search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு வந்த இந்து முன்னணியினர் உள்பட 31 பேர் மீது வழக்கு

    சத்தியமங்கலத்தில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்ய முயன்ற இந்து முன்னணியினர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    கொரோனா தாக்கம் காரணமாக இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

    அதன்படி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் விநாயகர் சிலையை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மக்கள் வீடுகளில் எளிய முறையில் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம் எனவும் அரசு அறிவித்திருந்தது. ஆனால் தடையை மீறி பொது இடங்களில் வைத்து வழிபடுவோம் என ஒரு சில அமைப்புகள் தெரிவித்திருந்தன. இதையடுத்து அந்தந்த மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ஒரு சில இடங்களில் போலீசார் எச்சரிக்கையையும் மீறி பொது இடங்களில் சிலையை வைத்து வழிபட முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தினர். தடையை மீறி சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

    சத்தியமங்கலத்தில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்ய முயன்ற இந்து முன்னணியினர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கோபி பஸ் நிலையம் அருகே தடையை மீறி விநாயகர் சிலையை எடுத்து சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நம்பியூர் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகிகள் 5 பேரும், திங்களூரில் ஒருவரும், வீரப்பன் சத்திரத்தில் ஒருவரும், புஞ்சை புளியம்பட்டியில் 7-க்கும் மேற்பட்டவர்களும், வரப்பாளையம் பகுதியில் 5 பேரும் என மாவட்டம் முழுவதும் 31 பேருக்கு மேற்பட்டவர்கள் மீது தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை கொண்டு செல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களிடம் இருந்து விநாயகர் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரம் ஈரோடு மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தனியார் இடங்களில் நிர்வாகிகள் விநாயகர் சிலையை வைத்து எளிய முறையில் வழிபட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஆற்றில் சென்று கரைக்கப்பட்டன.
    Next Story
    ×