என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    உத்திரமேரூரில் கத்திமுனையில் பொதுமக்களை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நீரடி அருகே சாலையில் 2 பேர் கத்திமுனையில் பொதுமக்களை மிரட்டுவதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கத்தி முனையில் 2 பேர்் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தனர்.

    உடனடியாக அவர்கள் இருவரையும் மடக்கி் பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த வசி என்கிற வசீகரன் (வயது 38) என்பதும், மற்றொருவர் உத்திரமேரூர் ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த ராஜா (36) என்பதும் தெரியவந்தது.

    மேலும், வசீகரன் மீது புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் பல வழக்குகள் உள்ளதாகவும், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர் என்பதும் 6 ஆண்டுகளாக உத்திரமேரூர் ஏ.பி. சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் இருவரையும் கோர்ட்டு காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
    கொரோனா வைரஸ் ஊரடங்கால் மத்திய அரசு, வெளிநாட்டு பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து உள்ளது.
    ஆலந்தூர்:

    இந்தியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசுக்கு டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்துதான் விமான சேவை இயங்கி வந்தன. இதனால் தமிழகத்தில் இருந்து பாரீசுக்கு செல்பவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று தான் பிரான்ஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இல்லை என்றால் சென்னையில் இருந்து துபாய் வழியாக பாரீசுக்கு செல்ல வேண்டும். எனவே சென்னையில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு நேரிடையாக விமான சேவையை இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது. அதன்படி இன்று காலை 10.25 மணிக்கு பாரீசில் இருந்து புறப்படும் விமானம் இரவு 11.45 மணிக்கு சென்னை வருகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழுவதும் விமானிகள், விமான ஊழியா்கள் ஓய்வு எடுக்கின்றனா். மீண்டும் 28-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 1.20 மணிக்கு சென்னையில் இருந்து பாரீசுக்கு அந்த விமானம் புறப்பட்டு செல்கிறது.

    கொரோனா வைரஸ் ஊரடங்கால் மத்திய அரசு, வெளிநாட்டு பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து உள்ளது. எனவே இந்த விமானத்தில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் மற்றும் மத்திய அரசின் சிறப்பு அனுமதியுடன் மருத்துவ சிகிச்சை, கார்ப்பரேட் நிறுவன பணியாளா்கள் போன்ற அத்தியாவசிய பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.

    சென்னை விமான நிலையம்

    இதனால் வாரத்துக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜூலை 8-ந் தேதியில் இருந்து வியாழக்கிழமை பாரீசில் இருந்து சென்னைக்கு விமானம் வந்து விட்டு, வெள்ளிக்கிழமை ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொரோனா வைரஸ் ஓய்ந்து மத்திய அரசு வெளிநாட்டு பயணிகள் விமான சேவைக்கான தடையை நீக்கிய பிறகு செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் பிரான்சில் இருந்து சென்னைக்கும், அதேபோல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பிரான்சுக்கும் விமான சேவைகளை நடத்த உள்ளது.

    இந்த ஏா்பிரான்ஸ் போயிங் விமானத்தில் 279 இருக்கைகள் உள்ளன. விமானத்தின் பயணநேரம் 10 மணி 25 நிமிடங்கள். விமானத்தின் ஜன்னல்கள் மற்ற விமான ஜன்னல்களைவிட 30 சதவீதம் அகலமானது. இந்த விமானம் வானில் பறக்கும்போது அதிக அதிர்வுகள் இல்லாமல் மிதந்தபடி செல்லும் சொகுசு விமானமாக இருக்கும்.
    வாலாஜாபாத் அருகே கருங்கற்களை வெட்டி கடத்துவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்த நிலையில் காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி சங்கராபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
    வாலாஜாபாத்:

    வாலாஜாபாத் ஒன்றியம் பழைய சீவரம் ஊராட்சிக்கு உட்பட்டது சங்கராபுரம் கிராமம். இந்த கிராம பகுதியில் அமைந்துள்ள மலை குன்றுகளில் உள்ள கருங்கற்கள் சாமி சிலைகள் மற்றும் சிற்பங்களை செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இந்த நிலையில் அரசு அனுமதி இல்லாமல் சமூக விரோதிகள் கருங்கற்களை வெட்டி மாமல்லபுரம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள சிற்ப கூடங்களுக்கு இரவு நேரங்களில் லாரிகளில் கடத்துவது தெரியவந்தது.

    கருங்கற்கள் வெட்டி கடத்தப்படுவது குறித்து வாலாஜாபாத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் சங்கராபுரம் கிராம மக்கள், வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமியிடம் புகார் தெரிவித்தனர்.

    கிராம மக்களின் புகாரை தொடர்ந்து ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி சங்கராபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று மலைக்குன்று பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு இடங்களில் இருந்த குன்று பகுதிகளில் சாமி சிலைகளை செய்வதற்காக அரிய வகை கருங்கற்கள் வெட்டி கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய கருங்கற்கள் என்பதால் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட கனிம வளத்துறை அதிகாரிகளுக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தார். மேலும் அரசு அனுமதியின்றி கருங்கற்களை வெட்டி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறும், வெட்டி வைக்கப்பட்டுள்ள கருங்கற்களை கடத்த முடியாதபடி போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டுமென சாலவாக்கம் போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    கிராம மக்களின் புகாரை ஏற்று உடனடியாக காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி மேற்கொண்ட ஆய்வின் காரணமாக கடத்தப்பட தயார் நிலையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான அறிய வகை கருங்கற்கள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    குடும்பத்தகராறு காரணமாக குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    வாலாஜாபாத்:

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா உள்ளாவூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). தனியார் தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா (36). மகள் தீபிகா (6). கடந்த சில மாதங்களாக முருகனுக்கும் அவரது மனைவி உமாவுக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தனர்.

    கடந்த சில நாட்களாக உமா கடும் மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் முருகன் வேலைக்கு சென்று விட்டார்.

    மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னலை திறந்து பார்த்தபோது மனைவி உமா தூக்கில் பிணமாக தொங்கியபடி காணப்பட்டார். அருகில் மகள் தீபிகா பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உமா, தீபிகா இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து முருகனிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    குடும்பத்தகராறு காரணமாக 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது உள்ளாவூர் பகுதியில்
    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஆடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.19¾ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அதைத்தொடர்ந்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையை சோ்ந்த ஜெய்னுலாப்தீன் (வயது 60) என்பவரை நிறுத்தி விசாரித்தனர்.

    அதில், முன்னுக்கு பின் முரணாக அவர் பேசியதால் சந்தேகத்தின் பேரில் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், எதுவும் சிக்காததால், தனியறைக்கு அழைத்து சென்று ஆடையை சோதனை செய்த போது, பேண்ட்டில் ரகசிய அறை வைத்து தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். அவரிடமிருந்து ரூ.19 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 465 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெய்னுலாப்தீனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலதிபர் வீட்டில் சொகுசு கார் உள்பட ரூ.1 கோடி பொருட்களை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் திருவண்ணாமலையில் மடக்கி பிடித்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் நயப்பாக்கம் பகுதியில் சொகுசு பங்களா உள்ளது.

    இந்த நிலையில், ரவிச்சந்திரன் மனைவி பிரியாவுக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. அதனால் அவரை தனிமைப்படுத்தி கொள்ள மனைவியை சென்னையில் விட்டு தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு மேவலூர் குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தங்கி உள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ரவிச்சந்திரன் மற்றும் அவரது இரண்டு மகள்களுடன் தூங்கி கொண்டு இருந்தபோது, மர்ம நபர்கள் இவரது வீட்டின் மாடி வழியாக ஏறி வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த விலையுயர்ந்த 3 எல்.இ.டி. டிவி, ஒரு லேப்டாப், வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த விலை உயர்ந்த ஆடி வகை சொகுசு கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இதையடுத்து காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டில் பொருட்களை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். ரவிச்சந்திரன் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் போலீசார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. கொள்ளை போன சொகுசு காரில் ஜி.பி.எஸ்.பொருத்தப்பட்டு இருந்ததால், அதை வைத்து கொள்ளையர்கள் திருவண்ணாமலையில் உள்ள வெண்பாக்கத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இதையடுத்து அங்கு வீட்டில் பதுங்கி இருந்த ஏ.சி.மெக்கானிக் விஜயசந்திரன் (21), லோகேஷ் (22), பிரவீன்குமார் (24), செங்கல்பட்டு மாவட்டம் கொள்ளம் பேடு அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (22) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், கடந்த ஏப்ரல் மாதம் ரவிச்சந்திரனின் சொகுசு பங்களாவில் புதிய ஏ.சி.பொருத்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜயசந்திரன் வந்துள்ளார். வீட்டை நோட்டாமிட்ட விஜயசந்திரன் தனது கூட்டாளிகளுடன் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து அழைத்து வந்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள லேப்டாப், 3 எல்.இ.டி. டி.வி. மற்றும் ஆடி கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    உத்திரமேரூர் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை சூலக்கற்கள் கண்டெடுக்கப்பட்டது.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ளது திருப்புலிவனம் கிராமம். இந்த கிராமத்தில் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கும் நிலத்தின் எல்லையை குறிக்கும் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:-

    . எங்களது கள ஆய்வில் திருப்புலிவனத்தில் இருந்து மருதம் செல்லும் சாலையில் இந்த 2 கற்களை கண்ெடடுத்தோம். இது விஜய நகர மன்னர்களின் காலத்தை சேர்ந்ததாகும். 50 சென்டிமீட்டர் அகலமும் 75 சென்டி மீட்டர் உயரமும் கொண்ட ஒரு கல்லும், அதன் அருகில் 35 சென்டிமீட்டர் அகலமும் 70 சென்டி மீட்டர் உயரமும் கொண்ட மற்றொரு கல்லும் உள்ளது. இந்த கல்லின் இடதுபக்கம் சூல சின்னமும் அதன் கீழ் பன்றி உருவமும் உள்ளது. இது விஜய நகர மன்னர்களின் சின்னமாகும். வலப்பக்கத்தில் பெரிய உருவத்தில் கழுதையும் அதன் கீழ் பெரிய புறா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது குல சின்னமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

    மன்னர் காலங்களில் சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலங்களுக்கு அதன் எல்லையை குறிப்பதற்காக 4 திசைகளில் சூல சின்னம் பொறித்த கற்களை நட்டு வைப்பார்கள் இதற்கு சூல கற்கள் என்று பெயர்.

    இந்த நிலங்களுக்கு வரியை நீக்கி இறையிலி நிலங்களாக கோவில்களுக்கு மன்னர்கள் வழங்கினார்கள். இது கோவில் நிதி வருவாய்க்கான ஏற்பாடாகியிருந்தது. இதன் மூலம் அன்றாட பூஜைகள் செய்தல், விளக்கு எரிதல், அமுது படைத்தல், மற்றும் கோவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த ஊரில் பல்லவர் காலத்தை சேர்ந்த புகழ்பெற்ற சிவன் கோவிலான வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது எனவே இது இந்த கோவிலுக்கு கொடுத்த நிலத்தின் எல்லையை குறிக்கும் சூல கற்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஊர் மக்கள் இதை இன்றும் எல்லைல்கல் என்றே அழைக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட சூலக்கற்களில் கழுதை மற்றும் புறா உருவம் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் இதில் இடம் பெற்றிருப்பது அரிதாகவே கருத வேண்டியுள்ளது. விஜய நகர மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்த புறா மற்றும் கழுதை குல சின்னங்களாக கொண்டவர்கள் இந்த கோவிலுக்கு நிலம் வழங்கியதாக இருக்கக்கூடும் என்று கருதுகிறோம். மேலும் இதுகுறித்து தொடர் ஆய்வில் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சீபுரம் அருகே மாயமான வாலிபர் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25), அந்த பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் மது குடிக்க சென்றார். பின்னர் நண்பர்கள் மட்டும் வீடு திரும்பிய நிலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் சிவகாஞ்சி போலீசில் மணிகண்டன் மாயமானதாக புகார் செய்தனர்.

    மாயமான மணிகண்டன் குறித்து சிவகாஞ்சி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    மேலும் மணிகண்டனுடன் மது குடித்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கீழ்கதிர்பூர் கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சிறிது தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வாலிபர் ஒருவரது உடல் சற்று அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

    தகவலின்பேரில் கீழ்கதிர்பூர் பகுதிக்கு விரைந்து வந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் விவசாய கிணற்றில் கிடந்த வாலிபரின் உடலை தீயணைப்புத் துறையினர் உதவியோடு மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் விசாரணையில் விவசாய கிணற்றில் கிடந்தது கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும் கிணற்றின் அருகாமையில் மதுபான பாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பாலுசெட்டி சத்திரம் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபர் மணிகண்டன் மது போதையில் தவறுதலாக கிணற்றில் விழுந்து இறந்தாரா? அல்லாது தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது மது போதையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    குன்றத்தூர் அருகே லாரிகள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் முருகவேல் (வயது 43). லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது லாரியில் மறைமலை நகர் தொழிற்சாலைகளில் உள்ள இரும்பு கழிவுகளை ஏற்றிக்கொண்டு வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர் அருகே வந்து கொண்டிருந்தார். லாரியை டிரைவர் லாரன்ஸ் (47) ஓட்டி வந்தார். அப்போது லாரி பழுதானது.

    இதையடுத்து லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு லாரி உரிமையாளர் முருகவேல் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் அன்வர் என்பவரை அழைத்து வந்து லாரியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கார்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

    இதில் முருகவேல், அன்வர் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். கன்டெய்னர் லாரியின் முன்பக்கம் முழுவதும் நொறுங்கியதால் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் பிண்டுராய் மற்றும் லாரி டிரைவர் லாரன்ஸ் ஆகியோர் காயம் அடைந்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன இருவரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    வாலாஜாபாத்:

    காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள வெங்கடேச பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 31). இவர் அய்யன்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வங்கியில் பணி முடித்து முத்தியால்பேட்டை - களியனூர் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    நத்தப்பேட்டை முத்தாலம்மன் கோவில் வளைவு பகுதியில் வேகமாக சென்றபொழுது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலை அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்திகேயனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக் காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திகேயன் உயிரிழந்தது விட்டதாக கூறினர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார், கார்த்திகேயன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தொடக்கத்தில் அச்சம் அடைந்திருந்த பொதுமக்கள் பின்னர் ஆர்வத்துடன் முன்வந்தனர். இந்த நிலையில காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும் தற்போது குறைந்த அளவில் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதால் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களும் நடைபெறாமல் இருந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் என 30 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
    திருப்போரூர் முருகன் கோவில் வளாகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தேறியது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக கோவில்களுக்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் நடைபெறுவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கோவில்களில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த பல ஜோடிகள் தவிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருப்போருர் கந்தசாமி கோவிலில் திருமணம் செய்ய ஏராளமான ஜோடிகள் நேற்று காலை வந்தனர்.

    கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால், சுமார் 20-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருப்போரூர் முருகன் கோவில் வெளி வளாகத்தில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது கோவில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடிய நிலையில் பலர், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும், முககவசம் அணியாமலும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

    இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டது. எனவே கோவில் முன்பு சில நிபந்தனைகளுடன் திருமண ஜோடிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×