search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாறு ஆற்றில் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
    X

    அடையாறு ஆற்றில் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

    • குன்றத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 7000 முதல் 8000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • பெரும் மழை காலங்களில் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி மக்கள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    காஞ்சிபுரம்:

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் போது கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அடையாறு ஆற்றுப்பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கரைகளின் உயரமும் உயர்த்தப்படுகிறது.

    இந்த நிலையில் அடையாறு ஆற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் விரைந்து முடிக்க பொதுபணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    பின்னர் வரதராஜபுரம் மற்றும் சோமங்கலம் பகுதிகளில் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து ரூ.70 கோடி மதிப்பில் 1800 மீட்டர் வரை அமைக்கப்பட உள்ள கீழ் மட்ட கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்து விரைவில் முடித்திட அறிவுறுத்தினார்.

    இதேபோல் மகாலட்சுமி நகர், வரதராஜபுரம் மற்றும் முல்லை நகர், ராயப்பா நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் அகலப்படுத்தும் பணி மற்றும் போரூர் ஏரியின் உபரி நீர் வெளியேற கட்டப்படும் கீழ் மட்ட கால்வாய் பணி, போரூர் ஏரியில் புதிய மதகு அமைக்கும் பணியினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    குன்றத்தூர் பகுதிகளில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குன்றத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 7000 முதல் 8000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதிகளில் பெரும் மழை காலங்களில் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி மக்கள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனை முதல் அமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டு, மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்த திட்டத்திற்கான பணிகள் ஒரு வருட காலத்திற்குள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 20 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

    இனிவரும் காலங்களில் பெரும் மழை வந்தாலும், பொதுமக்களை எந்த விதத்திலும் பாதிக்காத அளவிற்கு முதல்-அமைச்சர் மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டி இந்த திட்டத்திற்கான பணிகள் செய்து முடித்து தந்திருக்கிறார்.

    ஒரத்தூர் தடுப்பணை பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், நீர்வளத் துறை உதவி பொறியாளர் குஜராஜ் உடன் இருந்தனர்.

    Next Story
    ×