என் மலர்
காஞ்சிபுரம்
- இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்திட முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800 இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.07.2022 மற்றும் 02.07.2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு மாவட்ட அளவிலான இளைஞர் திறன் திருவிழா மாவட்ட ஆட்சியரகம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆகியோரால் இளைஞர் திறன் பயிற்சிக்கான www.kanchiskills.in என்ற இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் அனைத்து துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் பயிற்சி தொடர்பான வேலைவாய்ப்பு விவரங்கள், சுயதொழில் முனைவோருக்கான வழிக்காட்டுதல்கள், திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் வசதிகள் குறித்த விவரங்கள் இளைஞர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயற்சியளிக்கும் அரசுத்துறைகளையும் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து மாநில அளவில் 388 வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்திட முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் தலா 1 வீதம் 5 இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படவுள்ளது. தீன் தயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா யோஜானா (DDU-GKY) திட்டமானது 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஊரக ஏழை இளைஞர்களுக்கு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் மூலம் கல்வி தகுதிக்கேற்ப திறன் பயிற்சி அளித்து நிரந்தர வருமானத்திற்கு வேலைவாய்ப்பு பெற்றுதரப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை DDU - GKY திட்டத்தின் கீழ் 942 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.
2022 - 2023 ஆம் நிதியாண்டிற்கு DDU - GKY திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800 இளைஞர்களை, இளைஞர் திறன் திருவிழா மூலம் வட்டாரம் வாரியாக தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்ட அளவில் இளைஞர் திறன் திருவிழா தற்போது நடத்தப்படுகிறது. முதல்வர் அவர்களின் கனவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் படித்த / பயிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் (Sectors) குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதன் மூலம் இளைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது. திறன் பயிற்சி பெற்று வாழ்க்கையில் பயன் பெறும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 தொழிற் பிரிவுகளில் (Job Role) குறுகிய கால பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இம்மாவட்டத்தில் பல்வேறு கல்வித் தகுதிகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சியில் சேர்ந்து வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளார்கள். இம்மாவட்டத்தில் 2021-2022 வரை குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 367 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 509 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட கால தொழிற் பயிற்சியாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 5 தொழிற் பிரிவுகளில் (MMV, MRAC, Electronic mechanic, Technician Mechatronics, Welder) பயிற்சி அளிக்கப்பட்டு திறன்மிகு பயிற்சியாளர்களாக வேலைவாய்ப்பு பெறக்கூடிய அளவில் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
மேலும், இம்மாவட்டத்தில் 2021-2022 வரை நீண்ட கால பயிற்சி பெற்று தொழிற்பழகுநர் பயிற்சித் திட்டத்தில் 190 பயிற்சியாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது நீண்ட கால பயிற்சியில் 119 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட பயிற்சிகளால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மிகு பயிற்சிகள் அளிக்கப்படுவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், இம்மாவட்டத்தில் திறன் மிகு இளைஞர்கள் உருவாக்கப்பட்டு தொழிற் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் www.kanchiskills.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ. சிவ ருத்ரய்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுரு நாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருணகிரி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
- ஆதிகால தமிழர்கள் வாழ்ந்த இடம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகும்.
- தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் பழங்கால சிலைகள், மணல்மேடு, சங்ககால பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளன. இவை ஆதிகால தமிழர்கள் வாழ்ந்த இடம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகும்.
இந்த இடத்தை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வடக்குப்பட்டு கிராமத்தில் சங்க காலத்தை சேர்ந்த பானை ஓடு துண்டுகள், பழங்கால கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கல்கள், கற்கருவிகள் உள்ளிட்ட தடயங்கள் காணப்படுகின்றன. மேலும் அங்குள்ள வயல்வெளி வரப்பில் பழமையான சிவபெருமான் மணல் சிற்ப சிலை ஒன்றும் உள்ளது.
இது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் சிலை போல் உள்ளது. இது 7 அல்லது 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் 10-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் லட்சுமி சிலை, அம்மன் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய இரும்பு காலத்தை சேர்ந்த மணல்மேடு ஒன்றும் உள்ளது. எனவே இவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தினேஷ் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த உதயகுமாரிடம் மனு கொடுத்தார்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையுடன் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை தினேஷ் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் கொடுத்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மகாதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). இவர் தனது தாத்தா பெயரில் உள்ள வீட்டு மனை மற்றும் காலி மனை உள்ளிட்டவற்றை தனது பெயரில் பத்திர பதிவு செய்தார். மகாதேவி மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் விடுப்பில் இருந்ததால் குணகரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் கூடுதல் பொறுப்பாக மகாதேவி மங்கலம் கிராமத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தினேஷ் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த உதயகுமாரிடம் மனு கொடுத்தார்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். பின்னர் ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து தினேஷ் குமார் காஞ்சிபுரம் லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையுடன் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை தினேஷ் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.
- 12 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
- 200 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நெகிழி பைகள் சேகரிப்பது மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிகை பறிமுதல் செய்யப்பட வேண்டும். என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் படி மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ள பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். அப்போது 200 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கும்படி ஊராட்சி செயலாளருக்கு ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து 12 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதற்கான ரசீதை கடை உரிமையாளரிடம் ஊராட்சி செயலாளர் மொய்தீன் வழங்கினார்.
- காமத்திஏரியின் கரையோரத்தில் பல இடங்களில் சாலைஅரிப்போடி காணப்படுகிறது .
- சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி வழியாக செல்வோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புங்கனூரில் இருந்து வெண்டயம்பட்டி செல்லும் சாலை அமைந்துள்ளது .இந்த சாலை புங்கனூரில் பிரியும் இடத்திலிருந்து ஒன்றரைகிலோமீட்டர் தூரத்திற்கு மிக மோசமாக குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் காமத்திஏரியின் கரையோரத்தில் பல இடங்களில் சாலைஅரிப்போடி காணப்படுகிறது. இதனால் இந்த சாலைவழியாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விவசாயம் தொடங்கினால் விவசாய விளை பொருட்களை எளிதில் எடுத்து செல்ல முடியாமல் போய்விடக்கூடும். கிராமப்புற விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லும் சாலையாக இந்த சாலை அமைந்துள்ள நிலையில் சிதிலமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி வழியாக செல்வோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
- எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர், அம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டனர்.
- புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட சுகாதாரமற்ற தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தியால் பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ளது குருவிமலை ஊராட்சி. இங்குள்ள எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர், அம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டனர்.
இதில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் அவரது மகன் குமாரும் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரும் பலியாகி உள்ளார்.
வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட ஹரிஷ், விஜயகுமார், துரை, பாவா, குமார், சுப்பிரமணி, மலர், கீர்த்தனா, உஷா, சுஜாதா, முருகன், ஜீவதர்ஷினி, நிஷாந்த், ஜானகிராமன் உள்ளிட்ட 16 பேர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட சுகாதாரமற்ற தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தியால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதையடுத்து அந்த தண்ணீர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உரச்செலவில் சிக்கனம் மட்டுமல்ல நானோ யூரியாவின் சிறப்புகளில் சுற்றுப்புறச்சூழல்கேடு நேர்வதில்லை.
- பக்க விளைவுகளும் இல்லை, மண் நீர்ப்பகுதிகளில் நஞ்சு கலக்க வழியே இல்லை.
காஞ்சிபுரம்:
விவசாய உற்பத்தியில் நானோ யூரியா 500 மி.லி தெளித்தாலே 45 கிலோ யூரியா பலன் தரும் என விவசாய தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறியுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெற அரசு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நானோ யூரியா என்பது இலை வழியாக தெளித்திட உகந்த தழைச்சத்து உரமாகும்.
இதில் சாதாரண யூரியா குருணையைவிட பல மடங்கு சத்து அதிகம் உள்ளது. அதை பலப்பல துகள்களாகச் சிறிது சிறிதாக நானோ துகள்களாகப் பிரிக்கும் போது அதிகச் தழைச்சத்தை அளித்திட வாய்ப்புள்ளது.
இதனை இலை வழியே தெளிக்கும் போது உடனடியாக பயிரின் பல பாகங்களுக்கும் எடுத்து செல்லப்படுவதால் விரைவில் பச்சை கட்டும் நன்மையும் நமக்கு கிடைக்கிறது. தன் தேவையை விட கூடுதலாக தழைச்சத்து உட்கிறகிக்கப்பட்டால் அதனை செல்லின் உட்புறம் உள்ள வேக்யோல் எனும் சில பகுதியில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் தருணம் எடுத்து பயன்படுத்த முடிகிறது.
இதனால் உர விரயம் என்ற பேச்சே இல்லை. முதல் மேலுரம் மற்றும் இரண்டாம் மேலுரம் யூரியாவிற்கு பதிலாக நானோ யூரியா 500 மிலி தெளித்தாலே 45 கிலோ யூரியா இட்டதன் பலனை அடையலாம்.
உரச்செலவில் சிக்கனம் மட்டுமல்ல நானோ யூரியாவின் சிறப்புகளில் சுற்றுப்புறச்சூழல்கேடு நேர்வதில்லை.
அதிக களைகள் வளரவும் வழியில்லை. எந்தவித பக்க விளைவுகளும் இல்லை, மண் நீர்ப்பகுதிகளில் நஞ்சு கலக்க வழியே இல்லை.
எனவே, சுற்றுப்புறச்சூழல் காக்கப்படுவது மட்டுமல்லாமல், பிற உயிரினப் பெருக்கம் மூலமாக உணவுச்சங்கிலி உடைபடுவதில்லை. உர உபயோகத்திறன் மேம்பாடு குறையில்லா பயிர் வளரும் சூழல் நன்மை செய்யும் உயிரினத்துக்கு சேதமில்லாத சூழல் நிலவுவதால் நானோ யூரியா நன்மைகள் பல தரும் உரமாக உள்ளது.
எனவே, அனைவரும் இதனைப்பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விபரம் பெற அலைபேசி எண். 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கல்லூரிப் பேராசிரியர் திடீரென அருகில் இருந்த சென்னை இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
- இதை அந்த பெண் கண்டித்து அவரை எச்சரித்தார். மேலும் இதுபற்றி விமான பணிப்பெண்களிடம் புகாா் செய்தாா்.
ஆலந்தூர்:
சவுதிஅரேபியா, ஜெட்டாவில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த 35 வயது இளம்பெண் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் உட்பட 239 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கல்லூரிப் பேராசிரியர் திடீரென அருகில் இருந்த சென்னை இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அந்த பெண் கண்டித்து அவரை எச்சரித்தார். மேலும் இதுபற்றி விமான பணிப்பெண்களிடம் புகாா் செய்தாா்.
இதையடுத்து இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் சென்னையில் தரையிறங்கியதும் விமான ஊழியர்கள், சில்மிஷத்தில் ஈடுபட்ட பேராசிரியரை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.
இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் போலீசாரிடம் கூறும்போது, தூக்கக்கலக்கத்தில் தெரியாமல் கைபட்டு விட்டது. மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து இளம்பெண் புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டாா். போலீசாா் இருவரையும், சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையே அந்த இளம் பெண், விமானத்தில் நடந்த சம்பவம் பற்றி, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தாா். இதனால் பெண்கள் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் கடுமையாக இதை விமா்சனம் செய்தனர்.
இந்த நிலையில் இளம்பெண் மீண்டும் சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
சித்தர் அடிமை கோணி பாபா நேற்று (செவ்வாய்க் கிழமை) மதியம் 12 மணியளவில் முக்தி அடைந்தார். அவரது உடல் இன்று காலை 9 மணியளவில் பூந்தமல்லியில் உள்ள சித்தர் அடிமை கோணி பாபாவின் உலக மகா ஜோதி தவப்பீடமான அவரது ஆன்மீக தலத்தில் இருந்து புறப்பட்டு அவரது சொந்த ஊரான சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூரில் சமாதி செய்யப்பட்டு யோக நிறைவு விழா நடைபெறும்.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.1.37 கோடி செலவில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிக்கான பணியை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் பூபாலன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வேண்டாமிர்தம் வேதாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தபோது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் சிங்(47) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
- உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் விமானம் இன்று அதிகாலை புறப்படத் தயாராக இருந்தது. விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தபோது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் சிங்(47) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
விமான நிலைய மருத்துவ குழுவினர் அவருக்கு முதல் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தினர். இதையடுத்து அவரை விமானத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலீப் குமார் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட 36-வது வார்டுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட 36-வது வார்டுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று காலை 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க. வேட்பாளர் சுதா என்கின்ற சுப்பராயன் வந்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நரசிங்கராயர் தெரு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் 4 கிராம் தங்க மோதிரம் கேட்பாரற்று கிடந்தது. அதனை எடுத்த சுப்பராயன் இதுபற்றி மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தார். பின்னர் அவர் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகரை நேரில் சந்தித்து மோதிரத்தை வழங்கினார். அப்போது நெசவாளர் அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கர், கார்த்திக் உடன் இருந்தனர்,






