என் மலர்
ஈரோடு
பெருந்துறை:
அரியலூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவரது மனைவி சகாயச்செல்வி (25). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வினில்குமார் (4) என்ற மகனும், மாளவிகா (1) என்ற மகளும் இருந்தனர்.
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுபுதூர் பகுதியில் ரமேஷ் தனது குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார். ரமேஷ் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சகாயச் செல்வி 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ரமேஷ் குடும்ப செலவுக்கு சரியாக பணம் தருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் கணவன- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ரமேஷ், சகாயச் செல்வியை திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து ரமேஷ் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். கணவர் திட்டியதால் மன வருத்தத்தில் இருந்த சகாயச்செல்வி தனது குழந்தைகள் வினில்குமார், மாளவிகா ஆயோரை அழைத்து கொண்டு வீட்டு அருகே உள்ள கிணற்று பகுதிக்கு சென்றார்.
60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தனது 2 குழந்தைகளை வீசி விட்டு சகாயச்செல்வியும் குதித்தார். இதில் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். ஆனால் சகாயச் செல்வி தட்டுதடுமாறி கிணற்றின் படிகட்டுகளை பிடித்து உயிர் தப்பினார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி காயங்களுடன் மயங்கி கிடந்த சகாயச்செல்வியை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வினில்குமார், மாளவிகா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சகாயச் செல்வியை போலீசார் கைது செய்து கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் சாலையில் ஏராளமான நகை கடைகள், துணி கடைகள் செயல்பட்டு வருகின்றன. எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த சாலையில் ஆள் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கும்.
இந்த பகுதியில் பத்ரிநாதன் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இந்த கடையில் வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையின் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றார்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் 3 வாலிபர்கள் நகை கடையில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு வந்துள்ளனர். அவர்கள் நகை கடையின் பக்கவாட்டு சுவரில் டிரில்லர் மூலம் துளை போட்டு கொண்டிருந்தனர்.
டிரில்லர் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது நகை கடையில் 3 வாலிபர்கள் துளை போட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் திருடன் திருடன் என சத்தம் போட்டனர்.
இதையடுத்து மர்ம நபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் இதுகுறித்து நகை கடையின் உரிமையாளர் பத்ரிநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது நகை கடையின் பக்கவாட்டு சுவரில் ஒரு ஆள் உள்ளே செல்லும் அளவுக்கு துளை போடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வெளியே வந்ததால் நகை கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பியது தெரிய வந்தது.
மேலும் கொள்ளை முயற்சி நடந்த நகை கடையில் காவலாளி நியமிக்கப்படவில்லை. ஆனால் கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கேமராக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது 3 வாலிபர்கள் கொள்ளையடிக்க வந்தது பதிவாகி இருந்தது. மேலும் அவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
கொள்ளை முயற்சி நடந்த நகை கடைக்கு துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
போலீசார் அந்த பகுதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி கொள்ளையர்கள் எந்த வழியாக தப்பி சென்றனர் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






