என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பங்கு சந்தை அதிபர் திடீர் மாயனார். இதுதொடர்பாக மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு, பெரியசேமூர், எல்லப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 37). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரவிக்குமார் கடந்த ஒன்றை வருடமாக பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் பங்குச்சந்தை நிறுவனத்தில் திடீர் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டார். ரவிக்குமாருக்கு அவரது மனைவி புவனேஸ்வரி ஆறுதல் கூறி வந்தார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ரவிக்குமார் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்பி சென்றார். மதியம் புவனேஸ்வரி ரவிக்குமாருக்கு போன் செய்து சாப்பிட அழைத்துள்ளார். அதற்கு ரவிக்குமார் நான் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறியுள்ளார்.

    ஆனால் மாலை வரை அவர் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் மாலை மீண்டும் புவனேஸ்வரி ரவிக்குமாருக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் அணைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து புவனேஸ்வரி கணவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். ஆனால் கணவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலை யத்தில் புவனேஸ்வரி புகார் செய்தார். அதில் மாயமான தனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே தலையில் கல்லைபோட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு-கனகபுரம் சாலையின் இடைப்பட்ட மட காட்டுத்தோட்டம் என்னும் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அங்குள்ள ஒரு தோட்டத்தில் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாகக் கிடந்தார். அவர் தலையில் பலத்த காயங்கள் இருந்தன.

    பெருந்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் சென்னிமலை அடுத்த ராக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 40) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் செல்வராஜை மர்மநபர்கள் யாரோ தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. செல்வராஜ் எந்த காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார் ? என்ற காரணம் தெரியவில்லை. செல்வராசை வேறு எங்காவது கொலை செய்து விட்டு தோட்டத்தில் வந்து வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலை குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    சத்தியமங்கலத்தில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்ய முயன்ற இந்து முன்னணியினர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    கொரோனா தாக்கம் காரணமாக இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

    அதன்படி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் விநாயகர் சிலையை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மக்கள் வீடுகளில் எளிய முறையில் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம் எனவும் அரசு அறிவித்திருந்தது. ஆனால் தடையை மீறி பொது இடங்களில் வைத்து வழிபடுவோம் என ஒரு சில அமைப்புகள் தெரிவித்திருந்தன. இதையடுத்து அந்தந்த மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ஒரு சில இடங்களில் போலீசார் எச்சரிக்கையையும் மீறி பொது இடங்களில் சிலையை வைத்து வழிபட முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தினர். தடையை மீறி சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

    சத்தியமங்கலத்தில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்ய முயன்ற இந்து முன்னணியினர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கோபி பஸ் நிலையம் அருகே தடையை மீறி விநாயகர் சிலையை எடுத்து சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நம்பியூர் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகிகள் 5 பேரும், திங்களூரில் ஒருவரும், வீரப்பன் சத்திரத்தில் ஒருவரும், புஞ்சை புளியம்பட்டியில் 7-க்கும் மேற்பட்டவர்களும், வரப்பாளையம் பகுதியில் 5 பேரும் என மாவட்டம் முழுவதும் 31 பேருக்கு மேற்பட்டவர்கள் மீது தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை கொண்டு செல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களிடம் இருந்து விநாயகர் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரம் ஈரோடு மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தனியார் இடங்களில் நிர்வாகிகள் விநாயகர் சிலையை வைத்து எளிய முறையில் வழிபட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஆற்றில் சென்று கரைக்கப்பட்டன.
    ஈரோடு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சிந்தன்நகர் 2-வது தெருவை சேர்ந் தவர் பிரவீன் (வயது20). இந்நிலையில் நேற்று பிரவீன் வீட்டில் உள்ள தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் பிரவீன் பெற்றோர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை. 

    இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக சென்று பார்த்த போது பிரவீன் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறைக்குள் சென்று பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரவீன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோபி:

    கோபி அருகே உள்ள புது கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஹரிவாசன் (வயது 8). இவன் இண்டியம் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். இந்த நிலையில் ஹரிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தான். மேலும் வாந்தி எடுத்து கொண்டு இருந்தான்.

    இதையடுத்து ஹரி வாசனை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உள்பட 847 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் நாளை (12-ந் தேதி) கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உள்பட 847 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

    இதற்காக மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின்பு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என மருத்துவக் குழு அறிவித்து உள்ளது.

    எனவ பொதுமக்கள் இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்று 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு அருகே பெயிண்டர் தினமும் மது குடித்து விட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கொன்றதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் மதன் (வயது 29). பெயிண்டர். இவரது பெரியப்பா மகன் மகேஸ்வரன். இவரது மனைவி மஞ்சு (25). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மகேஸ்வரன் தனது குடும்பத்துடன் ஈரோடு சாஸ்திரி நகரில் வசித்து வந்தார். உறவினர் என்பதால் மதன் அண்ணன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இதன் மூலம் மதனுக்கும் மஞ்சுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடை வில் கள்ளக்காதலாக மாறியது. மகேஸ்வரன் வீட்டில் இல்லாதபோது மதனும், மஞ்சுவும் தனிமையில் இருந்து உள்ளனர்.

    இவர்கள் கள்ளகாதல் விவகாரம் மகேஸ்வரனுக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மஞ்சு தனது கணவரை பிரிந்து ஈரோடு இரணியன் வீதியில் கடந்த 2 மாதமாக மதனுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மஞ்சுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மஞ்சு கயிற்றால் மதனை கழுத்தை நெரித்து உள்ளார். பின்னர் மதன் உறவினரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட மஞ்சு குடிபோதையில் வீட்டுக்கு வந்த மதன் மயங்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாகவும் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்குமாறு கூறி உள்ளார்.

    இதையடுத்து மதன் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் மதன் கழுத்தில் காயங்கள் இருந்ததால் இது குறித்து தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மதன் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் மஞ்சுவிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் மஞ்சு தனது கள்ளக்காதலன் ராஜாவுடன் சேர்ந்து மதனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    போலீசாரிடம் மஞ்சு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவருடன் குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தபோது மதன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்தார். இதனால் மதனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. எனது கணவர் வீட்டில் இல்லாதபோது மதன் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார்.

    எங்கள் விவகாரம் எனது கணவருக்கு தெரிந்து விட்டது. இதையடுத்து நான் என கணவரை பிரிந்து மதனுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தேன். மதனுக்கு குடிப்பழக்கமும், கஞ்சா பழக்கமும் உள்ளது. இதையடுத்து அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார். மேலும் பாலியல் தொந்தரவும் கொடுப்பார்.

    இந்நிலையில் மதனின் நண்பர் ராஜா என்பவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். ராஜா எனக்கு ஆறுதலாக இருந்தார். அதனால் அவருடனும் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த வி‌ஷயத்தை தெரிந்து கொண்ட மதன் கடந்த சில நாட்களாக குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார்.இதுகுறித்து ராஜாவிடம் பேசி மதனை கொலை செய்ய முடிவு எடுத்தோம்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மதன் வழக்கம்போல் மது போதையுடன் வீட்டுக்கு வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்கள் 2 பேரும் சேர்ந்து மதன் கழுத்தை நெரித்து கொலை செய்தோம்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து தாலுகா போலீசார் மஞ்சு மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மஞ்சு கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறையிலும், ராஜா ஈரோடு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

    நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலை பவானிசாகர் அணைக்கு 4 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது.

    இதனால் அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலை பவானிசாகர் அணைக்கு 4 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. அணைக்கு வரும் நீர் வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரத்து 37 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.

    அணையின் நீர் மட்டம் 102 அடியாக இருந்தது. காலிங்கராயன் வாய்க்காலுக்கு 496 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 1504 கன அடி என மொத்தம் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது 1,245 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் கொரோனா 2-ம் அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கு மேல் தொடர்ந்து இருந்து வந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    குறிப்பாக கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய கடைவீதிகள் அனைத்தும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக தொடர்ந்து தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திடீரென தினசரி பாதிப்பு உயர்ந்து வருகிறது. நேற்று 4-வது நாளாகவும் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 95 ஆக இருந்தது, அதன்பிறகு 115 ஆக உயர்ந்தது, அதன்பிறகு 117 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் 130 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று 137 ஆக உயர்ந்துள்ளது.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 99 ஆயிரத்து 554 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 124 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 662 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தற்போது 1,245 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த 4 நாட்களாக திடீரென தினசரி பாதிப்பு உயர்ந்துள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக மாவட்டத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது.

    மக்கள் கூட்டம் கூட்டமாக கடை வீதிகளில் சென்று வருகின்றனர். பெரும்பாலான பொதுமக்கள் முககவசம் அணிந்து இருந்தாலும் அவற்றை முறையாக அணிவதில்லை. வாய், மூக்கு தெரியும்படி கழுத்துக்கு கீழ் அணிந்து செல்கின்றனர். அதிகாரிகளை பார்த்தவுடன் முககவசத்தை சரி செய்கின்றனர்.

    இதேபோன்று குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது முககவசம் அணியாமல் அழைத்து செல்கின்றனர். மேலும் ஈரோட்டில் இருந்து தினமும் திருப்பூர், சேலம், கரூர், கோவை போன்ற பகுதிகளுக்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இவர்களும் முறையாக முககவசம் அணிவதில்லை. இன்னும் சிலர் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளோம். நமக்கு ஒன்றும் செய்யாது என்று அலட்சியமாகவும் உள்ளனர்.

    இதுபோன்ற காரணங்களால் தற்போது தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் இந்த வி‌ஷயத்தில் அலட்சியமாக இருக்காமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
    ஈரோடு:

    கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்து வருகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு அதிகமாக இருந்தபோது தடுப்பூசி போடும் மையங்களில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தொற்று அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தினார்கள். மேலும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வழக்கமாக போடப்படும் மையங்களை தவிர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்களிலும் தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்தார்.

    இந்த பணிகள் நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 10 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் முதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி தடையின்றி செலுத்தப்படுகிறது.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் 5 நகர்புற சுகாதார மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 198 இடங்களில் 25 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    வீடுகளில் பழைய பொருட்களில் தண்ணீர் தேங்கி கொள்ளாத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    மழைக்காலம் தொடங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சலை தடுக்க ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுரை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் வெட்டுகாட்டுவலசு என்ற பகுதியில் 6 வயது சிறுமி கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரது ரத்தம் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    கோப்புப்படம்

    இதேபோல் அன்னை சத்யா நகரில் வெளியூரிலிருந்து வந்த பெண் ஒருவரும் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையிலும் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகர நல அலுவலர் முரளி சங்கர் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் வெட்டுக்காட்டுவலசு, அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    மாநகராட்சி சார்பில் 2 இடங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள 400 வீடுகளை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

    தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் பழைய பொருட்களில் தண்ணீர் தேங்கி கொள்ளாத அளவு பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் இருக்கும் குடங்களை மூடி வைத்திருக்க வேண்டும். திறந்தவெளியில் தண்ணீர் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது.

    வெட்டுகட்டு வலசு பகுதியில் சிறுமி ஒருவருக்கும், சத்யா நகரில் பெண் ஒருவருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமாக உள்ளனர். 2 பகுதியிலும் உள்ள 400 வீடுகள் சேர்ந்தவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

    இதில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவுடன் அங்கு மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. மழைக்காலம் நெருங்கி வருவதால் மக்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 250 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது வரை மாவட்டத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    கையிருப்புக்கு தகுந்தார்போல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சித்தோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 185 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 39 இடங்களிலும் என மொத்தம் 224 இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

    மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். குறிப்பாக கல்லூரி மாணவ -மாணவிகள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    நேற்று நடந்த முகாமில் மொத்தம் 31 ஆயிரத்து 250 பேருக்கு டோக்கன் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முகாம் நடந்து வருவதால் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் முகாமுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    ×