என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    தியாகதுருகம் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக திறந்த வெளி கிணறு வெட்டும் பணியை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பகுதியில் உள்ள முடியனூர், விருகாவூர், வேளாக்குறிச்சி, பொரசக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகளை திட்ட இயக்குநர் மணி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், தார் சாலை மற்றும் ஜல்லி சாலைகள் அமைக்கும் பணி, புதிய குடிநீர் கிணறு, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் கிணறுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாகவும்,விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். மேலும் வேளாக்குறிச்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும் எனவும், மேலும் பொதுமக்களுக்கு குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து அதே பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக திறந்த வெளி கிணறு வெட்டும் பணியை ஆய்வு செய்தார். பணியை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் ஜெயப்பிரகாஷ், கோபி, விஜயன், பணி மேற்பார்வையாளர் சிவக்குமார், ஊராட்சி செயலாளர்கள் சிவக்குமார், முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
    ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை இரண்டாக பிரித்து ரிஷிவந்தியம் தொகுதி வானாபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சங்கராபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வானாபுரத்தை தாலுகாவாக அறிவித்துள்ளதை கண்டித்தும், சங்கராபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரிஷிவந்தியத்தை தலைமை இடமாக கொண்டு தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்றும் ரிஷிவந்தியம் மற்றும் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரிஷிவந்தியம் உள்பட 10 கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது குடும்ப அட்டையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகள் கூறுகையில், குடும்ப அட்டையை யாரும் ஒப்படைக்க வேண்டாம், மாறாக கோரிக்கை தொடர்பாக 10 பேர் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கலாம் என்றனர். இதையடுத்து கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 10 பேர் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
    சங்கராபுரம் அருகே வாலிபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திலீபன்(வயது27). இவர், வீட்டில் இருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திலீபன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீபன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தங்கும் விடுதியில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 32). தச்சு தொழிலாளி.

    இவர் தனது நண்பரான காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடன் வேலைக்காக விருத்தாசலத்திலிருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். வார விடுமுறை முடிந்து பலர் சென்னைக்கு சென்றதால் அனைத்து பஸ்களும் கூட்டமாக இருந்தது.

    எனவே அன்பழகன், சரவணன் ஆகிய இருவரும் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் காலையில் சரவணன் சென்னைக்கு கிளம்புவதற்காக எழுந்து பார்த்தார். அப்போது அன்பழகன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பலமுறை எழுப்பியும் அவர் கண் விழிகாததால் அச்சமடைந்த சரவணன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அன்பழகனை சோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தங்கும் விடுதியில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் உயிரிழந்தவர் இயற்கை மரணம் அடைந்தாரா அல்லது அவர் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தியாகதுருகம் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற அரசு பள்ளி மாணவி தண்ணீர் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை வயது (48).

    இவர் நேற்று தனது மனைவி அமுதா, மகள் ஓவியா (வயது 14). அதே பகுதியில் அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆகியோருடன் கலையநல்லூரில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றார். அப்போது தனது மகள் ஓவியாவை ஏரியின் கரையில் அமர வைத்து விட்டு ஏழுமலையும் அவரது மனைவியும் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர்.

    மீன் பிடித்துவிட்டு மீண்டும் வந்து மளைப்பார்த்த போது காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர்கள் ஏரியில் தேடிப்பார்த்தபோது ஓவியா தண்ணீரில் மூழ்கி மயக்கமடைந்த நிலையில் கிடந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேலம் கள்ளக்குறிச்சி ரெயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் சட்டமன்றத்தில் பேசியதாவது:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வெளிவட்ட சாலை மற்றும் புறநகர் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும்.

    கள்ளக்குறிச்சி நகராட்சி பஸ் நிலையத்திலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை நகர பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது எனவே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேலம் கள்ளக்குறிச்சி ரெயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடத்தை கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே கட்டித்தர வேண்டும். கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் தற்போது நகராட்சி திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வாணாபுரம் பகண்டை கூட்டு சாலையில் ஒரு சார்பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் மற்றும் விவசாயிகள் விளைபொருளை விற்பனை செய்திட ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவை அமைத்து தரவேண்டும்.

    மணலூர்பேட்டை பெருமாள் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து தரவேண்டும். மேலும் கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபும் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய அங்கன்வாடி கட்டடங்கள், உயர்மட்ட பாலங்கள், பள்ளிகள் தரம் உயர்த்துதல், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் பஸ்கள், பட்டா வழங்குதல், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், தடுப்பணைகள், கால்நடை மருத்துவமனைகள், பகுதிநேர நியாய விலைக் கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், காடுகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து கழிவுநீர் விளைநிலங்களில் செல்லாத வண்ணம் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பேரூராட்சி உட்பட்ட புக்குளம் பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி பொதுமக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தப்படும் கழிவு நீர், கால்வாய் மூலம் சித்தலூர் சாலையோரம் உள்ள பிரதான வாய்க்காலில் செல்கிறது. இவ்வாறு செல்லும் கழிவுநீர் சாலையோரமாக தொடர்ந்து செல்ல வழி இல்லாமல் அருகிலுள்ள விளைநிலங்களில் புகுந்து விடுகிறது.

    இதனால் அந்த பகுதியில் சுமார் 15 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பயிர் செய்ய முடியாமல், மகசூல் பாதிப்பும் ஏற்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மாயவன் (வயது 56) என்பவர் கூறுகையில், எனக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் வாழை, சம்பங்கி, குண்டுமல்லி ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ளேன். இந்த நிலையில் புக்குளம் பகுதியில் இருந்து வெளியேற்றும் கழிவுநீர் கால்வாய் மூலம் விளைநிலங்களில் பாய்கிறது. இதனால் எனது நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள சம்பங்கி, குண்டுமல்லி ஆகிய பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தது.

    மேலும் 1 ஏக்கர் அளவில் பயிர் செய்யப்பட்ட வாழை வளர்ந்த நிலையில் வாழை மரத்தில் வேர் அழுகல் ஏற்பட்டு வாழை மரங்கள் சிறுத்து போகிறது. மேலும் வாழை மரம் குலை தள்ளிய நிலையில் வாழைக்காய் பிஞ்சுகளாக உள்ளபோதே வாழை மரங்கள் திடீரென சாய்ந்து விடுகின்றன. இதனால் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் தெரிவித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து கழிவுநீர் விளைநிலங்களில் செல்லாத வண்ணம் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    சங்கராபுரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், புதுபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மனைவி சித்ரா. இவர் இரவு சமையல் செய்து விட்டு கியாஸ் அடுப்பை மூடாமல் மறந்து விட்டு தூங்க சென்றுள்ளார். இரவு முழுவதும் சிலிண்டரில் இருந்த கியாஸ் கசிந்து வீடு முழுக்க பரவி உள்ளது.

    இதனை அறியாத சித்ரா காலை பால் காய்ச்ச கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென கூரை வீடு தீ பிடித்து எரிய தொடங்கியது. சித்ரா அதிர்ச்சிடையந்து வெளியே ஓடி வந்தார்.

    தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    பின்னர் கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். தீ விபத்தில் வீட்டில் இருந்த துணி, பத்திரம், தானியங்கள், பணம் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.இதனிடையே தகவலறிந்த சங்கராபுரம் தாசில்தார் (பொ) இந்திரா, பாதிக்கப்பட்ட சித்ராவிடம் அரசு நிவாரண உதவி தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கினார்.

    அப்போது மண்டல துணை தாசில்தார் பசுபதி, வருவாய் ஆய்வாளர் திருமலை உடனிருந்தனர்.
    ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்ட மிடுவது குறித்து, ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று நாளை (6ந் தேதி) ஓராண்டு நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி ஓராண்டில் அரசின் அரும்பணிகள், சாதனைகள் மற்றும் திட்டங்கள் உள்ளடக்கிய "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்ட மிடுவது குறித்து, ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியதாவது:

    அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி நடத்துவது குறித்தும் அதில் தங்கள் துறைகளில் கடந்த ஓராண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து கண்காட்சியில் இடம் பெறச்செய்தல், பல்துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துதல், மாணவ, மாணவிகள் மற்றும் உள்ளூர் கலைஞர்களைக் கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்துதல், பல்வேறு கருத்தரங்குகள் நடத்துதல் போன்ற நிகழ்ச்சி மேற்கொள்வது குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது.

    தொடர்ந்து, அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பான பணிகளை மேற்கொண்டு பொதுமக்களை திரளாக இக்கண்காட்சிகளில் பங்கேற்கச் செய்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓராண்டு சாதனைகளை அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) வேல்விழி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரெத்தினமாலா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவிகளை கடத்தியது தொடர்பாக திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தொப்பையாங்குளம் கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் அந்த பகுதி அருகே உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். 18 வயது நிரம்பிய இவரது சித்தப்பா மகள் அதே பள்ளியில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக சென்ற 2 பேரும் வீடு திரும்பவில்லை. இவர்களை உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் இருவரும் கிடைக்கவில்லை.

    இது குறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதில் அதே கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் தமிழ் செல்வன் (22) நன்னிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் அருண் (18) ஆகிய 2 பேரும் தங்கள் மகள்களை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகிறார்.

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முழுவதுமாக தண்ணீர்ஏற்றினால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடைந்து விடும் என்ற நிலை உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சு.ஒகையூர் காலனியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அதே பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிமெண்ட் காரைகள் உடைந்து மிகவும் பலவீனமடைந்த நிலையில் தண்ணீர் ஒழுகுவதாக கூறப்படுகிறது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முழுவதுமாக தண்ணீர்ஏற்றினால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடைந்து விடும் என்ற நிலை உள்ளது. இதனால் மின்சாரம் இருக்கும் போது மட்டும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு நேரடியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது.

    அவ்வாறு குடிநீர் விநனியோகம் செய்யும் போது மின்சாரம் தடைபட்டால் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க இயலாத அவல நிலை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தவும், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் 55 ஆண்டுகாலம் 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தும் தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காசாம்பு பூமாலை, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ம.க. மாநில தலைவர் மணி கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.

    தொடர்ந்து மாநில இளைஞரணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது, பா.ம.க. தொடங்கி 32 காலம் முடிந்து 33வது ஆண்டு தொடங்குகிறது. பா.ம.க. வில் உள்ளது போல் வேறு எந்த கட்சியிலும் இளைஞர்கள் இல்லை. நம்மிடம் தொலைநோக்கு திட்டம், திறமை உள்ளது.

    கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கான நேரம் வந்து விட்டது. எனவே இளைஞர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அன்புமணி ராமதாஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

    தமிழ்நாட்டில் 55 ஆண்டுகாலம் 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தும் தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை. பா.ம.க. விடம் 5 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரம் கொடுத்தால் போதும் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே பா.ம.க.வினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி செய்யும் என கூறினார்.

     இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
    ×