என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகாட்சி 51 வார்டுகளுடன் புதிதாக உருவாக்கப்பட்டது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது 50 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.
ஒரு வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் முடிவில் தி.மு.க. 31 இடங்களையும், அ.தி.மு.க.-9, பா.ம.க.-2, சுயேட்சகைள்-6, பாரதீய ஜனதா, காங்கிரஸ் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.
தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று காஞ்சிபுரம் மாநகராட்சியை கைப்பற்றி இருந்தது. இதனால் காஞ்சிபுரம் புதிய மாநகராட்சியின் முதல் மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக 9-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் மகாலட்சுமி அறிவிக்கப் பட்டார். இதனால் அவர் போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே இன்று காலை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி 50 வார்டு உறுப்பினர்களும் மாநகராட் சியின் கூட்டரங்கிற்கு காலை 9 மணிக்குள் வந்தனர்.
மேயர் வேட்பாளராக மகாலட்சுமி நகராட்சி கமிஷனர் நாராயணனிடம் மனுதாக்கல் செய்தார். சிறிது நேரத்தில் அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த 8-வது வார்டு உறுப்பினர் சூர்யா சோபன்குமார் மேயர் வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சேர்ந்த 10-வது வார்டு உறுப்பினர் சரஸ்வதியும் மேயர் பதவி போட்டியில் குதித்தார். பின்னர் அவர் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றார்.
இதன் காரணமாக மேயர் வேட்பாளரை போட்டியின்றி தேர்வு செய்ய முடியாத நிலை உருவானது. தி.மு.க.வினர் 2 பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
மேயர் பதவி போட்டி பற்றி அறிந்ததும் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் மாநகராட்சி வளாகம் பரபரப்பானது.
தி.மு.க. மாவட்ட செயலாளர் சுந்தர், எழிலரசன் எம்.எல்.ஏ., செல்வம் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் தலைமை அறிவித்த வேட்பாளர் மகாலட்சுமிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தி.மு.க. உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
காலை 10 மணிக்கு மேல் மேயரை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு மாநகராட்சியில் உள்ள கூட்ட அரங்கில் உறுப்பினர்களிடம் நடந்தது.
இதன் முடிவு காலை 11.30 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. தலைமை கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மகாலட்சுமிக்கு 30 உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்தது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட உறுப்பினர் சூர்யா சோபன் குமாருக்கு 20 பேர் வாக்களித்து இருந்தனர். தி.மு.க. ஓட்டு முழுவதும் சிதறாமல் மகாலட்சுமிக்கு கிடைத்ததால் அவர் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பு வெளியானதும் அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயரான மகாலட்சுமிக்கு மேயருக்கான உடை மற்றும் செங்கோலை மாவட்ட செயலாளர் சுந்தர், எழிலரசன் எம்.எல்.ஏ., செல்வம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
பின்னர் மகாலட்சுமியை மேயர் இருக்கைக்கு அழைத்து சென்றனர். கடும் போட்டிக்கு இடையே மகாலட்சுமி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் மாநகராட்சியில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் இன்று நடைபெற்றது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், ஆவடி, தாம்பரம் ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற்றது.
இதேபோல் 12 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு மறைமுக தேர்தல் நடந்தது. பெரும்பாலான இடங்களில் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிற்பகலில் நடந்த துணை தலைவர் பதவி தேர்தலில் சில இடங்களில் போட்டி நடந்தது.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
காஞ்சீபுரம்- செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் நகராட்சி தலைவர்-மலர்விழி குமார் (தி.மு.க.).
குன்றத்தூர் நகராட்சி தலைவர்- சத்தியமூர்த்தி (தி.மு.க.).
செங்கல்பட்டு நகராட்சி தலைவர்- தேன்மொழி (தி.மு.க.).
மறைமலைநகர் நகராட்சி தலைவர்-சண்முகம் (தி.மு.க.).
கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர்-எம்.கே.டி.கார்த்திக் (தி.மு.க.).
திருப்போரூர் பேரூராட்சி தலைவர்-தேவராஜ் (தி.மு.க.).
திருக்கழுக்குன்றனம் பேரூராட்சி தலைவர்-யுவராஜ் (தி.மு.க.).
உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர்-சசிகுமார் (தி.மு.க.).
வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர்-இல்லாமல்லி ஸ்ரீதர் (தி.மு.க.).
இடைக் கழிநாடு பேரூ ராட்சி தலைவர்- லட்சுமி சங்கர் (தி.மு.க.).
அச்சரப் பாக்கம் பேரூராட்சியில் தவைர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. தி.மு.க. வேட்பாளரான 11-வது வார்டு உறுப்பினர் நந்தினியை எதிர்த்து 15-வது வார்டு உறுப்பினர் சகுந்தலா போட்டியிட்டார்.
இதில் நந்தினி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சகுந்தலாவுக்கு 5 ஓட்டுகள் கிடைத்தது. நந்தினி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கருங்குழி பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. 2-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் தசரதனை எதிர்த்து 15-வது வார்டு சுயேட்சை உறுப்பினர் கண்ணன் போட்டியிட்டார். இதில் தசரதன் 11 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கண்ணனுக்கு 4 வாக்குகள் கிடைத்தது.
திருவள்ளூர் நகராட்சி தலைவர்-உதய மலர் பாண்டியன் (தி.மு.க.).
திருத்தணி நகராட்சி தலைவர்- சரஸ்வதி பூபதி (தி.மு.க.).
பொன் னேரி நகராட்சி தலைவர்- டாக்டர் பரிமளம் (தி.மு.க.).
பூந்தமல்லி நகராட்சி தலைவர்- காஞ்சனா சுதாகர் (தி.மு.க.).
திருவேற்காடு நகராட்சி தலைவர்- கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.).
திருநின்றவூர் நகராட்சி தலைவர்- உஷாராணி (தி.மு.க.).
மீஞ்சூர் பேரூராட்சி தலைவர்- சுமதி (தி.மு.க.).
ஊத்துக் கோட்டை பேரூ ராட்சி தலைவர்-அப்துல் ரஜீத் (தி.மு.க.).
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர்-ஷகிலா அறிவழகன் (தி.மு.க.).
பள்ளிப்பட்டு பேரூராட்சி தலைவர்-மணிமேகலை (தி.மு.க.).
திருமழிசை பேரூராட்சி தலைவர்-வடிவேலு (தி.மு.க.).
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த சின்னாளம்பாடியை சேர்தவர் ரவி. முன்னாள் ஊராட்சி தலைவர்.
இவரது 2-வது மனைவி அருணா. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் அருணா கத்திக்குத்து காயத்துடன் காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நான் தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். மீண்டும் என்னை குடும்பம் நடத்த கணவர் ரவி அழைத்தார்.
இதையடுத்து நான் அங்கு சென்றபோது கணவர் ரவி மற்றும் அவருடன் இருந்த மர்ம நபர்கள் கத்தியால் என்னை வெட்டினர். அதனை தடுக்க முயன்ற எனது தாய், தம்பிக்கும் காயம் ஏற்பட்டது.
கணவரால் எனது குழந்தைக்கும், எனக்கும் ஆபத்து உள்ளது பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கத்திக்குத்து காயத்துடன் வந்த அருணாவை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலந்தூர்:
குவைத்தில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து ரூ.40.55 லட்சம் மதிப்புள்ள 880 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்தவர் கொடுத்த தகவலின் படி அதனை வாங்க விமானநிலையத்தில் காத்திருந்த ஒருவரையும் அதிகாரிகள் பிடித்தனர். கைதான 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் மொத்தம் 750 உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஒரு வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்ததால் தேர்தல் நடைபெறவில்லை.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நகராட்சி உறுப்பினரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி உறுப்பினரும், 2 பேரூராட்சி உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
புதிதாக உருவாகி உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டு உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி கமிஷனர் நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. , காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், செல்வம் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 31 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்கள், பா.ஜ.க. 1 இடம், சுயேட்சை 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். புதிதாக உருவாகி உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதில் முதல் மேயர், துணை மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 306 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் நகராட்சியில் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 306 பேர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
புதிதாக உருவாகி உள்ள தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தாம்பரம் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 சுயேட்சைகளும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தி.மு.க. மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. முதல் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. ஆவடி மாநகராட்சி 48 வார்டு உறுப்பினர்களும், திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருவேற்காடு, பொன்னேரி, திருநின்றவூர் ஆகிய 6 நகராட்சிகளில் 141 வார்டு உறுப்பினர்களும் பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, திருமழிசை, ஊத்துக்கோட்டை, ஆரணி, நாரவாரிகுப்பம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் 129 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்,
இதில் திருத்தணி நகராட்சி பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தலா ஒரு வார்டு உறுப்பினர்கள் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் நகராட்சியில் 27 கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்து, நகர மன்ற கூட்டரங்கம் புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. இதில் வார்டு வாரியாக கவுன்சிலர்கள் அழைக்கப்பட்டு பதவியேற்றனர். விழாவில் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் நகராட்சியின் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ஆதிதிராவிடர் பெண் தி.மு.க. வேட்பாளர்களாக 1, 2, 8,16, 21 ஆகிய வார்டுகளில் போட்டியிட்ட வே.வசந்தி, பா.உதயமலர், கோ.சாந்தி, ப.இந்திரா, ம.கமலி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் தலைவர் பதவியை பிடிக்க 1-வது வார்டு தி.மு.க., வேட்பாளர் வசந்தி, 2-வது வார்டு முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியனின் மனைவி தி.மு.க., வேட்பாளர் உதயமலர், 8-வது வார்டு சாந்திகோபி ஆகிய மூவரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆவடி மாநகராட்சியின் 48 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்காக மாநகராட்சியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சாமு.நாசர் குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினராக ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிதாக உருவாகி உள்ள ஆவடி, காஞ்சிபுரம், தாம்பரம் மாநகராட்சிகளில் உறுப்பினர்கள் பதவியேற்பால் விழாக்கோலமாக காணப்பட்டது.
உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து ரஷிய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது. இன்று 6-வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது. முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷிய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் நாட்டுக்குள் முன்னேறி வருகின்றன.
இதனால் உக்ரைன் நாட்டிற்கு படிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உள்பட இந்தியர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
போர் தீவிரமாக நடந்து வருவதால் தலைநகர் கிவ், கார்கிவ் பகுதியில் ஏராளமானோர் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். அவர்கள் குண்டு மழைக்கு மத்தியில் பதுங்கு குழியில் பதுங்கி உள்ளனர்.
தமிழக மாணவர்கள் ஏராளமானவர்களும் இங்கு சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் வெளியேறுவதிலும், உணவுக்காகவும் இக்கட்டான நிலையை சந்தித்து வருகின்றனர். வாட்ஸ்அப் வீடியோக்கள் மூலம் அவர்கள் உதவிகேட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே போர் பதட்டம் அதிகமாக உள்ள கார்கிவ் பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாலசங்கர் என்பவர் பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் உள்பட இந்தியர்கள் 1,500 பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலசங்கர் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கார்கிவ் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். போர் ஆரம்பித்ததும் அவர் தனது மனைவி சோனியாவை நகரத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார்.
பின்னர் அவர் மனைவியின் வேண்டுகோளை மீறி போர் நடக்கும் பகுதிக்கு வந்து மீண்டும் தங்கினார். அங்கு அவரது இரண்டு சகோதரர்கள் அப்புகிருஷ்ணன், சுஜித்குமார் ஆகியோருடன் சேர்ந்து குண்டு மழைக்கு மத்தியில் பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி உதவி வருகிறார்.
கடந்த 5 நாட்களில் பாலசங்கர் தனது உணவகம் மூலம் மற்றும் தனது தொண்டு நிறுவனமான மாறன் அறக்கட்டளையுடன் இணைந்து உணவு பொட்டலங்களை வினியோகித்து வருகிறார்.
இது தொடர்பாக பாலசங்கர் கூறியதாவது:-
நாங்கள் உக்ரேனிய தமிழ் சங்கத்துடன் இணைந்து பல ஆண்டுகளாக ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறோம். உக்ரைன் எனது 2-வது தாய் நாடு. எனக்கு புதிய வாழ்க்கையை வழங்கியது. இந்த நாடு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் போது மக்களுக்கு உதவ விரும்புகிறேன்.
நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி பதுங்கு குழியில் சிக்கி இருப்பதாக நாங்கள் அறிந்தோம். மளிகை பொருட்கள் தீரும் வரை உணவை சமைத்து வினியோகிக்க முடிவு செய்துள்ளோம்.
மளிகை பொருட்கள் குறைந்து விட்டதாலும் கடைகள் எதுவும் திறக்காததாலும் சமைத்த உணவுக்கு பதிலாக ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம்.
உணவை கொண்டு செல்லும் போது உக்ரேனிய போலீசார், ரஷியா ராணுவத்தினர் பலமுறை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் உணவு பொருட்களை பார்த்த பின்னர் கொண்டு செல்ல அனுமதித்தனர்.
முதல் நாள் நான் சந்தித்த சிலருக்கு உணவுகளை வினியோகித்தேன். பின்னர் மாணவர்கள் தங்களது வாட்ஸ்அப் குழுக்களில் என்னை சேர்த்துள்ளனர். நகரின் புறநகர் பகுதியில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட கடந்த 22 ஆண்டுகளாக 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 721 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 934 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இந்த முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர்கள் என மொத்தம் 2,818 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் பொழுது போக்கு பூங்கா போன்ற இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கும் 12 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தவறாமல் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருப்பினும், இந்த முறையும 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட போலியோ நோய் நம் நாட்டில் வராமல் காத்திடவும் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இணை இயக்குனர் நலப்பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மற்றும் திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு நலம் ஆகியோர் கலந்துக்கொண்டு போலியோ சொட்டு மருந்து திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தபட உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே அவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற மாணவி உக்ரைன் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவப்படிப்பு படித்து வருகிறார்.
இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உக்ரைன் நாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமி பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்.
ரஷியா நாட்டின் தொடர் தாக்குதல்களால் அப்பகுதியில் அவசர நிலை நிலவி வருகிறது. அங்கு வாழும் தமிழக மாணவர்கள் கீழ் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் கையிருப்பில் தற்போது குறைந்த அளவு உணவுகள் மட்டுமே உள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.
உணவு இடைவேளை நேரத்தில் மட்டுமே அவர்கள் மேல்தளத்தில் சென்று உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் கீழ் தளத்துக்கு செல்கிறார்கள். அப்பகுதியில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கி உள்ளது. அப்பகுதியில் வாழும் தமிழக மாணவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். உடனடியாக தமிழக முதல்-அமைச்சர் இதை கருத்தில் கொண்டு எங்களை மீட்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போரூர்:
சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வினோதன். தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி தீபா ( வயது 48). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
வினோதன் நேற்று காலை வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். தீபா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகள் கதவு பூட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்குள்ள படுக்கை அறை கழிவறைக்குள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் தீபா இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்ததும் ராயலா நகர் போலீசார் விரைந்து வந்து தீபாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களாகவே தீபா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






