என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை முக கவசம் அணியாமல் வந்த 8 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல் முறை முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.100 அபராதமும், அதே நபர் 2-ம் முறை முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதமும், 3-வது முறையாக அணியாமல் வந்தால் அவர் கைது நடவடிக்கைக்கு உள்ளாவார் எனவும் மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு முக கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்து வருகிறார்கள்.

    ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை முக கவசம் அணியாமல் வந்த 8 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோடு சங்குநகர் பிரிவு அருகே ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் காவலாளி இல்லை. சி.சி.டி.வி. கேமரா மூலமே கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், ஏ.டி.எம்.மில் பணம் வரும் முகப்பு பகுதியை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை யடிக்க முயன்றார்.

    அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வசதி மூலம், வங்கி ஊழியர்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகள் (அலர்ட் மெசேஜ்) செல்போன் மூலம் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியரான ஈரோடு சூரம்பட்டி மாரப்பா 2-வது வீதியை சேர்ந்த சுரேஷ் (வயது 39), ஈரோடு மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், ஈரோடு திண்டல் வள்ளியம்மை நகரை சேர்ந்த கார்த்தி (21) என்பதும், அவர் பகுதிநேர கார் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. பின்னர் வங்கி ஊழியர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.
    சத்தியமங்கலத்தில் நகை கடை உரிமையாளர் வீட்டு கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் சிராஜுல்லா (வயது 53). இவர் ரங்கசமுத்திரம் பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். சிராஜுல்லா உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக குடும்பத்துடன் நேற்று முன்தினம் மதியம் கோவைக்கு சென்றுவிட்டார்.

    நேற்று காலை அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடந்தது. ஆனால் பூட்டு அப்படியே இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களும் திறந்திருந்தது. பீரோக்களில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோக்களை பார்த்தபோது அவற்றில் இருந்த 6½ பவுன் நகை, ரூ.9 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை.

    இதுகுறித்து சிராஜுல்லா சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ‘வீடு பூட்டப்பட்டு கிடப்பதை யாரோ மர்மநபர்கள் நேற்று முன்தினம் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் வீட்டு கதவை கடப்பாரையால் உடைத்து திறந்துள்ளனர். அதன்பின்னர் உள்ளே சென்று பீரோக்களை உடைத்து திறந்து, அவற்றில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    அதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்’ என்பது தெரியவந்தது. மேலும் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் சென்று அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    குண்டேரிப்பள்ளம் அணையில் 2 தடுப்பணைகள் கட்டும் பணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
    டி.என்.பாளையம்:

    கோபி அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. பொதுப்பணித்துறை சார்பில் இந்த அணையின் உபரி நீர் செல்லும் வழியில் 2 இடங்களில் ரூ.5 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்படுகிறது. இதில் கொங்கர்பாளையத்தில் ரூ.3 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது. இந்த பணி 90 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில், பள்ளிக் கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சருடன் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இருந்தனர்.
    வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோடு வந்த 550 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார்
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாநகர் பகுதியில் வளையக்கார வீதி, அகத்தியர் வீதி, கண்ணகி வீதி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அங்கிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு இ-பாஸ் பெற்று வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நேரடியாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு இவர்களுக்கு ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றால் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். தொற்று உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறும்போது, ‘சென்னையில் இருந்து வந்த சிலர் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் சம்பத் நகர் பகுதியில் 2½ வயது குழந்தைக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த குழந்தையின் வீடு உள்பட 7 வீடுகளில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில் பால், மளிகை, பழக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

    மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 550 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும்’ என்றார்.
    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு தென்றல்நகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது சிலர் வட்டமாக அமர்ந்து சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள், ஈரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஹரிஹரகோகுல் (வயது 24), பெரியசேமூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29), முனிசிபல் காலனியை சேர்ந்த ரமேஷ்குமார் (50), ஈ.பி.பி. நகரை சேர்ந்த ஆனந்தன் (35), கே.ஏ.எஸ்.நகரை சேர்ந்த சேட்டு (42), வீரப்பன்சத்திரம் தெப்பகுளம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (37), சத்யா வீதியை சேர்ந்த குமரன் (31) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.450 பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு மாவட்ட எல்லைக்குள் வரும் பிற மண்டல வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னர் உரிய இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக கொரோனா பரவல் தொடங்கி உள்ளது. தினசரி யாராவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சமீபகாலமாக சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வெளியூர் வாகனங்களை முழுமையாக கண்காணிக்க கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி மாவட்ட எல்லை சோதனை சாவடிகள் அதிக போலீசாருடன் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    மாவட்ட எல்லைக்குள் வரும் பிற மண்டல வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னர் உரிய இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனை சாவடியில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    ஈரோட்டில் நேற்று இந்த பகுதி முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு சம்பத்நகர் பகுதியில் 2½ வயது ஆண் குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழந்தை தற்போது பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறது. இதற்கிடையே சம்பத்நகரில் குறிப்பிட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

    நேற்று இந்த பகுதி முழுவதும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வீதியில் உள்ள வீடுகளில் வசித்து வருபவர்களுக்கு சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இதுபோல் அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. இந்த பணிகளை ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ பார்வையிட்டார்.
    கோபி பகுதியில் 23-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
    கடத்தூர்:

    கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கோபி, மாக்கினாம்கோம்பை துணை மின்நிலையங்களில் வருகிற 23-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதனால் கோபி பஸ் நிலைய பகுதி, மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சக்கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன்கோயில், நாகதேவன்பாளையம், கொரவம்பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சைகோபி, உடையாம்பாளையம், காசிபாளையம், சிங்கிரிபாளையம், அ.கொடிவேரி, மணியகாரன்பாளையம், மாக்கினாம்கோம்பை, இண்டியம்பாளையம், கொத்துக்காடு, அரசூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவல் கோபி மின்பகிர்மான வட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    பவானிசாகர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியானார்கள். அவர்களின் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தார்கள்.
    கோவை மாவட்டம் அன்னூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் முகுந்தராஜ். இவருடைய மகன் பிரனேஷ் (வயது 20). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் யஸ்வந்த் (20). கோவையில் உள்ள ஒரு பார்மசி கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    மாதேஸ் என்பவரின் மகன் கதிரேசன் (20). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டும், துரைசாமி என்பவரின் மகன் ரகுராம் (20). கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டும், அன்னூர் தெலுங்குபாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் சுரேஷ்ராஜ் (20) கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டும் படித்து வந்தார்கள்.

    பிரனேஷ், யஸ்வந்த், கதிரேசன், ரகுராம், சுரேஷ்ராஜ் இவர்கள் 5 பேரும் நண்பர்கள். தற்போது கொரோனா காரணமாக கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே இருந்த 5 பேரும் நேற்று காலை ஒன்றாக சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணைக்கு செல்ல விரும்பினார்கள்.

    அதன்படி நேற்று காலை 3 மோட்டார் சைக்கிள்களில் 5 பேரும் பவானிசாகருக்கு வந்து சேர்ந்தார்கள். பின்னர் அணை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றி பொழுதை கழித்த அவர்கள், மதியம் 12 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியான சித்தன்குட்டைக்கு வந்தார்கள்.

    கரையில் உட்கார்ந்து அணையை ரசித்த அவர்களுக்கு அணையின் நீர்த்தேக்கத்தில் இறங்கி குளிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இதில் சுரேஷ்ராஜ் மட்டும்தான் குளிக்க வரவில்லை என்று கரையிலேயே உட்கார்ந்து கொண்டார்.

    இதனைதொடர்ந்து பிரனேஷ், யஸ்வந்த், கதிரேசன், ரகுராம் 4 பேரும் நீர்த்தேக்க பகுதியில் இறங்கி குளிக்க தொடங்கினார்கள். அப்போது அவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. மேலும் அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் 4 பேரும் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்கள்.

    கைகளை ஆட்டியபடி அவர்கள் தண்ணீரில் மூழ்குவதை பார்த்தை சுரேஷ்ராஜ் பதறிப்போய் ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று அபயக்குரல் எழுப்பினார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் 4 மாணவர்களையும் காப்பாற்ற முடியவில்லை.

    சுரேஷ்ராஜ் உடனே பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பிறகு சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சித்தன்குட்டைக்கு விரைந்து வந்தார்கள்.

    அதன்பின்னர் அந்த பகுதி வாலிபர்கள் சிலரை உதவிக்கு வைத்துக்கொண்டு ஆற்றில் இறங்கி தேடினார்கள். மாலை 3.30 மணி அளவில் 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 மாணவர்களின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்குள் மாணவர்களின் பெற்றோர்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அலறியபடி வந்தார்கள். அவர்கள் தங்களின் மகன்களின் உடல்களை பார்த்து கதறி துடித்தது காண்போரையும் கண்கலங்க செய்தது.
    அம்மாபேட்டையில் முககவசம் அணியாத 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் எம்.சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி ஆகியோரது தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அம்மாபேட்டை போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வாகனங்களில் மற்றும் நடந்து வந்த சுமார் 50 பேருக்கு தலா ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல் பெருந்துறை நகரில் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட வடக்கு பகுதியில் இயங்கி வரும் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பால் விற்பனை கடைகளில் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கி செல்வதாக புகார் எழுந்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட குன்னத்தூர் ரோடு பகுதிக்கு நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அறிவுரை கூறினர். மேலும் இனிமேல் முக கவசம் அணியாமல் கடைகளுக்கு வரும் நபர்களிடம் வியாபாரம் செய்யக்கூடாது என்றும், அதை மீறி வியாபாரம் செய்தால் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என்றும் கடை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
    ஈரோடு அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சுத்தானந்தன் நகரை சேர்ந்தவர் ஜீவா (வயது 66). இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு காவிரி ரோடு நாராயணா வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, ஜீவா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜீவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஜீவா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தியதாக ஆட்டோ டிரைவர் பழனிசாமியை கைது செய்தனர்.
    ×