என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சுங்கத்துறை முதன்மை ஆணையா் 8 சுங்கத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
    • 43 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையம், துறைமுகம், சரக்குப்பிரிவான காா்கோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், சுங்கத்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் என்று பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால், இடம் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை சுங்கத்துறை தலைமை அலுவலக கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவில், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 35 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதைப்போல் சுங்கத்துறை முதன்மை ஆணையா் 8 சுங்கத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா். மொத்தம் 43 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 30 பேர் உதவி ஆணையர்கள், 13 பேர் துணை ஆணையர்கள் ஆவர்.

    இவர்கள் துறைமுகத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்தில் இருந்து துறைமுகம் மற்றும் கார்கோ பகுதிகளுக்கும், அதைப்போல் கார்கோவில் ஏற்றுமதி பிரிவில் பணியில் இப்பவா்கள், இறக்குமதி பகுதிக்கும், இறக்குமதி பகுதியில் இருப்பவர்கள் ஏற்றுமதி பகுதிக்கும், சிலர் விமான நிலைய கொரியர் அலுவலகம், போதை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்குப் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றி சுங்க அதிகாரிகள் கூறும்போது, இது வழக்கமாக நடக்கும் பொது இடமாற்றம் தான். ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றுவதை தவிா்ப்பதற்காக, நிர்வாக காரணங்களுக்காக இந்த இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நதான்.
    • நதான் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    போரூர்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நதான். விருகம்பாக்கம் இளங்கோ நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு பணி முடிந்து "ஷெட்டில்" தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் நதானை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்து ரூ20ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டான்.

    இதுகுறித்து நதான் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 18வயதுக்கு உட்பட்ட சிறுவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வடக்குப்பட்டில் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது.
    • அகழாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்ரீபரும்புதூர்:

    ஒரகடம் அருகே வடக்குப்பட்டு ஊராட்சி பகுதியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொல்பொருட்கள் கிடைத்து இருந்தது.

    மேலும், வடக்குப்பட்டில் பாதுகாக்கப்பட்ட மூன்று தொல்லியல் மேடுகள் உள்ளன. அந்த மேடுகளில், அகழாய்வு செய்ய, மத்திய தொல்லியல் துறையினர் திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் முதல் கட்டமாக வடக்குப்பட்டில் உள்ள ஒரு தொல்லியல் மேட்டில் 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில் அகழாய்வு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைத்தது.

    இதையடுத்து வடக்குப்பட்டில் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது. இதில், சிறப்பு அழைப்பாளராக கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்ட பிரபல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார்.

    சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் 3 மாதம் அகழாய்வு பணியில் ஈடுப்பட உள்ளனர். இந்த அகழாய்வின் மூலம் வடக்குப்பட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்று தொடக்க காலம் முதல் உள்ள வாழ்விடச் சான்றுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் இந்த அகழாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    • விண்ணப்பங்களை நேரடியாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் சமர்ப்பிக்கவேண்டும்
    • குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    காஞ்சிபுரம்:

    பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ஆம் கல்வியாண்டில் 01.06.2022 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் (District Educational officer) சமர்ப்பிக்க வேண்டும்.

    இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி / வட்டாரக் கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்படுகிறது.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 06.07.2022 மாலை 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப் பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

    விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:

    காஞ்சிபுரம் கல்வி மாவட்டம்_ deokpm@gmail.com

    திருபெரும்புதூர் கல்வி மாவட்டம் - deosripdr@gmail.com

    • பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
    • அவர்கள் வெடிகுண்டு வீசியும் பயிற்சி எடுத்து உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்த அதே பகுதியை சேர்ந்த விஜய், டேவிட் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மான் கொம்பு, கத்தி, நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர்கள் பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது. இதற்காக அவர்கள் வெடிகுண்டு வீசியும் பயிற்சி எடுத்து உள்ளனர். இது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது சீரற்றமயமாக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர். மா. ஆர்த்தி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) டி.ஆர்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்திட முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800 இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.07.2022 மற்றும் 02.07.2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு மாவட்ட அளவிலான இளைஞர் திறன் திருவிழா மாவட்ட ஆட்சியரகம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆகியோரால் இளைஞர் திறன் பயிற்சிக்கான www.kanchiskills.in என்ற இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.

    மேலும் அனைத்து துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் பயிற்சி தொடர்பான வேலைவாய்ப்பு விவரங்கள், சுயதொழில் முனைவோருக்கான வழிக்காட்டுதல்கள், திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் வசதிகள் குறித்த விவரங்கள் இளைஞர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயற்சியளிக்கும் அரசுத்துறைகளையும் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து மாநில அளவில் 388 வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்திட முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் தலா 1 வீதம் 5 இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படவுள்ளது. தீன் தயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா யோஜானா (DDU-GKY) திட்டமானது 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஊரக ஏழை இளைஞர்களுக்கு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் மூலம் கல்வி தகுதிக்கேற்ப திறன் பயிற்சி அளித்து நிரந்தர வருமானத்திற்கு வேலைவாய்ப்பு பெற்றுதரப்படுகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை DDU - GKY திட்டத்தின் கீழ் 942 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.

    2022 - 2023 ஆம் நிதியாண்டிற்கு DDU - GKY திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800 இளைஞர்களை, இளைஞர் திறன் திருவிழா மூலம் வட்டாரம் வாரியாக தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்ட அளவில் இளைஞர் திறன் திருவிழா தற்போது நடத்தப்படுகிறது. முதல்வர் அவர்களின் கனவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் படித்த / பயிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் (Sectors) குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதன் மூலம் இளைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது. திறன் பயிற்சி பெற்று வாழ்க்கையில் பயன் பெறும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 தொழிற் பிரிவுகளில் (Job Role) குறுகிய கால பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் இம்மாவட்டத்தில் பல்வேறு கல்வித் தகுதிகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சியில் சேர்ந்து வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளார்கள். இம்மாவட்டத்தில் 2021-2022 வரை குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 367 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 509 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட கால தொழிற் பயிற்சியாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 5 தொழிற் பிரிவுகளில் (MMV, MRAC, Electronic mechanic, Technician Mechatronics, Welder) பயிற்சி அளிக்கப்பட்டு திறன்மிகு பயிற்சியாளர்களாக வேலைவாய்ப்பு பெறக்கூடிய அளவில் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

    மேலும், இம்மாவட்டத்தில் 2021-2022 வரை நீண்ட கால பயிற்சி பெற்று தொழிற்பழகுநர் பயிற்சித் திட்டத்தில் 190 பயிற்சியாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது நீண்ட கால பயிற்சியில் 119 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    மேற்கண்ட பயிற்சிகளால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மிகு பயிற்சிகள் அளிக்கப்படுவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், இம்மாவட்டத்தில் திறன் மிகு இளைஞர்கள் உருவாக்கப்பட்டு தொழிற் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் www.kanchiskills.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ. சிவ ருத்ரய்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுரு நாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருணகிரி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • ஆதிகால தமிழர்கள் வாழ்ந்த இடம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகும்.
    • தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் பழங்கால சிலைகள், மணல்மேடு, சங்ககால பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளன. இவை ஆதிகால தமிழர்கள் வாழ்ந்த இடம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகும்.

    இந்த இடத்தை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வடக்குப்பட்டு கிராமத்தில் சங்க காலத்தை சேர்ந்த பானை ஓடு துண்டுகள், பழங்கால கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கல்கள், கற்கருவிகள் உள்ளிட்ட தடயங்கள் காணப்படுகின்றன. மேலும் அங்குள்ள வயல்வெளி வரப்பில் பழமையான சிவபெருமான் மணல் சிற்ப சிலை ஒன்றும் உள்ளது.

    இது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் சிலை போல் உள்ளது. இது 7 அல்லது 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    மேலும் 10-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் லட்சுமி சிலை, அம்மன் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய இரும்பு காலத்தை சேர்ந்த மணல்மேடு ஒன்றும் உள்ளது. எனவே இவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினேஷ் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த உதயகுமாரிடம் மனு கொடுத்தார்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையுடன் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை தினேஷ் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் கொடுத்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மகாதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). இவர் தனது தாத்தா பெயரில் உள்ள வீட்டு மனை மற்றும் காலி மனை உள்ளிட்டவற்றை தனது பெயரில் பத்திர பதிவு செய்தார். மகாதேவி மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் விடுப்பில் இருந்ததால் குணகரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் கூடுதல் பொறுப்பாக மகாதேவி மங்கலம் கிராமத்தில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் தினேஷ் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த உதயகுமாரிடம் மனு கொடுத்தார்.

    பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். பின்னர் ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து தினேஷ் குமார் காஞ்சிபுரம் லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

    காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையுடன் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை தினேஷ் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.

    • 12 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
    • 200 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நெகிழி பைகள் சேகரிப்பது மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிகை பறிமுதல் செய்யப்பட வேண்டும். என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் படி மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ள பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். அப்போது 200 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கும்படி ஊராட்சி செயலாளருக்கு ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து 12 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதற்கான ரசீதை கடை உரிமையாளரிடம் ஊராட்சி செயலாளர் மொய்தீன் வழங்கினார்.

    • காமத்திஏரியின் கரையோரத்தில் பல இடங்களில் சாலைஅரிப்போடி காணப்படுகிறது .
    • சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி வழியாக செல்வோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புங்கனூரில் இருந்து வெண்டயம்பட்டி செல்லும் சாலை அமைந்துள்ளது .இந்த சாலை புங்கனூரில் பிரியும் இடத்திலிருந்து ஒன்றரைகிலோமீட்டர் தூரத்திற்கு மிக மோசமாக குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் காமத்திஏரியின் கரையோரத்தில் பல இடங்களில் சாலைஅரிப்போடி காணப்படுகிறது. இதனால் இந்த சாலைவழியாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விவசாயம் தொடங்கினால் விவசாய விளை பொருட்களை எளிதில் எடுத்து செல்ல முடியாமல் போய்விடக்கூடும். கிராமப்புற விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லும் சாலையாக இந்த சாலை அமைந்துள்ள நிலையில் சிதிலமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி வழியாக செல்வோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர், அம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டனர்.
    • புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட சுகாதாரமற்ற தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தியால் பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ளது குருவிமலை ஊராட்சி. இங்குள்ள எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர், அம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டனர்.

    இதில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் அவரது மகன் குமாரும் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரும் பலியாகி உள்ளார்.

    வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட ஹரிஷ், விஜயகுமார், துரை, பாவா, குமார், சுப்பிரமணி, மலர், கீர்த்தனா, உஷா, சுஜாதா, முருகன், ஜீவதர்ஷினி, நிஷாந்த், ஜானகிராமன் உள்ளிட்ட 16 பேர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட சுகாதாரமற்ற தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தியால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதையடுத்து அந்த தண்ணீர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×