என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மிகக் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலர் டாக்டர்.எஸ். சதிஷ்குமார் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மிகக் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளரும் விழாக்குழு தலைவருமான பா. ஜெயஸ்ரீ மற்றும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரும் விழாக்குழு துணைத்தலைவருமான மு.முருகன் தலைமை தாங்கினார். இதில் காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் த. சுவாதி, விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் கே. சத்தியநாராயணன், கைத்தறித்துறையின் கைத்தறி அலுவலர் கோ. மோகன்ராம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலர் டாக்டர்.எஸ். சதிஷ்குமார் கலந்து கொண்டனர்.

    • 6 சிறுமிகள், சிறுவனை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சாலட்சுமி தலைமையிலான போலீசார் மீட்டனர்.
    • குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம் பஸ் நிலையம், இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பிச்சை எடுத்து வந்த 6 சிறுமிகள், சிறுவனை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சாலட்சுமி தலைமையிலான போலீசார் மீட்டனர்.

    பின்னர் அவர்களை காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பெண் குழந்தைகள் காப்பகத்திலும், கிருகம்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • காரப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர் காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

    காஞ்சிபுரம் அருகே உள்ள காரப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்க கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய செயலாளர்,பொருளாளர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்தல் அலுவலர்களாக சேலத்தை சேர்ந்த ஆ.மூர்த்தி,பெரம்பலூரை சேர்ந்த ஆர்.வாசுதேவன் ஆகியோர் செயல்பட்டனர்.

    கூட்டத்தில் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவராக நாமக்கல்லை சேர்ந்த எஸ்.கே.வேல்,செயலாளராக காஞ்சிபுரத்தை சேர்ந்த பா.கார்த்திகேயன்,பொருளாளராக அம்பத்தூரை சேர்ந்த க.முரளிபாபு ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர் காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் சங்க துணைத்தலைவர்கள் தா.வித்யாசங்கர்,கா.பு.சிவக்குமார், வழக்குரைஞர்கள் அ.முகுந்தன், ர.தினேஷ்குமார் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எறையூர் ஊராட்சியில் உள்ள கெங்கையம்மன் கோவில் தெரு பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
    • புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எறையூர் ஊராட்சியில் உள்ள கெங்கையம்மன் கோவில் தெரு பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வரும் குடிநீரை இப்பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து கான்கிரட் தூண்களின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து எலும்பு கூடுபோல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது இடிந்து விழுந்து பேராபத்தை ஏற்படுத்துமோ என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனவும், மேலும் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அபாயகரமான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை ஊராட்சி நிர்வாகம், வட்டார அலுவலர்கள் உடனடியாக இடித்து அகற்றி புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறப்பு முகாம் வருகின்ற 12, 13, 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது.
    • வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் பதிவு செய்து வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    அதன்படி பெயர் சேர்க்க படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் பதிவு செய்தும் வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.

    இதற்கான முகாம் பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிலையங்களில் வருகின்ற 12, 13,26 மற்றும் 27-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது. இதையொட்டி, முகாம்களுக்கு நேரில் வந்து மேற்கூரிய உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்று ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை காஞ்சிபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • 4 நண்பர்களுடன் சேர்ந்து ரித்தீஷ் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து புகை பிடிக்க சென்றார்.
    • தண்டவாளம் அருகே உள்ள கருங்கல் ஜல்லியில் ரித்தீஷ் விழுந்ததில் பின் தலையில் கருங்கற்கள் குத்தி ரித்தீஷ் துடிதுடித்து இறந்து போனார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த திருக்காளிமேடு பகுதியில் வசிப்பவர் காளிதாஸ். இவரது மகன் ரித்தீஷ் (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு 4 நண்பர்களுடன் சேர்ந்து ரித்தீஷ் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து புகை பிடிக்க சென்றார்.

    தண்டவாளத்தை தாண்டும் போது கால் தவறி கீழே விழுந்தார். தண்டவாளம் அருகே உள்ள கருங்கல் ஜல்லியில் ரித்தீஷ் விழுந்ததில் பின் தலையில் கருங்கற்கள் குத்தி சம்பவ இடத்திலேயே ரித்தீஷ் துடிதுடித்து இறந்து போனார்.

    • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.
    • மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் ரூ.54 லட்சத்து 37 ஆயிரத்து 13 ரொக்கமாகவும், 374 கிராம் தங்கம், 753 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக வரப்பெற்றது.

    மாங்காடு:

    இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த 2022-2023-ம் ஆண்டு சட்டமன்ற மானிய கோரிக்கையில், "இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோவில்களில் இருந்து இதர மாநில கோவில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் ஏற்கனவே சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள் எம்பார் சாமி கோவிலில் இருந்து பரிவட்ட மரியாதை, மாலை ஆகியவை கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, செல்வ நாராயண பெருமாள் கோவிலுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்பட்டது. இதேபோல் மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது.

    கோவில் பரம்பரை தர்மகர்த்தா டாக்டர் மணலி ஆர்.சீனிவாசன், துணை ஆணையர்-செயல் அலுவலர் பெ.க.கவெனிதா மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் ஆ.முத்துரத்தினவேலு மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.54 லட்சத்து 37 ஆயிரத்து 13 ரொக்கமாகவும், 374 கிராம் தங்கம், 753 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பெற்றது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூர் வள்ளிபுரம், மற்றும் வயலூர் தடுப்பணை நிரம்பி உள்ளது.
    • காஞ்சிபுரம்- செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து உள்ளது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    காஞ்சிபுரம்- செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பெருநகர் அருகே செய்யாற்றில் அமைந்துள்ள அனுமன் தண்டலம் தடுப்பணை, வெங்கச்சேரி ஆகிய 2 தடுப்பணைகளும் நிரம்பி உள்ளது.

    இதேபோல் வேகவதி ஆறு, செய்யாறு, பாலாறு என மூன்றும் சங்கமிக்கும் பழையசீவரம் பகுதியில் அமைந்துள்ள உள்ளவூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூர் வள்ளிபுரம், மற்றும் வயலூர் தடுப்பணை நிரம்பி உள்ளது. இந்த 5 தடுப்பணைகளும் நிரம்பியதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    தடுப்பணைகளை கண்காணிக்க காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஆகியோர் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் நீர் வரத்தை கண்காணித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்- செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தொடர்மழை காரணமாக 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    40 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 149 ஏரிகள் 50சதவீதத்துக்கு மேலும் நிரம்பி உள்ளன. 338 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 343 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழ் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • உபரி நீர் திறந்துவிடுவதை ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி பார்வையிட்டார்
    • புழல் ஏரியில் இருந்து பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர் திறந்துவிடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். முதல்கட்டமாக ஏரியில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர் மழை காரணமாக, புழல் ஏரியில் இருந்தும், பாதுகாப்பு கருதி 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    • தொடர் மழையின் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பாலாறு அணைக்கட்டு நிரம்பி உள்ளது.
    • ஏரியின் மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரில் சிறுவர்கள் உற்சாக குளியல் போட்டு செல்கிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பாலாறு அணைக்கட்டு நிரம்பி உள்ளது. அங்கிருந்து வரும் உபரி நீரால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான தாமல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து. இதனால் தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து ஏரியின் 3 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தாமல் ஏரியின் முழு கொள்ளளவான 18 அடி முழுவதுமாக நிரம்பி மதகுகள் வழியாக நீர் வெளியேறி வருவதால் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஏரியின் மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரில் சிறுவர்கள் உற்சாக குளியல் போட்டு செல்கிறார்கள்.

    • காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
    • 143 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 326 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 373 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கெட்டி வருகிறது. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது.

    இதனால் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 31 ஏரிகள் முழு கொள்ளவை எட்டி உள்ளது.

    37 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி உள்ளன. 143 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 326 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 373 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாலங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
    • நீளமான இந்த இணைப்பு பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் சென்னை விமான நிலையத்தில் விமானங்களில் ஏறி, இறங்கும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் பன்னாட்டு நவீன முனையத்தில் விமானங்களில் பயணிகள் ஏறி செல்லவும், இறங்குவதற்காகவும் 'பேசன்ஞ்சா் போா்டிங் பிரிட்ஜ்' என்ற 15 நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பேசஞ்சா் போா்டிங் பிரிட்ஜ் விமான நிலையத்தின் நுழைவு பகுதியிலிருந்து நேரடியாக விமானத்தின் வாசலுக்கு செல்லும் விதமாக அமைக்கப்படுகின்றன. இந்த 15 பாலங்களில் 7 பாலங்கள் 47 மீட்டா்கள் நீளமுடையவையாகவும், 7 பாலங்கள் 32 மீட்டரில் இருந்து 40 மீட்டா்கள் கொண்டதாகவும், மற்றொரு பாலம் 32 மீட்டா் நீளம் உடையதாகவும் அமைய உள்ளது. முதல் கட்டத்தில் 47 மீட்டா் நீளமுடைய 7 பாலங்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன.

    மேலும், இந்த நவீன இணைப்பு பாலத்தில் நகரும் பாலங்கள் இரண்டு அமைகின்றன. அதில் அதிக நீளமுடைய 47 மீட்டா் கொண்ட 7 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த 7 பாலங்களும் வரும் டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

    மற்ற 8 பாலங்கள் அடுத்த 2-வது கட்டத்தில் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. இந்த பாலங்கள் 'மேக் இன் இந்தியா' திட்டப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதை போன்ற நவீன பாலங்கள் இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்படுகின்றன. நீளமான இந்த இணைப்பு பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் சென்னை விமான நிலையத்தில் விமானங்களில் ஏறி, இறங்கும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×