என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்தானதில் தேர் பாதுகாப்பு கூண்டு சேதமடைந்தது.
சென்னிமலையில் லாரி கவிழ்ந்து விபத்து
சென்னிமலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கர்நாடக மாநிலம், பெல்லாரி அடுத்துள்ள குருகோடு பகுதியில் இருந்து 25டன் நெல்மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி காங்கேயம் நோக்கி சென்றது.
லாரியை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்துள்ள முத்தம்பட்டியை சேர்ந்த மணிவாசகம் (37) என்பவர் ஓட்டிவந்தார். அவருடன் மாற்று டிரைவரான கோவிந்தராஜ் (40) என்பவரும் வந்தார்.
இன்றுஅதிகாலை 1.30மணி அளவில் லாரி சென்னிமலை வடக்கு ராஜ வீதியில் இருந்து கிழக்கு ராஜவீதிக்கு திரும்பியது. அப்போது நிலை தடுமாறிய லாரி கவிழ்ந்து விபத்தானது. அதிகாலை நேரம் என்பதால் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் கோவிந்தராஜ்க்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த லாரி இன்னும் ஒரு அடி தூரம் சென்று விழுந்த இருந்தால் சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திரதிருதேர் பெரியசேதம் ஆகிஇருக்கும்.
தற்போது தேரின் பாதுகாப்பு கூண்டு மட்டும் சேதம் ஆகிவிட்டது. அதில் இரும்பு ஆங்கிள் இருந்ததால் தேர் தப்பித்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக கோவில் பணியாளர்கள் விரைந்து வந்தனர். போலீசாரும் விரைந்தனர்.
லாரி உரிமையாளர் சிவராஜ் என்பவர் நேரில் வந்தார். அவர் சென்னிமலை முருகன் கோவில் பங்குனி திருத்தேரின் கூண்டு சேதமடைந்த பகுதியினை தனது சொந்த செலவில் சரிசெய்து தர சம்மதம் தெரிவித்தார். இதனால் சென்னிமலை முருகன் கோவில் பணியாளர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.
இந்த இடத்தில் கடந்த 2016-ம் வருடத்தில் பருத்தி பஞ்சு ஏற்றி கொண்டு வந்த 4 லாரிகள் விபத்தானது. இதேபோல் 2017-ம் ஆண்டு மூன்று விபத்துகளும், 2018-ம் ஆண்டு ஒரு விபத்தும், 2019, 2020, 2021 ஆகிய வருடங்களில் இந்த இடத்தில் விபத்து இல்லை. தற்போது 2022-ம் வருடம் விபத்து நடந்துள்ளது.
இந்த குறுகிய வளைவில் அதிக பாரத்துடன் வரும் லாரிகள் திடீர் என திரும்ப முடியாமல் திரும்பி உடனடியாக பிரேக் போடுவதால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி விடுகிறது. இதுவரை இந்த இடத்தில் நடந்த எந்த விபத்திலும் ஏதும் உயிர்சேதம் இல்லை.
இந்த இடத்தில் இப்படி அடிக்கடி இதேபோல் லாரி கவிழ்வது தொடர்கிறது. அடிக்கடி செல்லும் வழக்கமான டிரைவர்கள் லாரி ஓட்டினால் விபத்து நடப்பது இல்லை. புதிய டிரைவர் வந்தால் இதுபோல் லாரியினை கவிழ்ப்பது மற்றும் தேர்நிலை மீது மோதி சேதம் ஏற்படுத்துவதும் வாடிக்கை ஆகிவிட்டது.
இந்த விபத்துடன் இதுவரை ஒன்பது விபத்து ஒரேமாதிரி நடந்துள்ளது. இனியாவது விபத்தினை தடுக்க இந்த இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வடக்கு ராஜ வீதியில் வேகத்தினை கட்டுப்படுத்த ரப்பர் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






