என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஒரகடம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த எழிச்சூர் மதுரா புதுப்பேட்டை பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 29). இவர் தன்னுடைய வீட்டில் மின்மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் ஏற்றினார். அப்போது மின்மோட்டாரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் காயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பாஸ்கரை வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஒரகடம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாமதி கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 32). இவரது மனைவி பரிமளா காந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டில் காற்றோட்டமான வசதி இல்லாததால் இரவு குடும்பத்தினருடன் அருகிலுள்ள தன்னுடைய பெரியப்பா வீட்டில் சென்று தூங்கி விடுவார்.

    நேற்று முன்தினம் இரவு இதேபோல் அசோக்குமார் குடும்பத்தினருடன் பெரியப்பா வீட்டில் சென்று தூங்கினார். அதிகாலை 2 மணி அளவில் பெரியப்பா மகன் மணிகண்டன் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது எதிரே இருந்த அசோக்குமாரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அசோக்குமாரிடம் தெரிவித்தார்.

    உடனடியாக வீட்டுக்கு சென்று பார்த்த அசோக்குமாரின் வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்கநகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

    கைரேகை நிபுணர்களும் வந்து சோதனை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக வாலிபரை கொன்று கிணற்றில் உடல் வீசப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா படப்பை ஊராட்சியில் உள்ள முருகாத்தம்மன் பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 34). இவர் படப்பை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ராமு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ரேணுகா பல்வேறு இடங்களில் ராமுவை தேடி பார்த்தார். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து ரேணுகா, தனது கணவர் மாயமானது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் படப்பை அடுத்த சாலமங்கலம் சிறுமாத்தூர் அருகே காவல்கழனி என்ற இடத்தில் கருவேல மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து கிணற்றில் இருந்து ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கொலை வழக்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்த நபர் மாயமான ராமு என்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக சாலமங்கலம் நரியம்பாக்கத்தை சேர்ந்த மணி (39)யை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் மணிக்கு மகாலட்சுமி (32) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. மேலும் மணியின் மனைவி மகாலட்சுமிக்கும் ராமுவுக்கும் 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது மணிக்கு தெரியவர ராமுவையும், மனைவியையும் பலமுறை மணி கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கள்ளத்தொடர்பு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணி ராமுவை தீர்த்துகட்ட திட்டம் தீட்டியுள்ளார். கடந்த 4-ந்தேதி போன் மூலம் ராமுவை மது குடிக்க அழைத்தார். அங்கு வந்த ராமு, மணி மற்றும் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். மது போதையில் கள்ளக்காதல் சம்பந்தமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றியதையடுத்து ராமுவின் கழுத்தை கத்தியால் வெட்டி கொன்று சேலையால் அவரது உடலில் கல்லை கட்டி காவல் கழனியிலுள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டதும் தெரியவந்தது.

    போலீசார் மணியை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த தினேஷ் (21), வினோத் (20), பிரபாகரன் (23), சாலமங்கலம் பகுதியை சேர்ந்த பூவேந்திரன் (19), நரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (19), ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த பரத்குமார் (20) சாலமங்கலம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    சார்ஜாவில் இருந்து உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தனர். விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனா். அப்போது திருவாரூரை சோ்ந்த கலையரசன் கருணாநிதி (வயது 31) என்பவரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனர்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்காததால், தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.

    இதையடுத்து ஆடையில் பதுக்கி வைத்த ரூ.24 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 495 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கலையரசன் கருணாநிதியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்போது அவர், சார்ஜாவில் இருந்த ஒருவர் தன்னிடம் தங்கத்தை தந்து அனுப்பி வைத்ததாக அவர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காஞ்சீபுரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடமாடும் வாகனத்தை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    காஞ்சீபுரம்

    காஞ்சீபுரம் நகர்புற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கக்கூடிய முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி நடமாடும் வாகனத்தை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தடுப்புப்பணிகளில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கும் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டு கொரோனா தாக்கம் முற்றிலுமாக தடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும், நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 48 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

    மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான அங்காடிகள், வழிபாட்டுத்தலங்களில் பனிபுரியும் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடமாடும் தடுப்பூசி வாகனம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக முதற்கட்டமாக காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட நகராட்சி பகுதிகளில் உள்ள மார்க்கெட்டில் இருக்கக்கூடிய காய்கறி, பழங்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நடமாடும் தடுப்பூசி வாகனத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஜெயசுதா, இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) ஜீவா, துணை இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
    ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இனி வரும் நாட்களில் பயணிகளுடைய வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் 2-ம் அலை காரணமாக தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    தற்போது படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டத்துக்கு செல்லும் பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இன்று மட்டும் 63 வருகை மற்றும் 63 புறப்பாடு என மொத்தம் 126 விமானங்கள் இயக்கப்படுகிறது. இதில் சுமார் 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

    விமானம்

    கடந்த ஊரடங்கு காலத்தில் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஒரு சில விமானங்களில் ஒற்றை இலக்கில் பயணிகள் பயணித்தனர். தற்போது அனைத்து விமானத்திலும் பயணிகள் முழு அளவில் பயணிக்கின்றனர்.

    ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இனி வரும் நாட்களில் பயணிகளுடைய வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பயணிகளின் வரத்து அதிகரித்து உள்ளதால் சென்னை விமான நிலையம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.




    உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் முத்து கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் காஜா பேக் (வயது 48). இவர் உத்திரமேரூர் பஜார் வீதியில் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் ஆரணியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

    நேற்று காலை 11 மணி அளவில் காஜா பேக் வீட்டுக்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் இருந்த 9 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருப்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் காஜா பேக் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் உத்திரமேரூர் பஜார் வீதி அம்பேத்கர் சிலை அருகே உள்ள டீக்கடையின் அருகே சென்று நின்றது. கொள்ளையர்கள் கொள்ளை அடித்துவிட்டு பஜார் வீதியில் வந்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சோபன்ராஜ், பெயிண்டர். இவருடைய மனைவி தமிழரசி (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் கீதா (15), 11-ம் வகுப்பும், ஹரிணி (10), 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கீதா அதிக நேரம் செல்போனை உபயோகித்து வந்தார். இதனை தாய் தமிழரசி கண்டித்தார். இதையடு்த்து கீதா உணவு சாப்பிடாமல் இருந்து விட்டார். இதனை தொடர்ந்து காலை முதல் இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தமிழரசி சேலையில் தனக்கு தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் தற்கொலை செய்து கொண்ட தமிழரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வாலாஜாபாத் அருகே அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    வாலாஜாபாத்:

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா தென்னேரி கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). விவசாயி. வயல் வேலைக்கு சென்றுவிட்டு கட்டவாக்கம் பகுதியில் இருந்து தென்னேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த தென்னேரி கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து குறித்தும் கிராம மக்களின் சாலை மறியல் குறித்தும் தகவல் அறிந்து காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    வாலாஜாபாத்- சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை மஞ்சமேடு பகுதியில் நடைபெறும் மேம்பால பணிக்காக மண் கொண்டு வந்து கொட்டி சென்ற லாரியால் சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பி அறுந்தது.

    இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேம்பாலம் கட்டுபவர்களின் அஜாக்கிரதையாலும், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தாலும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த சங்கரின் மனைவியும், இரு மகள்களும் வாழ்வாதாரத்தை இழந்து விட்டதால் அவரது குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீட்டையும் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    வருவாய்த்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து சங்கரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் தொழிற்சாலை அமைந்த பிறகு அதன் சுற்றுப்புற பகுதிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டு வருகிறது.
    காஞ்சிபுரம்:

    தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வந்தார்.

    அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வழியெங்கிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அண்ணாவின் நினைவு இல்லம் அருகே கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கா.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கா.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் புறப்பட்டு சென்றார். ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுகோட்டையில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலை 1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு 1999-ம் ஆண்டு முதல் கார்கள் உற்பத்தி தொடங்கியது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் தொழிற்சாலை அமைந்த பிறகு அதன் சுற்றுப்புற பகுதிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டு வருகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    மு.க.ஸ்டாலின் ஹூண்டாய் நிறுவன தொழிற்சாலையை பார்வையிட்டார்.

    ஹூண்டாய் நிறுவனம் இதுவரை 11 வகையான கார்களை தயாரித்துள்ளது. சான்ட்ரோ, வெர்னா, ஐ10, ஐ20, ஆரா, வென்யூ, க்ரெட்டா, அல்கசார், எலன்ட்ரா, டக்சன், கோனா எலக்ட்ரிக் ஆகிய 11 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 199 நாடுகளுக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    ஹூண்டாய் நிறுவனம் தொடங்கி 22 ஆண்டுகளில் இதுவரை 1 கோடி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது கார் அறிமுக விழா இருங்காட்டுகோட்டையில் உள்ள அதன் தொழிற்சாலை வளாகத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 கோடியாவது காரை அறிமுகப்படுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலின் ஹூண்டாய் நிறுவன தொழிற்சாலையை பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஹூண்டாய் நிறுவன தலைவர் எய்சன் சங், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிற்சாலை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வந்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் மறைந்த பேறிஞர் அண்ணாவின் நினைவு இல்லம் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கினார்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வந்தார்.

    அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்து பெற வேண்டும் என்று கருதிக்கொண்டு இருந்தேன். அதற்கான வாய்ப்பு எனக்கு இன்றைக்கு கிடைத்தது. எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எங்களை ஆளாக்கிய, கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்துக்கு வருகை தந்து அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து நான் மரியாதை செலுத்தினேன்.

    அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதி இருக்கிறேன். மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்ற அறிவுரையை அவர் தம்பிமார்களுக்கு எப்போதும் வழங்கிக் கொண்டு இருக்கக்கூடியவர். அதை நினைவுப்படுத்தி குறிப்பேடு புத்தகத்தில் அதை எழுதி வைத்து அவர் தந்த அறிவுரைப்படி இன்று இந்த ஆட்சி பீடு நடைபோடும் என்று உறுதியோடு நான் எழுதி இருக்கிறேன்.

    கேள்வி:- ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல அரசு திட்டங்களுக்கு அண்ணா பெயர் வைக்கப்படுமா?

    பதில்:- நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும் போது நீங்கள் எதிர்பார்ப்பதை போல அந்த செய்திகள் எல்லாம் அதிலே வரும் என்றார்.

    குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    பூந்தமல்லி:

    காஞ்சீபுரம் குன்றத்தூரை அடுத்த நத்தம், கொல்லை தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது35), லாரியில் கிளீனராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, திருமுடிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கர்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலறிந்து வந்த போலீசார் கர்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    ×