என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்ட 16 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
- எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர், அம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டனர்.
- புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட சுகாதாரமற்ற தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தியால் பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ளது குருவிமலை ஊராட்சி. இங்குள்ள எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர், அம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டனர்.
இதில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் அவரது மகன் குமாரும் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரும் பலியாகி உள்ளார்.
வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட ஹரிஷ், விஜயகுமார், துரை, பாவா, குமார், சுப்பிரமணி, மலர், கீர்த்தனா, உஷா, சுஜாதா, முருகன், ஜீவதர்ஷினி, நிஷாந்த், ஜானகிராமன் உள்ளிட்ட 16 பேர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட சுகாதாரமற்ற தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தியால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதையடுத்து அந்த தண்ணீர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






