என் மலர்
காஞ்சிபுரம்
- அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் முருகன் மீது மோதியது.
- உயிரிழந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த கிளார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 64). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு குமரகோட்டம் முருகன் கோவில் அருகே மேற்கு ராஜ வீதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் முருகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார். உயிரிழந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவரான அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆனந்த் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.
- வருகிற 1-ந்தேதி வரை உற்சவம் நடைபெறுகிறது.
- தினமும் காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்து வருகிறது.
காஞ்சீபுரம் ஸ்ரீயதோக் தகாரி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஸ்ரீ பொய்கை ஆழ்வார் அவதார உற்சவம் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. வருகிற 1-ந்தேதி வரை உற்சவம் நடைபெறுகிறது.
இந்த விழாவையொட்டி தினமும் காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்து வருகிறது. மாலையில் சுவாமி மற்றும் பொய்கை ஆழ்வார் வீதி உலா நடை பெறுகிறது. அதேபோல் நேற்று மாலையிலும் சுவாமி மற்றும் பொய்கையாழ்வார் வீதி உலா நடைபெற்றது.
வருகிற 1-ந்தேதி பொய்கை ஆழ்வாருக்கு காலையில் மங்களா சாசனம், பல்லக்கு உற்சவம் ஆகியவை நடக்கிறது. மாலையில் திருமஞ்சனமும், இரவு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
- பொதுமக்களிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ.5000 முதல் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.
- தாசில்தார் மோகனை ஓரகடம் சிப்காட் தனி வட்டாட்சியர் பணிக்கு மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பட்டா பெறுதல், பட்டா பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நகர நிலவரித்திட்ட தாசில்தாரிடம் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ.5000 முதல் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. சொத்தின் மதிப்புக்கு ஏற்றவாறு லஞ்சம் அதிக அளவில் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த அலுவலகத்துக்கு சென்ற தினேஷ், டில்லிபாபு ஆகிய இருவரிடம் அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்கும் `ஆடியோ, வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து தாசில்தார் மோகன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம், கோட்டாட்சியர் கனிமொழி விசாரணை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக தாசில்தார் மோகனை ஓரகடம் சிப்காட் தனி வட்டாட்சியர் பணிக்கு மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
அவரது பணியிடத்தில் இந்துமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 9 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
- திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யாற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- அனுமன் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள பழமையான தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். பாலாறு, செய்யாறு, வேதவதி ஆறுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்கிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யாற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக அனுமன் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள பழமையான தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது. இதே போன்று வேங்கசேரி தடுப்பணையும் முழு கொள்ளளவை எட்டி 2 ஷட்டர்கள் வழியாக திறக்கப்பட்டு ஆர்ப்பரித்து நீர் செல்கிறது.
பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த இரு தடுப்பணைகளும் நிரம்பி அதிக நீர் செல்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும்.
- கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சீபுரம் குமரக்கோட்டத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறுமுகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து,பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய், கிராம்பு மாலை, மற்றும் சாமந்திப்பூ, மல்லிகைப்பூ, மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சிறப்பு லட்சார்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் மான் வாகனத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- குன்றத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 7000 முதல் 8000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
- பெரும் மழை காலங்களில் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி மக்கள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
காஞ்சிபுரம்:
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் போது கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அடையாறு ஆற்றுப்பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கரைகளின் உயரமும் உயர்த்தப்படுகிறது.
இந்த நிலையில் அடையாறு ஆற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் விரைந்து முடிக்க பொதுபணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் வரதராஜபுரம் மற்றும் சோமங்கலம் பகுதிகளில் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து ரூ.70 கோடி மதிப்பில் 1800 மீட்டர் வரை அமைக்கப்பட உள்ள கீழ் மட்ட கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்து விரைவில் முடித்திட அறிவுறுத்தினார்.
இதேபோல் மகாலட்சுமி நகர், வரதராஜபுரம் மற்றும் முல்லை நகர், ராயப்பா நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் அகலப்படுத்தும் பணி மற்றும் போரூர் ஏரியின் உபரி நீர் வெளியேற கட்டப்படும் கீழ் மட்ட கால்வாய் பணி, போரூர் ஏரியில் புதிய மதகு அமைக்கும் பணியினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குன்றத்தூர் பகுதிகளில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குன்றத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 7000 முதல் 8000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதிகளில் பெரும் மழை காலங்களில் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி மக்கள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனை முதல் அமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டு, மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த திட்டத்திற்கான பணிகள் ஒரு வருட காலத்திற்குள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 20 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
இனிவரும் காலங்களில் பெரும் மழை வந்தாலும், பொதுமக்களை எந்த விதத்திலும் பாதிக்காத அளவிற்கு முதல்-அமைச்சர் மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டி இந்த திட்டத்திற்கான பணிகள் செய்து முடித்து தந்திருக்கிறார்.
ஒரத்தூர் தடுப்பணை பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், நீர்வளத் துறை உதவி பொறியாளர் குஜராஜ் உடன் இருந்தனர்.
- ஆலந்தூர் மடுவின்கரை முதல் குறுக்குத் தெருவில் குடியிருப்பவர் செந்தில்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர் மடுவின்கரை முதல் குறுக்குத் தெருவில் குடியிருப்பவர் செந்தில். தே.மு.தி.க. பிரமுகர். 160-வது வட்ட துணை செயலாளராக உள்ளார்.
நேற்று மாலை செந்தில் வீட்டின் அருகே எம்.கே.என் சாலையில் நின்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செந்திலிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் அவர் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காஞ்சிபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது.
- உத்திரமேரூரில் உள்ள வட்டாசியர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் தாட்சாயிணி.
காஞ்சிபுரத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினந்தோறும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைபெற்ற அரசு பெண் ஊழியர் ஒருவரிடம் டிஸ்சார்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் ரூ. 500 கேட்டு செவிலியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரமேரூரில் உள்ள வட்டாசியர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் தாட்சாயிணி. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பழைய பிரசவ வார்டின் 2-வது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்வதாக பரிசோதித்த டாக்டர்கள் கூறி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் தாட்சாயினியிடம் டிஸ்சார்ஜ் பற்றி எதுவும் தெரிவிக்க வில்லை. மேலும் அவருக்கு மருந்து, மாத்திரை எதுவும் கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதுபற்றி செவிலியரிடம் கேட்டபோது சரிவர பதில் கூறாமல் இருந்தார். மேலும் அவர், என். ஜி. ஓ. பார்ம் அளித்தால்தான் டிஸ்சார்ஜ் செய்வேன் என தாட்சாயிணியிடம் தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ரூ.500 பணம் கொடுத்தால் டிஸ்சார்ஜ் செய்வதாக கூறினார். இதனால் அரசு ஊழியர் தாட்சாயிணி மிகவும் மனவேதனை அடைந்தார். சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் செவிலியரின். இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடையசெய்து உள்ளது.
- கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
- கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரத்தை அடுத்த படப்பை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது24).
இவர் படப்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யும் மெயின் டீலராக செயல்பட்டு வந்தார். மேலும் முரளி மீது பல்வேறு குற்ற வழக்குகள் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிஅளவில் அதேபகுதி அண்ணா நகர் அருகே குளக்கரையை ஒட்டி உள்ள வடுகாத்தம்மன் கோவில் அருகே முரளி மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் விரைந்து வந்து முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக முரளியுடன் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் யார்?யார்? அவருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாவட்ட கழக அவைத்தலைவர் த.துரைசாமி தலைமையிலும், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாது:-
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருப்போரூர் ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்துள்ள சைதன்யா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
மாவட்ட கழக அவைத்தலைவர் த.துரைசாமி தலைமையிலும், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கழக இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட கழகப் பிரதிநிதிகள், கழக அணிகளின் மாநில, மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
கழகத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதிக்கு வாழ்த்து, பூத் கமிட்டி அமைத்தல், கழக இளைஞரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கழக வளர்ச்சி ஆகிய 4 பொருள்களில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் அருகே கலியனுர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆறுமுகம்.
- வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே கலியனுர் ஊராட்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். மேலும் ஊத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி வடிவுக்கரசி. இவர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.
நேற்று இரவு உடல் நிலை பாதிக்கப்பட்ட மனைவி வடிவுக்கரசியை காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
வீட்டின் அருகே வந்து கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர். உஷாரான ஆறுமுகம் அவர்களை தடுத்தார். இதில் அவரது கை,தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் இருந்த மனைவி வடிவுக்கரசி கூச்சலிட்டார்.
அலறல் சத்தம்கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதும் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியர் சீசர், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார்,பேசில் பிரேம் ஆனந்த்,சுந்தர்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது முககவசம் அணிந்து வந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து எந்தவித பதட்டமும் இல்லாமல் தப்பி செல்வது பதிவாகி உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






