search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck Overturns"

    • செங்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது அதிக லோடு காரணமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
    • தண்டவாளத்தில் நொறுங்கி கிடந்த லாரியை துரிதமாக செயல்பட்டு 3 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக முழுவதுமாக அப்புறப்படுத்தினர்.

    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மைலப்புரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 43). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு லாரியில் மணிகண்டன் புறப்பட்டார். கிளீனராக சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணியை சேர்ந்த பெருமாள்(28) என்பவர் லாரியில் உடன் வந்தார். இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் தமிழக-கேரளா எல்லை பகுதியான செங்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது அதிக லோடு காரணமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சாலையோர பள்ளத்தில் இருக்கும் ரெயில்வே தண்டவாளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தின்போது கிளீனர் பெருமாள் லாரியில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். அதே நேரத்தில் விபத்தில் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தை பார்த்து அப்பகுதியில் வசிக்கும் முதிய தம்பதியான சண்முகையா(66)-வடக்கத்தி அம்மாள்(60) ஆகியோர் அங்கே விரைந்து வந்தனர். மேலும் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் சுப்பிரமணியன் என்பவரும் அங்கு வந்தார். இதற்கிடையே திருவனந்தபுரம் பகவதியம்மன் கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு புனலூர் நோக்கி செங்கோட்டையில் இருந்து சிறப்பு ரெயில் ஒன்று நள்ளிரவு 12.50 மணியளவில் புறப்பட்டு சென்றது.

    அந்த ரெயில் லாரி விபத்து நடந்த பகுதி வழியாக வந்து கொண்டிருந்தது. இதனை அறிந்த முதிய தம்பதி, உடனடியாக லாரி விபத்து நடந்த இடத்திற்கு சற்று முன்பாக ஓடிச்சென்று சிவப்புநிற துணியை டார்ச் லைட்டில் சுற்றி ரெயிலை நோக்கி ஒளிரச்செய்தனர். இதையடுத்து ரெயில் டிரைவர் என்ஜினை நிறுத்தினார். இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து இருப்புபாதை பராமரிப்பு பொறியாளர் ஞானசுந்தரம், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கற்பக விநாயகம், மாரிமுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், தலைமை காவலர்கள் நாகராஜ், மாரிதுரை ஆகியோர் விரைந்து வந்தனர். லாரியின் இடிபாட்டுக்குள் சிக்கியிருந்த மணிகண்டனின் உடலை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் தண்டவாளத்தில் நொறுங்கி கிடந்த லாரியை துரிதமாக செயல்பட்டு 3 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக முழுவதுமாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் வழக்கம்போல் அந்த வழித்தடத்தில் ரெயில்கள் புறப்பட்டு சென்றன. பெரும் விபத்தை தவிர்க்க சாமர்த்தியமாக செயல்பட்ட முதிய தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர். 

    ×