என் மலர்
காஞ்சிபுரம்
- குன்றத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 7000 முதல் 8000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
- பெரும் மழை காலங்களில் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி மக்கள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
காஞ்சிபுரம்:
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் போது கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அடையாறு ஆற்றுப்பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கரைகளின் உயரமும் உயர்த்தப்படுகிறது.
இந்த நிலையில் அடையாறு ஆற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் விரைந்து முடிக்க பொதுபணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் வரதராஜபுரம் மற்றும் சோமங்கலம் பகுதிகளில் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து ரூ.70 கோடி மதிப்பில் 1800 மீட்டர் வரை அமைக்கப்பட உள்ள கீழ் மட்ட கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்து விரைவில் முடித்திட அறிவுறுத்தினார்.
இதேபோல் மகாலட்சுமி நகர், வரதராஜபுரம் மற்றும் முல்லை நகர், ராயப்பா நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் அகலப்படுத்தும் பணி மற்றும் போரூர் ஏரியின் உபரி நீர் வெளியேற கட்டப்படும் கீழ் மட்ட கால்வாய் பணி, போரூர் ஏரியில் புதிய மதகு அமைக்கும் பணியினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குன்றத்தூர் பகுதிகளில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குன்றத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 7000 முதல் 8000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதிகளில் பெரும் மழை காலங்களில் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி மக்கள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனை முதல் அமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டு, மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த திட்டத்திற்கான பணிகள் ஒரு வருட காலத்திற்குள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 20 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
இனிவரும் காலங்களில் பெரும் மழை வந்தாலும், பொதுமக்களை எந்த விதத்திலும் பாதிக்காத அளவிற்கு முதல்-அமைச்சர் மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டி இந்த திட்டத்திற்கான பணிகள் செய்து முடித்து தந்திருக்கிறார்.
ஒரத்தூர் தடுப்பணை பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், நீர்வளத் துறை உதவி பொறியாளர் குஜராஜ் உடன் இருந்தனர்.
- ஆலந்தூர் மடுவின்கரை முதல் குறுக்குத் தெருவில் குடியிருப்பவர் செந்தில்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர் மடுவின்கரை முதல் குறுக்குத் தெருவில் குடியிருப்பவர் செந்தில். தே.மு.தி.க. பிரமுகர். 160-வது வட்ட துணை செயலாளராக உள்ளார்.
நேற்று மாலை செந்தில் வீட்டின் அருகே எம்.கே.என் சாலையில் நின்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செந்திலிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் அவர் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காஞ்சிபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது.
- உத்திரமேரூரில் உள்ள வட்டாசியர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் தாட்சாயிணி.
காஞ்சிபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினந்தோறும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைபெற்ற அரசு பெண் ஊழியர் ஒருவரிடம் டிஸ்சார்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் ரூ. 500 கேட்டு செவிலியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரமேரூரில் உள்ள வட்டாசியர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் தாட்சாயிணி. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பழைய பிரசவ வார்டின் 2-வது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்வதாக பரிசோதித்த டாக்டர்கள் கூறி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் தாட்சாயினியிடம் டிஸ்சார்ஜ் பற்றி எதுவும் தெரிவிக்க வில்லை. மேலும் அவருக்கு மருந்து, மாத்திரை எதுவும் கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதுபற்றி செவிலியரிடம் கேட்டபோது சரிவர பதில் கூறாமல் இருந்தார். மேலும் அவர், என். ஜி. ஓ. பார்ம் அளித்தால்தான் டிஸ்சார்ஜ் செய்வேன் என தாட்சாயிணியிடம் தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ரூ.500 பணம் கொடுத்தால் டிஸ்சார்ஜ் செய்வதாக கூறினார். இதனால் அரசு ஊழியர் தாட்சாயிணி மிகவும் மனவேதனை அடைந்தார். சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் செவிலியரின். இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடையசெய்து உள்ளது.
- கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
- கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரத்தை அடுத்த படப்பை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது24).
இவர் படப்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யும் மெயின் டீலராக செயல்பட்டு வந்தார். மேலும் முரளி மீது பல்வேறு குற்ற வழக்குகள் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிஅளவில் அதேபகுதி அண்ணா நகர் அருகே குளக்கரையை ஒட்டி உள்ள வடுகாத்தம்மன் கோவில் அருகே முரளி மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் விரைந்து வந்து முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக முரளியுடன் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் யார்?யார்? அவருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாவட்ட கழக அவைத்தலைவர் த.துரைசாமி தலைமையிலும், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாது:-
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருப்போரூர் ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்துள்ள சைதன்யா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
மாவட்ட கழக அவைத்தலைவர் த.துரைசாமி தலைமையிலும், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கழக இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட கழகப் பிரதிநிதிகள், கழக அணிகளின் மாநில, மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
கழகத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதிக்கு வாழ்த்து, பூத் கமிட்டி அமைத்தல், கழக இளைஞரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கழக வளர்ச்சி ஆகிய 4 பொருள்களில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் அருகே கலியனுர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆறுமுகம்.
- வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே கலியனுர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். மேலும் ஊத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி வடிவுக்கரசி. இவர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.
நேற்று இரவு உடல் நிலை பாதிக்கப்பட்ட மனைவி வடிவுக்கரசியை காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர். உஷாரான ஆறுமுகம் அவர்களை தடுத்தார். இதில் அவரது கை,தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் இருந்த மனைவி வடிவுக்கரசி கூச்சலிட்டார்.
அலறல் சத்தம்கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதும் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியர் சீசர், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார்,பேசில் பிரேம் ஆனந்த்,சுந்தர்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது முககவசம் அணிந்து வந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து எந்தவித பதட்டமும் இல்லாமல் தப்பி செல்வது பதிவாகி உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆயுத பூஜை பண்டிகையின்போது விலை அதிகரித்து விற்கப்பட்ட சாமந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லி இன்று ரூ.700-க்கு விற்கப்படுகிறது.
போரூர்:
தீபாவளி பண்டிகை நாளை (24ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு சாமந்தி மற்றும் ரோஸ் 45 வாகனங்களிலும் மல்லி, முல்லை, கனகாம்பரம், ஜாதி உள்ளிட்ட பூக்கள் 20 மினிவேன்கள் மூலம் விற்பனைக்கு குவிந்துள்ளது.
பண்டிகையை முன்னிட்டு மல்லி, முல்லை, கனகாம்பரம், ஜாதி, ரோஸ் ஆகிய பூக்களின் விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது. ஆயுத பூஜை பண்டிகையின்போது விலை அதிகரித்து விற்கப்பட்ட சாமந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ரகத்தை பொருத்து ஒரு கிலோ சாமந்தி ரூ.50-முதல் ரூ.80 வரை மட்டுமே விற்கப்படுகிறது.
கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்ற மல்லி இன்று ரூ.700-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் கிலோ ரூ.200-க்கு விற்ற முல்லை ரூ.600-க்கும், கிலோ ரூ.200க்கு விற்ற ஜாதி ரூ.600-க்கும், கிலோ ரூ.500க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1,500-க்கும், கிலோ ரூ.60-க்கு விற்ற ரோஸ் ரூ.140-க்கும் விற்கப்படுகிறது.
அதிகாலை முதல் விறுவிறுப்பாக தொடங்கிய பூ விற்பனை பின்னர் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்ததால் மந்தமாகி போனது. கனகாம்பரம், ரோஸ் ஆகிய பூக்கள் முழுவதுமாக விற்று தீர்ந்து விட்டது. மல்லி மற்றும் முல்லை ஆகிய பூக்கள் நாள்தோறும் பிற்பகல் 12 மணிக்கு பின்னர் தான் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பூக்கள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) சாமந்தி-ரூ.50-ரூ.80, மல்லி-ரூ.700, அரளி-ரூ.350, ஜாதி ரூ.600, சம்பங்கி ரூ.70, கனகாம்பரம்-ரூ.1500, முல்லை-ரூ.600, பன்னீர் ரோஸ்-ரூ.120-ரூ.140, சாக்லேட் ரோஸ்-ரூ.140-ரூ.160.
- சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
- வடமாநிலத்தவா்கள், பெருமளவு விமானங்களில் செல்வதால் வட மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளன.
ஆலந்தூர்:
தீபாவளி விடுமுறை, அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு விடுமுறை தொடர்ச்சியாக வருவதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று, தீபாவளியை கொண்டாட புறப்பட்டு செல்கின்றனா்.
இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இறுதி நேரத்தில் பயணிகள் பலா், விமானங்களில், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் சென்னை விமான நிலையத்தை நோக்கி படையெடுப்பதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக ஒரு நாளைக்கு 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் வரை பயணிகள் பயணம் செய்கின்றனர். அது தற்போது, 50 ஆயிரத்தையும் கடந்து இருக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததையொட்டி, விமானங்களின் பயண கட்டணமும், பல மடங்கு உயர்ந்துள்ளது.
தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதால், சென்னையில் உள்ள வடமாநிலத்தவா்கள், பெருமளவு விமானங்களில் செல்வதால் வட மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளன.
சென்னை-டெல்லி இடையே வழக்கமான கட்ட ணம் ரூ. 6,000. தற்போது ரூ.12,000 முதல் ரூ.18,000 வரை உள்ளது.
சென்னை-கொல்கத்தா வழக்கமான கட்டணம் ரூ.6,500. தற்போது ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை உள்ளது.
சென்னை-புவனேஸ்வர் வழக்கமான கட்டணம் ரூ.6,000. தற்போது ரூ.11,000 முதல் ரூ.13,000 வரை உள்ளது.
சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,500. தற்போது ரூ.9,000 ஆகும்.
சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.5,000. தற்போது ரூ.12,000 முதல் 21,000 வரை ஆகும்.
தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களான சென்னை-மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,200. தற்போது ரூ.12,000. சென்னை-திருச்சி வழக்கமாக ரூ.3,500.ஆனால் தற்போது ரூ.11,500.சென்னை தூத்துக்குடி வழக்கமாக ரூ.4,500. தற்போது ரூ.9,500 முதல் ரூ.11,500 வரை ஆகும். சென்னை கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,500. தற்போது ரூ.11,500 ஆகும்.
விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்தாலும் பயணிகள் தங்களுடைய சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடும் ஆா்வத்தில், கட்டணம் பற்றி யோசிக்காமல், ஆர்வமுடன் டிக்கெட் எடுத்து விமானங்களில் பயணிக்கின்றனர்.
இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "முக்கியமான திருவிழாக்களின் போது பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும் காரணத்தால், குறைந்த கட்டண டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகி விடுகின்றது. அதிக கட்டணம் டிக்கெட்டுகள் மட்டுமே இருக்கின்றன.
எனவே வேறு வழியின்றி பயணிகளுக்கு அதிக கட்டண டிக்கெட் தான் இருக்கிறது என்று கூறுகிறோம். பயணிகள் கட்டணம் பற்றி பொருட்படுத்தாமல், பயணிக்கின்றனா். அதிக கட்டணம் கொடுப்பதை தவிா்க்க, பயணிகள் முன்னதாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்தால், தற்போது குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்" என்று தெரிவித்தார்.
- குன்றத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை செருப்புகளுக்கு பாலிஷ் செய்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார்.
- செருப்பு மற்றும் ஷூக்களுக்கு பாலிஷ் செய்து அதில் வரும் தொகையை வைத்து ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.
குன்றத்தூர்:
தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று செருப்பு மற்றும் ஷூக்களுக்கு பாலிஷ் செய்து அதில் வரும் தொகையை வைத்து ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில் குன்றத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை செருப்புகளுக்கு பாலிஷ் செய்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சென்ற கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். அதே போன்று குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தியும் நிதி வழங்கினார்கள்.
இதனை கண்ட அந்த பகுதி மக்கள் தாமாக முன்வந்து தங்களது செருப்புகளுக்கு பாலிஷ் செய்துவிட்டு ஏழை மாணவர்களின் கல்விக்காக நிதிகளை வழக்கினார்கள்.
ஏழை மாணவர்களின் கல்விக்காக பேராசிரியர் ஒருவர் பொதுமக்களின் செருப்புகளுக்கு பாலிஷ் செய்து நிதி சேகரிப்பதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
- சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் நடவடிக்கையாக வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
- கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணியை மக்கள் கல்வி நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மக்கள் கல்வி நிறுவனத்தின் சார்பில் காலநிலை மாற்றத்தால் மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் நடவடிக்கையாக வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணியை மக்கள் கல்வி நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.
மேலும் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சவுதா நளினா தலைமையில் வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கல்வி நிறுவன பயனாளர்களுக்கும், கிராம மக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கும் பணியை மக்கள் கல்வி நிறுவனத்தின் களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
- காஞ்சிபுரம்-வேலூர் நெடுஞ்சாலையில் ஒலிமுகமது பேட்டை விநாயகபுரம் பகுதியில் காஞ்சிபுரத்தில் இருந்து கீழம்பி நோக்கி பயணிகள் ஆட்டோ சென்று கொண்டிருந்தது.
- படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாலுச்செட்டிசத்திரம்:
காஞ்சிபுரம்-வேலூர் நெடுஞ்சாலையில் ஒலிமுகமது பேட்டை விநாயகபுரம் பகுதியில் காஞ்சிபுரத்தில் இருந்து கீழம்பி நோக்கி பயணிகள் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை கா சேர்ந்த பிரேம்குமார் (23) ஓட்டி சென்றார். அதே நேரத்தில் எதிரே ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த குரு (19) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ எதிர்பாரதவிதமாக பிரேம்குமார் ஓட்டிவந்த ஆட்டோவின் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர்கள் பிரேம்குமார், குரு, பயணிகள் அபூர்வம்மாள் (65), பள்ளி சிறுவன் ஒருவன் என 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும். பாலுச்செட்டி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகளையோ உபயோக்கிக்க கூடாது.
- இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பாக உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.
அனைத்து இனிப்பு, கார வகைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகளையோ உபயோக்கிக்க கூடாது.
விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முழு உடல் நலத்துடன் தொற்று நோய்கள் இல்லா வண்ணம் பணியில் அமர்த்தப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மறுபடியும் பயன்படுத்த கூடாது.
விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் போன்றவை பொதுமக்கள் அறியும் வண்ணம் அச்சடித்து காட்சிப்படுத்தவேண்டும். உணவு பொருட்களை விற்பனை செய்த பின்னர் வழங்கும் ரசீது, பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண் அல்லது பதிவு எண்ணை அச்சடித்து இருத்தல் வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவேண்டும்.
பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் http://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்று கொள்ளவேண்டும்.
மேலும் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






