலீசார் தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த மினி லாரியை நிறுத்தினர். அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். டிரைவர் மட்டும் பிடிபட்டார்.

    இதையடுத்து மினி லாரியில் இருந்த காய்கறி மூட்டைகளை சோதனை செய்தபோது காய்கறி மூட்டைகளுக்கு அடியில் உள்ள மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதில் வெல்லம் மற்றும் 120 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    விசாரணையில் பிடிபட்ட டிரைவர் சேராப்பட்டு கீழ்நிலவூர் பகுதியை சேர்ந்த தமிழ்மணி(வயது 30), தப்பி ஓடியவர் மேல்நிலவூரை சேர்ந்த அண்ணாதுரை(26) என்பது தெரியவந்தது.

    இவர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக பெங்களூருவில் இருந்து வெல்லத்தை கடத்தி வந்து உள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக மேல் பகுதியில் உள்ள மூட்டைகளில் காய்கறி மூட்டைகளை வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்மணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மினி லாரியுடன் 750 கிலோ வெல்லம், 120 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அண்ணா துரையை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    திருநாவலூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியன் மேற்பார்வையில் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை திருநாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி திருநாவலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட எம். குன்னத்தூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் சில மர்ம நபர்கள் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு 100-க்கும் மேற்பட்டோர் சூதாடி கொண்டிருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் சூதாடி கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை விரட்டிச் சென்று 5 பேரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கொக்கான்காடு பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 55) ரிஷிவந்தியம் பாடியை சேர்ந்த மணிகண்டன் (43) எல்லை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை(37) குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (44) மற்றும் முருகன் (45) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் 6 செல்போன்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருக்கோவிலூர் அருகே வியாபாரியை வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர் அதே ஊரில் சவுண்ட் சர்வீஸ் மற்றும் வாடகை பாத்திர கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அன்பு என்கிற விஜய் (22), வெங்கடேசன் (19) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று விஜயகுமார் மாயனூர் ரெயில்வே பாதையில் நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு வந்த விஜய், அவரது நண்பர் வெங்கடேசன் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 3 பேர் ஒன்று சேர்ந்து விஜயகுமாரை வழிமறித்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் அலறி துடித்தவாறு விஜயகுமார் கீழே சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய விஜயகுமாரை உடனே அங்கு உள்ளவர்கள் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலை மோசமானது. பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஜயகுமார் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த தகவல் தேவனூர் கிராமத்தில் காட்டு தீ போல் பரவியது. விஜயகுமாரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் தேவனூர் கூட்டு ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர்.

    அதனை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. முதற்கட்டமாக பழனி, அஞ்சலை, சுருளி மற்றும் தேவிகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அன்பு மற்றும் வெங்கடேசன் நேற்று மாயனூர் ரெயில்வே பாதையில் கக்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அய்யப்பன், காடகனூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித், அசோகன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தனியார் நிறுவன நிதி மேலாளர் விபத்தில் உயிரிழந்த நிலையில், விபத்துக்கு காரணமாக வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் தமிழ் அழகன்(வயது 32). கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று பணம் வசூல் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் பாவளம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

    இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை விபத்தில் பலியான தமிழ் அழகனின் உருவ படத்துடன் கூடிய பதாகையுடன் உறவினர்கள் தேவபாண்டலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டனர்.

    பின்னர் அவர்கள் தமிழ் அழகனின் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரி சங்கராபுரம்- திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

    இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக சங்கராபுரம்- திருவண்ணாமலை சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    சங்கராபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் 40 லிட்டர் சாரயம் கடத்திய சம்பவத்தில் 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி) சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் புதுப்பாலபட்டு அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அவர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். 

    பின்னர் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் சாக்குப்பையில் 40 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    சங்கராபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் தமிழ்அழகன்(32). கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று பணம் வசூல் செய்வதற்காக பாவளம் கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    தியாகராஜபுரம் மணி நதி ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    சங்கராபுரத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றியவர்கள், முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் என 50 பேரிடம் அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றியவர்கள், முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் என 50 பேரிடம் தலா 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

    கல்வராயன்மலையில் பாறை மீது கார் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கச்சிராயப்பாளையம்:

    சங்கராபுரம் அருகே பூட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் பிரான்சிஸ். இவரும் இவரது நண்பர் ஜார்ஜ் ஆகியோர் தனித்தனி காரில் குடும்பத்துடன் கல்வராயன்மலைக்கு சுற்றுலா வந்தனர். இங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் மாலையில் அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    அப்போது பீட்டர் பிரான்சின் மகன் ஜெய்சந்தோஷ்(வயது 11) ஜார்ஜின் காரில் ஏறினான். பெரியார் நீர்வீழ்ச்சியின் அருகே வந்தபோது ஜார்ஜ் ஓட்டி வந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலையோரம் உள்ள பாறை மீது மோதி நின்றது. இதில் படுகாயம் அடைந்த ஜெய் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது.

    இந்த விபத்து குறித்து கரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வராயன்மலைக்கு சுற்றுலா வந்து திரும்பும் வழியில் பாறையின் மீது கார் மோதி 11 வயது சிறுவன் பலியான சம்பவம் பூட்டை ரோடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வுசெய்தார்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வுசெய்தார். முன்னதாக அத்தியூர் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு வெட்டும் பணி, புதிதாக அமைக்கப்படும் நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை அவர் ஆய்வு செய்தார். 

    மேலும் கடுவனூர், பாக்கம் புதூர், கானாங்காடு ஆகியஊராட்சிகளில் 15-வது நிதிக்குழு திட்ட பணிகள், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும்பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள், ஜல் ஜீவன் மிஷன் பணிகள், புதியதாக வெட்டப்பட்டு வரும் திறந்தவெளி கிணறு உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். 

    அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் மணி, செயற்பொறியாளர் செல்வகுமரன், ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், நாராயணசாமி, ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கோவிந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    திருக்கோவிலூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த மேலும் 3 பேருடன் அதே ஊரில் உள்ள தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது காலை உணவு சாப்பிடுவதற்காக வயலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது நெடுநேரமாகியும் தண்ணீர் எடுத்துக் கொண்டு வராததால் உடன் வேலை செய்தவர்கள் சந்தேகப்பட்டு கிணற்றுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அய்யப்பன் போட்டிருந்த செருப்பும் தண்ணீர் எடுக்கச் சென்ற குடமும் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் உடன் கிணற்றில் மூழ்கி தேடிப் பார்த்தபோது அய்யப்பன் நீரில் மூழ்கி இறந்து போனது தெரியவந்தது.

    தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    நடுரோட்டில் பஸ் நின்று போனதால் அந்த வழியே போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் ஆனது.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் இருந்து சங்கராபுரம் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் ஏழுமலை ஓட்டிச் சென்றார்.

    இந்த பஸ் மணலூர்பேட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சென்று கொண்டிருந்தபோது திடீரென அரசு பஸ்சை குடிபோதையில் சங்கராபுரம் அருகே உள்ள பெரியமணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் வழிமறித்தார்.

    பின்னர் பஸ்சில் ஏறி டிரைவரிடம் தகராறு செய்து நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் பெரும் பீதிக்கு உள்ளாகினர். மேலும் பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளார். நடுரோட்டில் பஸ் நின்று போனதால் அந்த வழியே போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் ஆனது.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மணலூர்பேட்டை போலீசார் அரசு பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் அண்ணாநகர் பகுதியில் மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பதாக தியாகதுருகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அண்ணாநகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.1,150 மதிப்பிலான 85 பாக்கெட் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையொட்டி புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மளிகை கடை உரிமையாளரான சங்கராபுரம் அருகே சூ.பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 37) என்பவரை கைது செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் ராஜா முன்னிலையில் மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    ×