search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு பழையபாளையத்தில் உடைக்கப்பட்ட ஏ.டி.எம்.எந்திரத்தை படத்தில் காணலாம்.
    X
    ஈரோடு பழையபாளையத்தில் உடைக்கப்பட்ட ஏ.டி.எம்.எந்திரத்தை படத்தில் காணலாம்.

    ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - கார் டிரைவர் கைது

    ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோடு சங்குநகர் பிரிவு அருகே ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் காவலாளி இல்லை. சி.சி.டி.வி. கேமரா மூலமே கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், ஏ.டி.எம்.மில் பணம் வரும் முகப்பு பகுதியை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை யடிக்க முயன்றார்.

    அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வசதி மூலம், வங்கி ஊழியர்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகள் (அலர்ட் மெசேஜ்) செல்போன் மூலம் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியரான ஈரோடு சூரம்பட்டி மாரப்பா 2-வது வீதியை சேர்ந்த சுரேஷ் (வயது 39), ஈரோடு மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், ஈரோடு திண்டல் வள்ளியம்மை நகரை சேர்ந்த கார்த்தி (21) என்பதும், அவர் பகுதிநேர கார் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. பின்னர் வங்கி ஊழியர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.
    Next Story
    ×