என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு செங்கோல் வழங்கப்பட்டபோது எடுத்தபடம்
    X
    காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு செங்கோல் வழங்கப்பட்டபோது எடுத்தபடம்

    காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மனைவி மகாலட்சுமி வெற்றி

    தி.மு.க. ஓட்டு முழுவதும் சிதறாமல் மகாலட்சுமிக்கு கிடைத்ததால் அவர் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகாட்சி 51 வார்டுகளுடன் புதிதாக உருவாக்கப்பட்டது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது 50 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.

    ஒரு வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் முடிவில் தி.மு.க. 31 இடங்களையும், அ.தி.மு.க.-9, பா.ம.க.-2, சுயேட்சகைள்-6, பாரதீய ஜனதா, காங்கிரஸ் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

    தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று காஞ்சிபுரம் மாநகராட்சியை கைப்பற்றி இருந்தது. இதனால் காஞ்சிபுரம் புதிய மாநகராட்சியின் முதல் மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக 9-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் மகாலட்சுமி அறிவிக்கப் பட்டார். இதனால் அவர் போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்கிடையே இன்று காலை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி 50 வார்டு உறுப்பினர்களும் மாநகராட் சியின் கூட்டரங்கிற்கு காலை 9 மணிக்குள் வந்தனர்.

    மேயர் வேட்பாளராக மகாலட்சுமி நகராட்சி கமி‌ஷனர் நாராயணனிடம் மனுதாக்கல் செய்தார். சிறிது நேரத்தில் அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த 8-வது வார்டு உறுப்பினர் சூர்யா சோபன்குமார் மேயர் வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சேர்ந்த 10-வது வார்டு உறுப்பினர் சரஸ்வதியும் மேயர் பதவி போட்டியில் குதித்தார். பின்னர் அவர் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றார்.

    இதன் காரணமாக மேயர் வேட்பாளரை போட்டியின்றி தேர்வு செய்ய முடியாத நிலை உருவானது. தி.மு.க.வினர் 2 பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    மேயர் பதவி போட்டி பற்றி அறிந்ததும் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் மாநகராட்சி வளாகம் பரபரப்பானது.

    தி.மு.க. மாவட்ட செயலாளர் சுந்தர், எழிலரசன் எம்.எல்.ஏ., செல்வம் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் தலைமை அறிவித்த வேட்பாளர் மகாலட்சுமிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தி.மு.க. உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

    காலை 10 மணிக்கு மேல் மேயரை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு மாநகராட்சியில் உள்ள கூட்ட அரங்கில் உறுப்பினர்களிடம் நடந்தது.

    இதன் முடிவு காலை 11.30 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. தலைமை கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மகாலட்சுமிக்கு 30 உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்தது.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட உறுப்பினர் சூர்யா சோபன் குமாருக்கு 20 பேர் வாக்களித்து இருந்தனர். தி.மு.க. ஓட்டு முழுவதும் சிதறாமல் மகாலட்சுமிக்கு கிடைத்ததால் அவர் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த அறிவிப்பு வெளியானதும் அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயரான மகாலட்சுமிக்கு மேயருக்கான உடை மற்றும் செங்கோலை மாவட்ட செயலாளர் சுந்தர், எழிலரசன் எம்.எல்.ஏ., செல்வம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

    பின்னர் மகாலட்சுமியை மேயர் இருக்கைக்கு அழைத்து சென்றனர். கடும் போட்டிக்கு இடையே மகாலட்சுமி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×