என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • நிலவொளி பள்ளிகள் 24 பள்ளிகளாக அதிகரித்தது.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நிலவொளி பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் உள்ள உழைக்கும் தொழிலாளர்களுக்காக நிலவொளி பள்ளிகள் மாவட்ட நிர்வாகத்தால் 1998-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நிலவொளி பள்ளிகள் 24 பள்ளிகளாக அதிகரித்தது. இதற்கு தேவையான நிதியை நன்கொடையாளர்களிடம் இருந்து வசூலித்து நடைபெற்றது.

    அனைவருக்கும் ஆரம்ப கல்வி திட்டம் மாவட்டத்தில் நடைபெற்றதால் நிலவொளி பள்ளிகளின் தேவை குறைந்து 2 பள்ளிகள் மட்டுமே நடத்தப்பட்டது. பள்ளியில் இடைநின்ற மாணவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கு நிலவொளி பள்ளிகள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

    கொரோனா தொற்றுக்கு பின்னர் மீண்டும் நிலவொளி பள்ளிகளை திறக்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முதல் கட்டமாக யாகசாலை மற்றும் சி.எஸ்.எம். நிலவொளிபள்ளிகள் தொடங்கப்படவுள்ளது.

    அதனைதொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நிலவொளி பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது.

    நிலவொளிப்பள்ளிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவர்களுடைய கல்வி தகுதியை பொறுத்து நேரடியாக 8, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுத தகுதியானவர்களும் சேர்ந்து நிலவொளி பள்ளிகளில் படிக்கலாம்.

    நிலவொளி பள்ளிகள் இரவு 7 மணிக்கு ஆரம்பித்து 9 மணிவரை நடைபெறும். நிலவொளி பள்ளிகள் மூலம் நேரடியாக 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை தேர்வு எழுதும் கற்போர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

    நிலவொளி பள்ளியில் படிக்கும் கற்போர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விலையில்லா பாட புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் கற்பித்தல் பொருட்கள் வழங்கப்படும்.

    நிலவொளிப் பள்ளியில் சேர விரும்புவர்கள் 74184 19495 என்ற வாட்சப் எண்ணில் வருகிற 20-ந்தேதிக்குள் தங்களுடைய விவரங்களை தெரிவித்து கொள்ளலாம். மேலும் 044-27237696-ல் மாவட்ட அறிவொளி இயக்க திட்ட அலுவலக எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    எனவே உழைக்கும் தொழிலாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜய்.
    • கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவரது தந்தை வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டார். தாய் பாஞ்சாலியுடன் வசித்து வந்தார்.

    அடிக்கடி தாய்க்கும், மகனுக்கும் தகராறு ஏற்படுவதால் விஜய் தனியாக செவிலிமேடு பெட்ரோல் நிலையம் எதிரே தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் மகன் வராததால் அவர் தங்கி உள்ள வீட்டுக்கு சென்று பார்த்து வரலாம் என்று அவருடைய தாய் பாஞ்சாலி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அவர் ரத்தக்காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

    அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 50% மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 4 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
    • மாவட்ட கலெக்டரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும்.

    காஞ்சிபுரம்:

    வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் "வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்" மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

    விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்து தரப்படும், இம்மையங்கள் ரூ. 8 இலட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன.

    இதில் 50% மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 4 இலட்சம் மானியம் வழங்கப்படும்.

    மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அனுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

    மாவட்ட கலெக்டரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும்.

    மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்த புள்ளி அடிப்படையில் கண்காணிப்பு பொறியாளர் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையினை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். பின்னர் சம்மந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் மையத்தினை நேரில் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத்தொகையினை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.

    மேலும், விவரங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்களை அனுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம்,பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் – 631502 அலைபேசி எண் : 044-24352356 கைபேசி எண் : 9003090440 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய மந்திரி கபில் மொரிஸ்வர் உள்நாட்டு விமானநிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருத்தார்.
    • சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல், நேற்று இரவு மதுரையில் இருந்து இரவு 7 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டு, இரவு 8.30 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் மதுரையிலிருந்து இரவு 7 மணிக்கு வர வேண்டிய விமானம் தாமதமாக இரவு 8.15 மணிக்கு தான் சென்னை வந்தது. உடனடியாக அவரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு கிளை போலீசார் அவசரமாக மும்பை செல்ல இருக்கும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றி வைக்க அழைத்து சென்றனர்.ஆனால் விஸ்தாரா ஏர்லைன்ஸ் அதிகாரிகள் போா்டிங் முடிந்து விட்டது. நீங்கள் தாமதமாக வந்துவிட்டீர்கள் என்று மந்திரியின் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தனா்.

    இதையடுத்து மத்திய மந்திரி கபில் மொரிஸ்வர் உள்நாட்டு விமானநிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருத்தார்.

    அதன்பின்பு இரவு 10.30 மணிக்கு மும்பை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் அவர் புறப்பட்டு சென்றாா்.

    மதுரையில் இருந்து வந்த விமானம் தாமதம் காரணமாக, மத்திய மந்திரி மும்பை செல்ல முடியாமல், 2 மணி நேரம் சென்னை விமானநிலையத்தில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    • காஞ்சிபுரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக கலைத் துறையில் சிறந்து விளங்குகின்ற 10 சிறந்த கலைஞர்களுக்கு அரசு நல திட்ட உதவிகள்.
    • காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் பா.ஹேமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மண்டலக் கலை பண்பாட்டு துறையின், காஞ்சிபுரம் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக கலைத் துறையில் சிறந்து விளங்குகின்ற 10 சிறந்த கலைஞர்களுக்கு அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறுகாவேரிபாக்கம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி ஆகியோர் முன்னிலையில் 10 சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகள் வழங்கப்பட்டது.

    கலைமுதுமணி பிரிவில் காஞ்சிபுரம் வ.ஜபருல்லாகான் (மிருதங்க கலைஞர்), திம்மராஜம்பேட்டை சுந்தரமூர்த்தி (கைசிலம்ப கலைஞர்), கலைநன்மணி பிரிவில் மாமல்லபுரம் து.தனசேகரன் (கற்சிற்பக் கலைஞர்), ஐய்யம்பேட்டை ம.அண்ணாமலை (ஆர்மோனிய பாடகர்) கலைசுடர்மணி பிரிவில் மணமை சா.மதன் (ஓவியக் கலைஞர்), தெள்ளிமேடு கு.கனகராசு (நாதஸ்வரக் கலைஞர்), கலைவளர்மணி பிரிவில் காஞ்சிபுரம் சு.லலிதா (பரதநாட்டியக் கலைஞர்) பட்டிப்புலம் ராஜரத்தினம் (சிற்பக்கலைஞர்), கலைஇளமணி பிரிவில் த.திவ்யா (பரதநாட்டியக் கலைஞர்) வி.தர்ஷினி (சிலம்பாட்டக் கலைஞர்) ஆகியோர்களுக்கு விருதுகள், காசோலைகள் மற்றும் பொன்னாடைகள் போத்தி கௌரவிக்கப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் உத்தரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் பா.ஹேமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • போலி மதுபாட்டில்கள் எங்கு தயாரிக்கப்பட்டன,எங்கிருந்து கடத்தி செல்லப்படுகிறது.
    • மாகரல் கிராமத்திலிருந்து சித்தாலப்பாக்கம் செல்லும் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே ரூ 6லட்சம் மதிப்புள்ள 2880 போலி மதுபாட்டில்களை கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுவிலக்கு அமலாக்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசார் காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்திலிருந்து சித்தாலப்பாக்கம் செல்லும் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் தலா 48 பாட்டில்களை உள்ளடக்கிய 60 பெட்டிகள் இருந்தன.மொத்தம் 2880 மதுபாட்டில்களை கடத்தி சென்று கொண்டிருப்பதும் அவையனைத்தும் போலி மதுபாட்டில்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    விசாரணையில் இவற்றை மினிசரக்கு வாகனத்தில் கடத்தி சென்று கொண்டிருப்பது திருவண்ணாமலை மாவட்டம் கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்(44)என்றும் இதன் மதிப்பு ரூ.6லட்சம் இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.போலி மதுபாட்டில்கள் எங்கு தயாரிக்கப்பட்டன,எங்கிருந்து கடத்தி செல்லப்படுகிறது,இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் யாராக இருக்கலாம் எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைக்கும்.
    • கொரோனா என்ற நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 8739 பேர் உள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயனாளிகள் 39 வாரங்களுக்கு பிறகு இந்த முன் எச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம். இதுவரை 7 ஆயிரத்து 386 பேர் மட்டுமே (84.5 சதவீதம்) தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு (94.35 சதவீதம்) இலக்கையே எட்டி உள்ளது.

    இதுவரை 2 லட்சத்து 15 ஆயிரத்து 321 நபர்கள் 2-ம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர். எனவே பயனாளிகளை நேரடியாக மற்றும் தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைக்கும்.

    கொரோனா என்ற நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.

    எனவே 10.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 2118 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு முன் எச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டு தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரம் பகுதி கோவில் நகரம், பட்டு நகரமாக திகழ்கிறது.
    • சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பகுதி கோவில் நகரம், பட்டு நகரமாக திகழ்கிறது. இதனால் எப்போதும் காஞ்சிபுரம் நகரம் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம், தாயார்குளம் பகுதியில் வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் கொலை செய்யும் நோக்கத்துடன் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் விரட்டினர்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க அந்த வாலிபர் தெருக்களில் புகுந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரை கொலை வெறி கும்பல் விடாமல் துரத்தி சென்றனர்.

    சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த சம்பவத்தை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அதிர்ஷ்ட வசமாக அந்த வாலிபர் கும்பலிடம் இருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன், வடிவேல், ஸ்ரீதர் என்ற குள்ளஸ்ரீதர், பிள்ளையார்பாளையம் மடம் தெருவைச் சேர்ந்த குமரேசன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம், வாலிபரை கொலை செய்யும் நோக்கத்துடன் விரட்டியது ஏன்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் விமான நிலைய உட்கட்டமைப்பு வசதி உட்பட கார் நிறுத்தத்தை மேம்படுத்த சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது.
    • அதன்படி கடந்த சில ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் முகப்பில் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் 3.36 லட்சம் சதுர மீட்டரில் 6 அடுக்கு வாகன நிறுத்த வளாகம் கட்டப்படுகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இவர்களை இறக்கி விடவும், வருபவர்களை ஏற்றி செல்லவும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான கார்கள் வந்து செல்கின்றன.

    சென்னை விமான நிலையத்தில் தனியார் கார் பார்க்கிங், பிரீபெய்டு கார்கள் பார்க்கிங், ஓலா, உபேர் கால் டாக்சி பார்க்கிங், பயணிகளின் கார்கள் என தனி பார்க்கிங் வசதி உள்ளது.

    ஆனால் சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்பதால் விமான நிலைய உட்கட்டமைப்பு வசதி உட்பட கார் நிறுத்தத்தை மேம்படுத்த சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி கடந்த சில ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் முகப்பில் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் 3.36 லட்சம் சதுர மீட்டரில் 6 அடுக்கு வாகன நிறுத்த வளாகம் கட்டப்படுகிறது. இதில் கார் பார்க்கிங், வணிக வளாகங்கள், முக்கிய பிரமுகர்கள் தங்கும் ஓய்வு அறைகள் கட்டப்படுகிறது.

    தற்போது இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கார் நிறுத்தும் வளாகம் அடுத்த மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    இது குறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தலைமையில் மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய பிரதிநிதிகள், ஒலிம்பியா நிறுவன அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஆகஸ்ட் 1-ந்தேதி 2400 கார்களை நிறுத்தும் திறன் கொண்ட ஆறு அடுக்கு கார் நிறுத்த வளாகத்தை திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை சென்னை இந்திய விமான நிலையங்கள் ஆணைய தலைவர் திறந்து வைப்பார் என்று தெரிகிறது.

    • பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் தண்ணீர் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரின் தன்மையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • தண்ணீரில் சரியான அளவு குளோரின் கலந்து உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12வது மண்டலம் சுகாதார துறை சார்பாக தண்ணீரை தொட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதாலும், காலரா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தண்ணீர் மூலமாக பரவும் நோய்களை தடுக்க மண்டல சுகாதார துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் ராட்சத தண்ணீர் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரின் தன்மையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் நோய் பரவும் அபாயம் எதுவும் உள்ளதா, தண்ணீரில் சரியான அளவு குளோரின் கலந்து உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    • ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருமுனையில், ப்ளூ பைக்ஸ் சந்திப்பில் உயர் மின்னழுத்தத்தின் மின்சார பெட்டி உள்ளது.
    • சாலையில் வெளியே தெரியும் மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.

    ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருமுனையில், ப்ளூ பைக்ஸ் சந்திப்பில் உயர் மின்னழுத்தத்தின் மின்சார பெட்டி உள்ளது. இதன் அருகே எதிரெதிர் இரண்டு டாஸ்மாக் பார் உள்பட வணிக வளாகங்களும் உள்ளது. அதனால் இந்த இடம் பகல் நேரம் அல்லாமல் இரவு நேரத்திலும் அதிக கூட்ட நெரிசலாக காணப்படும். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் இந்த உயர் மின்னழுத்தம் மின்சார பெட்டி அருகே மாடு ஒன்று நடந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைப் பார்த்த டாஸ்மாக் பாருக்கு வந்தவர்கள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடினர். உடனடியாக மின்சார ஊழியர்கள் வந்து மின்சாரத்தை துண்டித்து மாட்டை சாலையில் போட்டு விட்டு சென்றனர். சுமார் மூன்று மணி நேரம் சாலையில் கிடந்த மாட்டை துப்புரவு பணியாளர்கள் அகற்றினர்.

    மழையின் காரணமாக சாலையில் நடந்து சென்ற மாடு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. சாலையில் வெளியே தெரியும் மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களைகளைய பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்.
    • மாற்றுத்திறனாளிகள் வீடு கட்டுவதற்கு வீட்டுக்கடன் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

    பல்வேறு அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களைகளைய பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் ஜூலை 8 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை வட்டார வளர்ச்சி அலுவலகம், காஞ்சிபுரம். 9 ம் தேதி சனிக்கிழமை - வட்டார வளர்ச்சி அலுவலகம், வாலாஜாபாத். 11 ம் தேதி திங்கட்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகம், உத்திரமேரூர். 12ம் தேதி செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகம், குன்றத்தூர்.13 ம் தேதி புதன்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகம், திருப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் தொடர் முகாம்கள் நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள், UDID Smart Card பெற விண்ணப்பிக்க தவறியவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    மருத்துவர்களால் மருத்துவச்சான்று, உதவித்தொகை, வங்கிக்கடன், உதவி உபகரணங்கள், ஆவின் பால் முகவர், வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பற்றோர்களுக்கான உதவித்தொகை பதிவு, மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு PMEGP, UYEGP, NEEDS போன்ற திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம்.

    மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக NHFDC திட்டத்தின் கீழ் கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடு கட்டுவதற்கு வீட்டுக்கடன் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

    முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பதிவு மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு அலிம்கோ ஒன்றிய அரசின் திட்டங்கள் வாயிலாக, உபகரணங்கள் பெறுவதற்கும் வருமானசான்று வருவாய்துறையின் வாயிலாக வழங்கப்படும்.

    மேலும் இம்முகாமில் வருவாய்துறை, மருத்துவத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், பள்ளி கல்வித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், போக்குவரத்துத்துறை, ELCOT (ஆதார் அட்டை), முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் போன்ற பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் நலத்திட்டங்கள் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படும்.

    இம்முகாமிற்கு வரும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தேசிய அடையாள அட்டை, UDID Smart Card, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, புகைப்படம் - 4 ஆகிய அனைத்து ஆவணங்களுடன் அசல் மற்றும் நகலுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×