search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி
    X
    கொரோனா தடுப்பூசி நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி

    காஞ்சீபுரத்தில் கொரோனா தடுப்பூசி நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர்

    காஞ்சீபுரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடமாடும் வாகனத்தை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    காஞ்சீபுரம்

    காஞ்சீபுரம் நகர்புற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கக்கூடிய முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி நடமாடும் வாகனத்தை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தடுப்புப்பணிகளில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கும் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டு கொரோனா தாக்கம் முற்றிலுமாக தடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும், நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 48 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

    மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான அங்காடிகள், வழிபாட்டுத்தலங்களில் பனிபுரியும் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடமாடும் தடுப்பூசி வாகனம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக முதற்கட்டமாக காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட நகராட்சி பகுதிகளில் உள்ள மார்க்கெட்டில் இருக்கக்கூடிய காய்கறி, பழங்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நடமாடும் தடுப்பூசி வாகனத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஜெயசுதா, இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) ஜீவா, துணை இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
    Next Story
    ×