என் மலர்
காஞ்சிபுரம்
- கடந்த மார்ச் மாத இறுதியில் பாலாற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதத்தில் பாலாறு வறண்டது.
- பாலாற்றில் நீர் வரத்தால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் காஞ்சிபுரம் பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் பாலாற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதத்தில் பாலாறு வறண்டது.
கடந்த சில நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் பாலாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் மீண்டும் பாலாற்றில் நீர் வரத்து தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- சமையல் பொறுப்பாளர் பணியானது முற்றிலும் தற்காலிகமானது.
- ஆரோக்கியமான சமையலை சுகாதாரமான முறையில் செய்வது குறித்து முறையாக வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் (விரிவாக்கம்) கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து, அனைத்து ஊரக, பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராகவும் மற்றும் அதேப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோராகவும் உள்ள 3 பெண்கள் சமையல் பொறுப்பாளராக முதன்மை குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி சமையல் பொறுப்பாளர் பணியானது முற்றிலும் தற்காலிகமானது. மேலும் அவர்களது குழந்தைகள் 5-ம் வகுப்பை தாண்டியவுடன் சமையல் பொறுப்பாளர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.
எனவே மேற்படி சமையல் பொறுப்பாளர் தேர்வு செய்யப்படுவதில் தகுதியற்ற நபர்கள் என எவரேனும் கண்டறியப்பட்டாலோ, கையூட்டு பெறுவதாக புகார் ஏதேனும் பெறப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
மேலும் முதன்மை குழு மூலமாக தேர்வு செய்யப்பட்ட சமையல் பொறுப்பாளர் அனைவருக்கும், ஆரோக்கியமான சமையலை சுகாதாரமான முறையில் செய்வது குறித்து முறையாக வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்படும்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் முதற் கட்டமாக 1.6.2023 அன்றும், 2-ம் கட்டமாக 15.6.2023 அன்றும் செயல் படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் துரை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்றவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு, மேட்டுகாலனி பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 54). கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு ஓரிக்கை மிலிட்டரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் துரை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உயிரிழந்த துரை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்றவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தேர்வு எழுத வந்தவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தேர்வு மைய இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு சென்றனர்.
- கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து இரும்பு கேட்டை உடைத்து புகுந்ததாக தேர்வு எழுத வந்த 6 பெண்கள் உள்பட மொத்தம் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நேற்று காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நடைபெற்ற இந்த தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதியம் தொடங்கிய தேர்வுக்கு சிலர் தாமதமாக வந்தனர். ஆனால் தேர்வு மைய இரும்பு கேட் மூடப்பட்டு இருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த தேர்வு எழுத வந்தவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தேர்வு மைய இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தேர்வு மைய கேட் உடைக்கப்பட்டது தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து இரும்பு கேட்டை உடைத்து புகுந்ததாக தேர்வு எழுத வந்த 6 பெண்கள் உள்பட மொத்தம் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது 147, 448,427 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
- இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
- துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.39 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 745 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.55 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள 1,042 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உடைமைகளிலும் எதுவும் இல்லாததால் இருவரையும் தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.37 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.39 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 745 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த 2 பேரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 293 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களாக சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 53 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 780 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- 649 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 22 லட்சம் கடன் உதவிகளை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் வழங்கினார்.
- கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 602 கூட்டுறவு நியாய விலை கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
இதனால் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக கியூ ஆர் கோடை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதற்கு வர வேற்பு உள்ளது.
இதை தொடர்ந்து 649 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 22 லட்சம் கடன் உதவிகளை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.
- காஞ்சிபுரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் 12 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.
காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வருகிறது. காலை முதலே கோடை வெயில் காய்ந்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், அய்யம்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், செவிலிமேடு, ஓரிக்கை, ஒலி முகமது பேட்டை, தாமல், பாலு செட்டி சத்திரம், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் 12 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. அதாவது 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டாலும் கோடை வெப்பம் தணிந்து உள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.
- சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேல்மருவத்தூர் ஆதிப ராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி குரு பங்காரு அடிகளார் 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜை நடத்தினர்.
இந்த வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.சித்ரா பவுர்ணமியான நேற்று மாலை 5 மணி அளவில் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக குரு பங்காரு அடி களார் தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடி களார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், தலைமை செயல் அதிகாரி அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆதிபராசக்தி அம்மன் கருவறை முன்பு குரு மேடை, மற்றும் அதற்கான குரு யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.தொடர்ந்து அதற்கு முன்பாக ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 83 எண் வடிவில் சக்கரம் அமைத்து அதில் 4 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
கருவறை முன்பாக பஞ்சபூத சக்கரம் அமைத்து ஐந்து தலை நாகம் படம் எடுக்க அதனுள் கலசம் நிறுவப்பட்டு 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. புற்று மண்டபத்தின் முன்பாக வெற்றிலை அலங்காரத்தில் 3 நாகங்கள் பின்னிப் பிணைந்து அமைக்கப்பட்டு அதில் டைமண்ட் வடிவில் யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.
புற்று மண்டப முன்புறத்தில் சமபக்க முக்கோண சக்கரங்கள் அமைத்து அதில் 9 முக்கோண வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
ஓம் சக்தி மேடை முன்பாக பிரபஞ்ச சக்கரம் அமைத்து அதில் ஒன்பது படிகள் அமைத்து அதில் 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் 8 திசைகள் வடிவில் சக்கரங்கள் அமைக்கப்பட்டு அதனுள் நவதானியம் பரப்பப்பட்டு சதுரம், வட்டம், டைமண்ட், ஐங்கோணம், முக்கோணம் ஆகிய வடிவங்களில் 12 யாக குண்டங்கள் அமைக்கப் பட்டு இருந்தது. மேலும் சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த யாக குண்டங்களில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் வேள்வி பூஜை செய்தனர்.
- காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்தது.
- சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் காஞ்சிபுரம் நகரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்தது. கோடையில் வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரக்காலம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தன. இதனால் பொதுமக்கள் நண்பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.
இந்நிலையில் திடீரென மாலையில் குளிர்ந்த காற்றுடன் கருமேகமூட்டம் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, கீழம்பி, பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், அய்யங்கார்குளம், உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த இந்தத் திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் காஞ்சிபுரம் நகரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- மின்னணு பரிமாற்றம் மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
- பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 602 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் ( 'கியூ ஆர் கோடு') மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி. நகர் ரேஷன் கடையில் சென்னை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இதனால் பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்தநிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் முருகன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதம் 617 விமான சேவைகள் குறைந்து உள்ளன.
- உள்நாட்டு விமான சேவைகளில்தான் குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை :
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 12 ஆயிரத்து 22 விமானங்களில் 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பேர் பயணம் செய்து உள்ளனர். அதில் 9,413 உள்நாட்டு விமானங்களில் 12 லட்சத்து 89 ஆயிரத்து 995 பேரும், 2,609 பன்னாட்டு விமானங்களில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 775 பேரும் பயணம் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் உள்நாட்டு பயணிகளை பொறுத்தமட்டில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அந்தமான், கொச்சி, பெங்களூரு, மதுரை, கோவை உள்ளிட்ட விமானங்களிலும், பன்னாட்டு பயணிகள் இலங்கை, துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பிரான்ஸ் உள்ளிட்ட விமானங்களிலும் அதிகமானவர்கள் பயணித்துள்ளனர்.
இந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில், வர்த்தகம், பணி நிமித்தம் செல்லும் பயணிகளும் கணிசமாக அதிகரித்து உள்ளனர்.
அதன்படி ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 405 விமானங்களில் 17 லட்சத்து 42 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்து உள்ளனர். இதில் உள்நாட்டு முனையத்தில் 8 ஆயிரத்து 751 விமானங்களில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 49 பேரும், பன்னாட்டு முனையத்தில் 2,654 விமானங்களில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 558 பேரும் பயணம் செய்து உள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதம் 617 விமான சேவைகள் குறைந்து உள்ளன. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 837 பேர் அதிகரித்து உள்ளனர். உள்நாட்டு விமான சேவைகளில்தான் குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து பல்வேறு நாடுகள், நகரங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் கோடை விடுமுறை காலத்தில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என்று தெரிகிறது.
தென்னிந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் மற்றும் அதிக விமானங்களுடன் சென்னை விமான நிலையம் முன்னணியில் இருக்கிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் பெருமளவு சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாற்றுத்திறனாளி வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குடிபோதை தகராறில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 30). மாற்றுத்திறனாளி. நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை காஞ்சிபுரம்,மேட்டு தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபம் எதிரில் குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை தொடர்பாக ரங்கசாமி குளம் பகுதியில் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வரும் ஒருவரை பிடித்து உள்ளனர். அவரிடம் முன்விரோதம் காரணமாக குமார் கல்லால் அடித்துக் கொல்லப் பட்டாரா? அல்லது குடிபோதை தகராறில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாற்றுத்திறனாளி வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






